சினிமா

பிச்சைக்காரன் -2: திரைவிமர்சனம்!

தா.பிரகாஷ்

மூளை மாற்று சிகிச்சை, அண்ணன் – தங்கை பாசம், ஏழை – பணக்காரன் பேதம். இந்த மூன்று விஷயங்களும் சேர்ந்தால், அது தான் பிச்சைக்காரன் -2 திரைப்படம்.

இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்களில் ஒருவர் விஜய் குருமூர்த்தி (விஜய் ஆண்டனி). அவரது நெருங்கிய நண்பர் அரவிந்த் (தேவ் கில்). இவர் தன்னுடைய கூட்டாளிகளான இளங்கோ (ஜான் விஜய்), சிவாவுடன் (ஹரீஷ் பேரடி) சேர்ந்து விஜய் குருமூர்த்தியின் மூளையை வேறொருவரின் உடலில் பொருத்தி அதன் மூலம் சொத்தை அபகரிக்க திட்டமிடுகின்றார். இந்த சதித் திட்டத்தில் வந்து மாட்டிக்கொள்கிறார் யாசகம் கேட்டு பிழைப்பு நடத்தும் சத்யா (விஜய் ஆண்டனி). திட்டமிட்டப்படி சத்யாவின் உடலில் குருமூர்த்தியின் மூளை பொருத்தப்பட, வஞ்சகர்களின் சதித் திட்டம் பலித்ததா? சத்யாவுக்கான பின்னணி என்ன? – இதுதான் படத்தின் திரைக்கதை.

இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றியடைந்தது. இதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய் ஆண்டனியே பிச்சைக்காரன்-2 திரைப்படத்தை இயக்கியுள்ளார். டி.ராஜேந்தர் போலவே படத்தை தயாரித்து, நடித்து, இசையமைத்து, படத்தொகுப்பு பணியையும் செய்துள்ளார்.

அண்ணன் – தங்கச்சி பாசம் படத்தின் முதல் பாதியை தாங்கிப் பிடிக்க, இரண்டாம் பாதியில், சாதரணமாக நடக்கும் மூளை மாற்று அறுவை சிகிச்சை, குறைந்த விலையில் மக்களுக்குத் தேவையான பொருட்கள் கொடுக்கும் திட்டம், நீதிமன்ற காட்சிகள் போன்றவை கதையின் மீதான நம்பகத்தன்மையை குறைத்துவிடுகிறது. இறுதிக் காட்சியில் விஜய் ஆண்டனி ஒரு அரசியவாதியாகவே மாறிவிடுகிறார். இதையெல்லாம் முடிந்தளவு தவிர்த்திருக்கலாம்.

அதேபோல் படம் முழுக்க பலவீனமான கிராஃபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றிருப்பது நெருடல் தான். தலைமைச் செயலகம் என கூறி சென்னை மாநகராட்சி கட்டிடத்தைக் காட்டுவது, துபாய் காட்சிகளுக்கான இடத்தேர்வுகள் போன்றவை கதை மீதான நம்பகத்தன்மையை குறைத்துவிடுகிறது.

‘நான்’ படத்தில் பார்த்த அதே நடிப்பைத்தான் கொடுத்துள்ளார் விஜய் ஆண்டனி. குறைந்த காட்சிகள் வந்தாலும் நாயகி காவ்யா தாப்பர் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார். தேவ் கில், ஜான் விஜய், ஹரீஷ் பேரடி, யோகிபாபு நடிப்பு கதையோட்டத்துக்கு பலம். மன்சூர் அலிகான் கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது.

படத்தின் மிகப் பெரிய பலம் அதன் பின்னணி இசை. பாடல்கள் அப்படி இல்லை. இருந்தாலும் விஜய் ஆண்டனியைப் பாராட்டலாம். சண்டைக் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் ஓம் நாராயணனின் பணி பாராட்டத்தக்கது. மீட்டிங் ஹாலில் நடக்கும் சண்டைக் காட்சி மிரள வைக்கிறது.

மொத்தமாக ‘பிச்சைக்காரன் 2’ மூளையைக் கழற்றிவிட்டு ரசிக்கும் படமாக வந்துள்ளது!