|
|
| Interviews
|
|
முழுக்க முழுக்க எனக்காகத்தான் - குட்டி ரேவதி |
குட்டி ரேவதி இரண்டே கவிதைத் தொகுப்புகளின் மூலம் பரவலாக அறியப்பட்ட கவிஞர். இவரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு "முலைகள்" பெண்ணுடல் உறுப்பை படிமமாக கொண்டு கவிதைகள் எழுவது தவறு என்ற மாயை உடைத்தது. பல்வேறு தளங்களில் விவாதங்களை கொழுந்து விட்டு எரியச் செய்தது. சித்த மருத்துவராக இருந்து கொண்டு ஆய்வுகளை செய்து கொண்டிருக்கும் அவரிடம் சில கேள்விகளும், அதற்கான பதில்களும்...
கவிதைன்ன என்ன?
கவிதைங்கிற அதற்கான அவகாசத்தை எடுத்துக் கொண்டு நம்மிடம் தங்கி சீர்மையான முறையில் வெளிக் கொணரப்படுவது. சில சமயம் 3 வார்த்தைகள் சேர்ந்து ஒரு கவிதையும் ஒரு சொல்லே கவிதையாகவும் சில சமயம் எத்தனை சொற்களை போட்டாலும் கவிதையாகமல் இருப்பதும் உண்டு. ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கையில் சீர்மைங்கிறது ரொம்ப முக்கியம். அது குலைந்து போறப்ப நமக்குள் ரொம்ப கலைந்து போறாங்க கலைந்து போனதை சரி செய்வதற்காகதான் சொற்களை அடுக்கி அடுக்கி கட்டி சரி செய்யிறாங்க. நாடகம் போன்ற மற்ற வடிவங்களில் முயற்சி செய்து பார்த்து அதில் எதிலும் திருப்தியாகாமல் கடைசியில் மனம் கவிதையில்தான் நிலைப்படுத்தி நின்றது.
அந்த சீர்மைங்கிறது என்ன?
அது அவரவர் மனம் சார்ந்து எதுவா வேண்டுமானாலும் இருக்கலாம் பணம் சேர்க்குறதாகவோ வேடிக்கை பார்ப்பதாகவோ ஒருவரின் மீதானா அதீத நேசிப்பாகவோ, இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதனதன் இடத்துல அதை அதை வைக்கிற அதோட இதை பொருத்தி பார்க்குறது இது உலகத்துல எல்லா உயிர்களுக்கும் வாய்த்திருக்கு. விலங்குகள், தாவரங்கள் போன்றவற்றிற்கும் கூட இதைப்போன்ற தகுதியும், தேவையும் எல்லா உயிர்களிடமும் இருக்குது.
உங்கள் கவிதைக்கான மொழியை எப்படி அடைந்ததாக உணர்கிறீர்கள்?
மனப்பயிற்சியின் மூலமாகத்தான். எனது தாய்மொழி மராத்தி தெலுங்கு இப்படி எதுவாக இருந்தாலும் இப்போது இருப்பது போன்ற நேர்த்தியான கவிமொழியை அடந்திருப்பேன் என்றுதான் நினைக்கிறேன். சொற்களை பலம் வாய்ந்ததாகவோ, ஆறுதல் தருவதாகவோ கட்டி சீர்மயான முறையில்தான் எனது கவிதைகளை அமைப்பதாக நினைக்கிறேன். நான் சித்த மருத்துவத்தை தேர்ந்தெடுத்ததே அது மொழி சம்பந்தமாக இருப்பதால்தான். சித்த மருத்துவ சொல் அகராதியை எடுத்து பார்த்தீங்கன்னா அதுல இருக்கிற ஒவ்வொரு சொல்லும் மிகவும் பொருள் பொதிந்து இருக்கும், அகழ்வாராய்ச்சி செய்தது போல் இருக்கும். பாடல்கள் பொருளுடன் சந்ததுத்டன் இருக்கும். இதைப்போன்ற மனப்பயிற்சி இருந்தால் கவிமொழி எல்லோர்க்கும் வாய்க்கும். மற்றபடி வேற தளத்துல இயங்குற மற்றவர்களுக்குfம் அந்த சூழலுக்கு ஏற்ப மொழி உண்டாகும்.
உங்களின் கவிதைகள் சமன்பாடுகளாய் இருக்கின்றன. இது எப்படி சாத்தியமானதா?
என்னுடய ஒரு கவிதை கூட எனக்கு ஞாபகத்தில் இருப்பதில்லை. ஆனால் என்னுடய கவிதையை என்னிடம் கொடுத்தால் அது எப்படி உருவான என்று சொல்ல முடியும். எனக்கு இந்த சமன்பாடு போன்ற தொழில் நுட்பங்களில் திறமை கிடையாது. என்னுடய கவிதைகள் எப்போதும் ஒரே மாதிரி இல்லாமல் மாறிக் கொண்டே இருக்கிறது. புதிய முறைகளை முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். முயற்சி செய்யாமல் முடியாது என்று எந்த ஒரு புதிய முறைகளையும் சொல்லி விட முடியாது. உணர்வுகள், மொழி போன்ற நிறைய விசயங்கள் ஒன்றாக கலந்து சொற்களாய் வெளிவரும் வடிவம்தான் கவிதை. பல்வேறு நிறங்கள் ஒன்றோடொன்று கலந்தால் என்ன நிறம் வருமென்று சொல்ல முடியாது. அதுபோலதான் கவிதையும், எந்த எந்த உணர்வுகள் பல்வேறு விசயங்கள் எந்தளவு கலக்குதுங்கிறத பொறுத்துதான் உருவாகும்.
உடல் சார்ந்த படிமங்கள் இருந்த காரணத்தால் உங்கள் "முலைகள்" தொகுப்பு கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானதே?
கவிதைகளை எழுதும்போது இவ்வளவு பயங்கரமான எதிர்விளைவுகள் இருக்குமென்று நான் எதிர்பார்க்கல. சமூகம் முற்போக்கான. முற்போக்கான படைப்பு வந்தவுடன் அதை ஏற்றுக் கொண்டு பாராட்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் இப்படி நாரகாசம் செய்யுமென்று நினைக்கவில்லை. அந்த தொகுப்பு வந்து ஒரு வருடம் ஆகி விட்ட இதற்குள் தேவையான அளவு எதிர் விளைவுகளை சந்தித்து விட்டேன். இந்த சமூகம் எவ்வளவு மோசமானதென்று முன்பை விட இப்போது விளங்குகிறது.
உங்கள் பக்கம் நியாயமாய் இதைச் சொல்கீறீர்கள்?
‘முலைகள்’ என்கிற வார்த்தையை ஆபாசமாக பார்க்க கூடாது. அதை அடக்குமுறைக்கு எதிரான ஒரு உயிர் சார்ந்த படிமமாக வரலாற்று ரீதியாகத்தான் பயன்படுத்தினேன். முலைகள் என்ற வார்த்தையை அதற்கு பின்பு நுழைந்து படிக்கணும். ஆண்டாள் எழுத்தை படித்தால் தெரியும் erotic உடன் அழகும், அறமும் சார்ந்து இருக்கும். அழகுடன் சேர்ந்து கொடுக்குறப்ப யாரும் வேண்டாம்னு நசுக்கி விட முடியாது. நான்தான் முதல் ஆள் இல்லை, இதற்கு முன்னாடியே எழுதியிருக்காங்க. இதைக்கூட சரியாக எடுத்து கொள்ள முடியாத பெண்கள் மற்ற ஓவியம். சிற்பம், சினிமா போன்ற துறைகளை எப்படி எடுத்து கொள்ள போறாங்கன்னுதான் தெரியலை.
நீங்கள் ஏன் வேற மாதிரியாக எழுதக்கூடாது?
என்னைச் சார்ந்த இதைப் போன்ற விசயத்தை யாருக்கும் நிர்ணயிக்க உரிமையில்லை.
இதை எப்படி எடுத்துக்கிறீங்க?
எனக்கொரு குருடனைத் தெரியும். கை தட்டியபடி நடந்து செல்வார். அவரின் காது மிகவும் நுட்பமானது. கைத்தட்டலுக்கு வரும் எதிரொலியை கொண்டே இங்கு என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தவாறு நடந்து செல்வார். அதைப்போல் நானொரு கல்லெறிந்து பார்த்தேன். அதற்குதான் இத்தனை வாதை, பிரதிவாதங்கள், ஆனால் விமர்சனங்கள் எதுவும் ஆரோக்கியமாக இல்லை. சிலபேர் இதைப்பற்றி பேசவேமாட்டேன்கிறார்கள். அவர்கள்தான் மிகவும் ஆபத்தானவர்கள்.
திருமணம் பற்றிய உங்களின் பார்வை என்ன?
அதைப்பற்றிய பேச்சு அவசியமானதென்று எனக்கு தோன்றவில்லை. நாம் என கவிதைகள பற்றி மட்டும் பேசுவோம். மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசம்தான் என கவிதைக்கும், கல்யாணத்திற்கும். இதையே ஒரு ஆண் கவிஞர் என்றால் கேட்பீர்களா என்ன?
யாருக்காக எழுகிறீர்கள் உங்களுக்காகவா? மற்றவர்களுக்காகவா?
முழுக்க முழுக்க எனக்காகத்தான். இதில் எல்லா கவிஞர்களுமே சுயநலக்காரர்கள்தான். எனக்கு பைத்தியம் பிடிக்காமல் இருக்க, இதைப்போன்ற விபரீதங்கள் நடக்காமல் இருக்கத்தான் எழுதுகிறேன்.
பெண்மையை சார்ந்த உங்களின் பார்வை என்ன?
அது பெண் சார்ந்து. ஆண் சார்ந்து அதாவது பெண்ணைப் பற்றியே கண்டு கொள்ளாத ஆண் சார்ந்து, ஆணாதிக்கத்திற்கு ஆதரவு தருகின்ற பெண் சார்ந்த விஷயம்.
ஒரு ஆண் என கவிதைகளுக்கு எதிர்வினை தந்தால் அதற்கு பின்னாடி இந்த சமூகத்தோட கருத்தியல் இருக்கு. அந்த ஆணை மட்டும் குறை சொல்லி பயன் இல்லை. ஆனால் அந்த ஆணுக்கு தன்னளவிலாவது கருத்தியலை மாற்ற வேண்டிய பொறுப்புணர்ச்சி இருக்கு. அதற்கு கண்டிப்பாக முயற்சி செய்யணும்.
உங்களின் கவிதைகள் மிகவும் சிக்கலான விசயத்தை அத்துவான வெளியில் சொற்களை கோர்த்து எழுதப்பட்டது போல் இருப்பது ஏன்?
கவிதைதான் என்னை தேர்ந்தெடுக்குது. அது போகிற வழியில் என்னை அழைத்து போகுது எனக்குள்ளும் வெறுப்புணர்வு, கெட்ட எண்ணம் எல்லாம் இருக்கு. எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி இருக்க முடிவதில்லை. எனவே அதற்கு தகுந்தபடி லயத்தோட கவிதையும் மாறுது, வெளி வருது.
உங்கள் கவிதைகளில் இரண்டு விதமான நிகழ்வுகள் உவமைகளை கோர்க்கும் போது, இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது என்று நம்புகிறீர்களா?
இது காலம், உணர்வு சார்ந்த விசயம் அதனால் அப்படி எழுதினால் தொழில் நுட்பமாக இருக்கும் கவிதையாக இருக்கும். இது உள்மனம் சம்பந்தப்பட்ட விசயம்.
நான் இதுவரை ஒரே கவிதையைத்தான் இடை இடையே தொடர்ச்சியாகவோ இல்லை பக்கங்களை மாற்றியோ எழுதறேன்னு நினைக்கிறேன். இதற்கு மேல் உணரத்தான் முடிகிறது, சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அது உன்னதமான போதையான அனுபவம்
ஒரு கவிதைக்கும், அடுத்த கவிதைக்குமான இடைவெளி பற்றி என்ன நினைக்கிறீங்க?
எனக்குள் நடந்த உரு மாற்றம் (metamorphosis) தான் அந்த இடைவெளி, இது தனி மனித மனம் சார்ந்த விசயம்.
உங்களின் கவிதை நிலைத்தன்மையை அடைந்து விட்டதாய் நினைக்கிறீர்களா?
தெரியல. சொல்ல முடியல. ஆனால் இன்னும் எனக்கு திருப்தி தரும் கவிதையை எழுதவில்ல.
சந்திப்பு : கனகராசு & ரமேஷ் |
|
|
|
|