|
|
|
| மரணத்திற்கு பின்னாலொரு ஞாயிற்றுக்கிழமை |
| -இரா. கருணாநிதி , submitted on
07-Apr-05 01:08:13 AM, 1341 Hits |
எங்கள் ஊர் முழுவதும் குட்டிச் சுவராகத் தெரிகிறது. அதன் மேல் கடலின் அலைகள் காய்ந்த மண்ணின் மேல் நீர் பட்டு விலகி ஓடுவது போல விலகி மீண்டும் சேர்கிறது. இவ்வலை கண்ணுக்கெட்டிய தூரம்வரைத்தெரிகிறது. சாதாரண மனநிலையைக் குறிக்கும் மஞ்சள் வெயிலும் இல்லை. இருட்டும் இல்லை. குண்டு வீசுவதற்காக விமானங்களுக்கு அமெரிக்க செயற்கைக்கோள்கள் அனுப்பும் படங்கள் போன்று சதுரம் சதுரமான குட்டிச்சுவராகவும் தெளிவற்றதாகவும், அதிர்வுறுவதாகவும் இருந்தது. கடலின் அலைகள் பிரியும் போது அதன் அடர்த்தியான நீலத்தின் அளவு வேறுபட்டது.
திடுக்கிட்டு எழுந்து ஜன்னல் வழியே பார்த்தேன். சூரியன் தூரத்தில் தென்னை மரத்திற்கு இடையே மறைந்து கொண்டிருந்தது வெளியே வந்து மாடிப் படிக்கட்டருகே உட்கார்ந்தேன். நான் எப்போதும் பயம் அல்லது வருத்தத்தின் போதுதான் இங்கு உட்காருவேன். நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த கனவு வந்திருந்தது. சிறுவயதில் மழைக்கால இரவுகளில் மழை பெய்யும் பின்னணியில் வரும் அதே கனவு. அப்போது திடுக்கிட்டு எழுந்தால் அம்மாவின் மஞ்சள் பூசிய தாலிக்கயிற்றின் வாசனைதான் அந்த கனவிலிருந்து பிரிக்கும். என்னிடமிருந்த நீண்ட பெருமூச்சொன்று வெளி வந்தது.
கனத்த மனதுடன் எழுந்தேன். சூரியனின் ஒளி மறைந்து மங்கலாக இருந்தது. மெதுவாக நடந்து வீதியை அடைந்தேன். மனித நடமாட்டமேயில்லை. கிழக்கு வீதியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். திரும்பி செல்ல வேண்டும் என்ற எண்ணம் மூளையில் தொடர்ச்சியாக இல்லை. கிழக்கு வீதியிலிருந்து மந்தைவெளிக்கு வந்து விட்டேன். அந்த இருட்டில் மரங்கள் நிழல் ஓவியங்களாக தெரிந்தன. பிள்ளையார் கோயில் ஆலமரமும் ஏரிக்கரை மரங்களும் பெரிய உருவங்களாய் தெரிந்தன. வடகிழக்கு மேட்டில் தூரத்தில் காளியம்மன் கோயில் விளக்கெரிந்தது. பின்னால் தீர்த்தமலை பிரம்மாண்டமாகத் தெரிந்தது. சுடுகாட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
சுடுகாட்டினருகே குட்டையொன்றுள்ளது. முந்நூறு வருட வரலாறேயுடைய அந்த கிராமத்தில் காடுகளின் எச்சங்களும், வெப்ப மண்டல காடுகளுக்கேயுரிய வண்டுகளின் சத்தமும் நிறைந்திருந்தது. மேடும் பள்ளமுமாக பாறைகளும் குறிஞ்சி மரக்கூட்டங்களும் இருந்தன. சுடுகாட்டின் நுழைவுப் பகுதியருகே வந்தவுடன் நின்றேன். அருகிலிருந்த புளியமரம் அசையாமலிருந்து அதனடியில் உள்ள பாறையின் மேல் பலர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். குளிருடன் பயமும் உடலை ஊடுறுவியது.
நான் பள்ளமான பகுதியை நோக்கி மெதுவாக நடந்தேன். பள்ளமான அந்த இடத்தையடைந்தவுடன் நின்றேன். மரக்கூட்டமிருந்தும் வண்டுகளின் சத்தமிங்குயில்லை. அமைதியான சூழல் இறுக்கத்தை ஏற்படுத்தியது. தூரத்தில் உருவமொன்று தெரிந்தது. உற்று நோக்கினேன். அவ்வுருவம் காற்றில் தவழ்ந்து வந்தது. அது பள்ளத்தின் அருகேயுள்ள மேட்டின் மேல் தவழ்ந்து நின்றது. அதன் கால்கள் தரையிலிருந்து நான்கடி உயரத்திலிருந்தது. நிலா வெளிச்சத்தில் உருவம் கருப்பு வெள்ளையாக தெரிந்தது. முகம் இருட்டாகத் தெரிந்தது. அது அணிந்திருந்த அங்கி கால்வரைத் தொங்கி மெல்லியக் காற்றில் அங்குமிங்கும் அலைந்தது.
யார் நீ? என் குரல் அரைகுறையாக வெளிவந்தது. அது சிரித்தது. பயம் அழுத்தப்பட்ட காற்றாக நெஞ்சிலிருந்து மேலேறியது. எச்சிலை விழுங்கிக் கொண்டேன். நான் திப்பு சுல்தானின் படையைச் சேர்ந்த ஒரு தளபதி . என் பெயர் பூர்ணய்யா. செங்கத்திற்கு போரிட சென்ற போது துரோகிகள் சிலர் என்னை கொன்று இங்கே புதைத்தார்கள். அப்போது இந்தப் பகுதி காடாக இருந்தது. அமைதி நிலவியது. அது மேட்டிற்கும் பள்ளத்திற்கும் இடையே மீண்டும் மீண்டும் சென்று வந்தது.
"ஏன் இங்கு அலைகிறாய்?" என்றேன்.
இறந்து விட்டேன் நான். ஆனால் இறந்த பிறகு எங்கு போக வேண்டுமென்று புரியவில்லை எல்லா பொழுதும் ஒன்று போலுள்ளது. நான் இறந்தவர்களையெல்லாம் எங்கே சென்று பார்க்க முடியும்? மேகக் கூட்டம் அடிக்கடி நிலவைக் கடந்து சென்றது.
`நேற்று ஒரு பெண் பிணத்தைப் புதைத்தார்கள், யாரவள்?' "அவள் நடத்தை கெட்டவள்" என்றேன். அது சிரித்தது. பள்ளத்தை விட்டு ஏற முற்பட்டேன். வழுக்கியது. சிறிது நேரப் போராட்டத்திற்கு பிறகு ஏறி திரும்பிப்பார்த்த போது அது பள்ளத்தின் நடுவில் மிதந்தது. நான் பல பெண்களுடன் பழகினேன். அரச குடும்பத்து பெண்களுடன் கூட. அப்போது என் வாழ்க்கை உல்லாசம், போர், கொள்ளையடிப்பதிலேயே கழிந்தது. வாழ்வு முறையைப்பற்றி கவலைப்பட்டதில்லை. ஏனென்றால் முடிவு ஒன்றாகவேயிருந்தது.
"திப்பு சுல்தானை பற்றி படித்திருக்கிறேன். அவர் எப்படி இறந்தார்?"
தலையை வானத்தை நோக்கி திருப்பிக் கொண்டது. "போரில், அவரால் எல்லா நேரத்திலும் சரியாக செயல்பட முடியவில்லை. அவருக்குப் பல தடைகள் இருந்தது. ஒவ்வொருவரும் தம் சிந்தாந்தங்களுக்காகவே போராடுகின்றனர். நிரூபிப்பதற்காக காலமும் தூரமும் முடிவுற்றுள்ளது. எந்த திசையில் சென்றாலும் பயணத்தின் கண்ணுக்கெட்டிய விளிம்பை அடைவதற்கு முன்பே மறந்து விடுகிறார்கள்.
அதன் பேச்சு எனக்கு குழப்பமாக இருந்தது.
"நான் இருந்த காலத்தில் நவாப் படையைச் சேர்ந்த சிலரின் பொழுது போக்கு அப்பாவி கிராமவாசிகளை கத்தி வீசிக் கொல்வதுதான். நாங்கள் ஒரு முறை எதிரிகளுடைய மூக்கை அறுத்து மூட்டைகட்டிக் கொண்டு வந்தோம்.
திப்பு சுல்தான் மக்கள் புரட்சியை ஆதரித்தாரா?
அதைப்பற்றி எனக்கு தெரியாது. ஒரு முறை நான் பிரான்ஸிலிருந்தது வாங்கி வந்த பிரெஞ்சு புரட்சிய பற்றிய புத்தகங்களை ஆர்வமுடன் படித்தார். அவர் விவசாயிகளுக்கு சலுகை அளித்தார். சாதி முரண்பாடுகளை கடுமையாக எதிர்த்தார். அவர் எப்போதும் எளிமையாகவே காணப்பட்டார். பிரெஞ்சு புரட்சியின் தாக்கம் பெரிதென உணர்ந்திருக்கக்கூடும்.
புரட்சியின் புனிதம் எத்தனை உண்மையானதாக இருந்தாலும் அதன் வெற்றி அதிகார கைப்பற்றலில்தான் உள்ளது. அதிகாரம் சொல்வதுதான் உண்மை என மக்கள் நம்புகிறார்கள் என்றேன். அது முகத்தில் வித்தியாசமான நெறிவுடன் என்னை நோக்கி நெருங்கி வர ஆரம்பித்தது. வேகமாக வீசிய குளிர்காற்று அதன் அங்கியை ஒரு பக்கமாக இழுத்தது.
திரும்பி ஒட ஆரம்பித்தேன். அது பெரிதாக சத்தமிட்டுக் கொண்டே பின்னால் பறந்து வந்தது. முடிந்த வரை ஓடினேன். நெஞ்சு முழுவதும் சூடாகி விட்டது. பின்புறம் என் சட்டையை யாரோ இழுப்பது போல தோன்றியது. நான் பறக்க முயற்சித்தேன் முடியவில்லை.
பலம் முழுவதும் சேர்த்து வேகமாக கைகளை அசைத்துப் பறக்க ஆரம்பித்தேன். திரும்பி பார்த்தபோது அது மிகவும் நெருங்கி விட்டது. வேகமாக பறக்க ஆரம்பித்து தலைய முன் திருப்பினேன். அது என்ன கருப்பாய் ஆ! நான் அதை மோதப் போகிறேன்!
திடுக்கிட்டு எழ உடல் முழுவதும் வியார்த்து சில்லிட்டு இருந்தது. தூரத்தில் சிவப்பாய் இரவு விளக்கு எரிவது தெரிந்தது. தாழ்வாரத்தில் மழை நீர் ஊற்றும் சத்தம் மெலிதாக கேட்டது. வெளியே மழை பெய்து கொண்டிருந்தது.
|
|
| |
| Rate this Story (
current rating :
3 / 5 with
330 votes
) |
 |
|
 |
 |
 |
|
|
|
|
|
|
|