உம்மன் சாண்டி
உம்மன் சாண்டி

வீடு கட்டிக்கொடுத்த முதல்வர்!

யானைகளுக்கான முகாமைத் தொடங்கிவைக்க முதல்வர் வருகிறார். அப்போது ஒரு யானைக்குட்டியின் அருகில் போய்த் தொட்டுப்பார்க்கிறார். அந்தக் குட்டியானை முதல்வரின் அதிகாரத்தை அறியாமல் முட்டித் தள்ளிவிடுகிறது.

மறுநாள் அந்த யானைக்குட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தது.

இப்படியொரு கதையை நாமறிவோம்.வஇதுவும் ஒரு முதல்வரின் கதைதான்.

கேரளத்தை ஆண்ட ஒரு காங்கிரஸ் முதல்வரின் கதை.

கிராமத்துப் பள்ளிக்குழந்தைகளுக்கான  ஒரு விழாவில் முதல்வர் கலந்துகொள்ள வருகிறார். மேடையேறும் நேரத்தில் உம்மன்சாண்டி என்று அவர் பெயர் சொல்லி அழைக்கும் குரல் கேட்கிறது. முதல்வர் மட்டுமன்றி உடன்வந்த அமைச்சர்கள் அதிகாரிகளெல்லாம் திரும்பிப் பார்க்கிறார்கள்.

அழைத்தது முதலாம் வகுப்பில் படிக்கும் ஷிவானி என்னும் குழந்தை.

முதல்வரை அந்தக் குழந்தை பெயரிட்டு அழைத்ததில் எல்லோருக்கும் அதிர்ச்சி. முதல்வர் சிரித்தபடி, ‘பறயு மோளே..' என்றார் “என்ட பிரண்டு  அமல் கிருஷ்ணனுக்கு வீடில்லா.. அச்சன்ட கையில் காசில்லா. அமலுக்கு வீடு வேணும், நிங்ஙள்தன்னே கட்டித்தரணும்.‘தராமல்லோ...‘'என்றார் சிரிப்பு மாறாமல்.

சொன்னதோடு நிறுத்தாமல் அந்தச் சிறுவனின் குடும்பத்திற்கு வீடும் கட்டிக் கொடுத்தார்.

...

புற்றுநோய்க்கு இரையாகி இன்று மறைந்த அந்த எளிய முதல்வருக்கு அஞ்சலி.

நன்றி: கவிதாபாரதியின் முகநூல் பக்கம்

ஓஹோவென இருக்கும் ஓயோ நிறுவனர்!

 

சுயமாக சம்பாதித்து பணக்காரர்கள் ஆனவர்களில் உலகின் இரண்டாவது பெரிய பணக்கார இளைஞர் என்ற பெயரைப் பெற்றவர் ரிதேஷ் அகர்வால்.  இவர் சின்ன வயதில் சிம்கார்டு வாங்கி விற்று காசு பார்த்தவர். ஒரிசாவின் ராய்கர் பகுதியைச் சேர்ந்த இவரை குடும்பத்தினர் பொறியியல் படிக்க நுழைவுத் தேர்வுப் பயிற்சிக்காக டெல்லிக்கு அனுப்பினர். ஆனால் பொறியியலை விட வணிகமே இவரை ஈர்த்ததால் கல்லூரிப் படிப்பை அவர் தொடரவில்லை. 19 வயதில் அவருடைய தொழில்துறை திறமையைப்பாராட்டி பீட்டர் தீல் என்கிற அமெரிக்க தொழிலதிபர் வழங்கும் உதவித் தொகை கிடைக்கிறது. அவரது யோசனைகளைச் செயல்படுத்த 100000 டாலர் வழங்கப்படுகிறது. இதை வைத்து ஓரவெல் ஸ்டேய்ஸ் என்கிற குறைந்த செலவில் தங்கும் விடுதிகளைத் தரும் இணைய தளத்தைத் தொடங்குகிறார்.

இதைத் தொடர்ந்து அவர் உருவாக்கியதுதான் ஓயோ. நாம் அனைவருமே விடுதிகளில் தங்க அறை முன்பதிவு செய்யும் தளம். இந்தியா, மலேசியா, நேபாளம், மத்தியக் கிழக்கு நாடுகள் என எல்லா இடங்களிலும் ஓயோ பட்டையைக் கிளப்பியதில், இன்று இந்தியாவில் 40 வயதுக்கு உட்பட்ட செல்வந்தர்களில் ரிதேஷ் அகர்வாலுக்குத் தான் முதலிடம்! அத்துடன் தங்கும் விடுதிகள் சம்பந்தப்பட்ட வணிகத்தையே அவர் மாற்றி  அமைத்துவிட்டார்! சின்னவயதில் பெரிய கனவு!

விளம்பர மாடல் ஆன சி இ ஓ!

தான் தயாரித்து விற்கும் பொருளை சந்தைப்படுத்த பெருநிறுவனங்கள் புகழ்பெற்ற பிரபலங்களைக் கூப்பிட்டு படமெடுத்துப் பயன்படுத்திக்கொள்ளும் என்பதுதான் வழக்கம். ஆனால் அந்த  நிறுவனத்தின் தலைவரே விளம்பரமாடலாக களமிறங்குவது வழக்கத்துக்குச் சற்று மாறானது. 1200 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதி, 1000 கோடி மதிப்பிலான பிராண்டை உருவாக்கியவர் என்றெல்லாம் அறியப்படும் தேவிதா சரஃப் என்கிற மும்பை பெண் தொழிலதிபர்தான் அவர். ஜெனித் கம்ப்யூட்டர்ஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கியவரான ராஜ்குமார் சரஃப்பின் மகள் இவர்.  அப்பாவிடம் தொழில்நுணுக்கங்களை கற்ற இவர், அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வு குழுமம் என்ற நிறுவனத்தை உருவாக்கியபோது அவருக்கு வயது 24 தான்.

அந்நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 1000 கோடியாக இருக்கிறது. 2021-இல் டைனமைட் என்ற வாசனை திரவியத்தை சந்தையில் அறிமுகம் செய்தார். அதற்கு வேறு யாரையாவது விளம்பர மாடலாகப் போடலாம் என்று பேசிக்கொண்டிருந்தபோது தேவிதாவே மாடல் ஆகிவிட்டார். ஒரு சிஇஓ வே விளம்பர மாடல் என்பது வியப்பைத் தருகிறது. புகைப்படத்தைப் பார்த்தால் வியப்பு பறந்துபோய்விடும்!

அணு உலைத் தண்ணீர்!

மார்ச் 2011 -இல் ஜப்பானில் உள்ள புக்குஷிமா அணு உலையில் விபத்து ஏற்பட்டு உலகமே அஞ்சி நடுங்கியது  ஞாபகம் இருக்கலாம்.  அந்த அணு உலையைக் குளிர்விக்கப் பயன்படுத்திய 13லட்சம் லிட்டர் தண்ணீரை பசிபிக் கடலுக்குள் விடப்போகிறதாம் ஜப்பான். அணுப் பிளவில் உருவான பயங்கரமான கதிர்வீச்சு கொண்ட தனிமங்கள் இத்தண்ணீரில் இருக்கும் இதை விட்டால் ஆபத்து ஏற்படுமே என்ற அச்சம் உள்ளது. இல்லை.. இந்த தண்ணீரை வடிகட்டி, ஆபத்து நிறைந்த தனிமங்களை நீக்கிவிட்டு கடலில் விடுவோம் என்கிறது ஜப்பான். என்ன செய்கிறார்கள் பார்க்கலாம்!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com