ஆளுநர் இரவி  
செய்திக் கட்டுரை

அந்த மீன் கடல்லயே இல்லையாம் பாஸ்! - மீண்டும் சர்ச்சையில் ஆளுநர்!

Staff Writer

சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார், தமிழக ஆளுநர். இந்த முறை மாநில அரசுடனோ திராவிட, இடதுசாரிகள் போன்ற அரசியல் தரப்பினருடனோ அல்ல!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு இணையாக, ஆளுநர் மாளிகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த 13ஆம் தேதி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் மருத்துவத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான விருது என 50 பேருக்கு வழங்கப்பட்டது.

அதை ஆளுங்கட்சியோ வேறு யாருமோ பொருட்படுத்தவில்லை. ஆனால், அந்த விருதுத் தட்டுடன் இடம்பெற்றிருந்த திருக்குறள் வாசகம் என்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

’செருக்கறிந்து சீர்மை பயக்கும் மருப்பொடு

மன்னுஞ்சொல் மேல்வையப் பட்டு’ என்று திருக்குறளாகச் சித்திரிக்கப்பட்டிருந்தது.

திருக்குறளாகக் குறிப்பிடப்பட்டிருந்த அந்த வாசகம், திருக்குறள் எண் 944 எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் அப்படியொரு திருக்குறளே இல்லை என்பதும், ஆளுநர் கொடுத்த விருதுத் தட்டில் அச்சிடப்பட்டது திருக்குறள்போலி என்பதும் தெரியவந்தது.

தமிழ் ஆர்வலர்கள் தனித்தனியாகவும் பல்வேறு அமைப்பினரும் என இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தனித்தமிழ் இயக்கத் தலைவரும் மொழியறிஞருமான மறைந்த பெருஞ்சித்திரனாரின் மகன் - தமிழக மக்கள் முன்னணியின் அமைப்பாளர் பொழிலன், “ ஆளுநர் ஆர். என். இரவி தமிழ்நாட்டின் நூலாக உள்ள திருக்குறளையே திரித்து கேடயத்தில் பதித்துக் கொடுத்திருக்கும் நிலையில் வழக்குத் தொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டாமா? பழந்தமிழ் இலக்கியங்களில் எண்ணற்ற இடைச்செருகல்களை எவ்வாறு செய்திருந்தார்கள் என்பது இப்போது வெளிச்சமாகப் பலருக்கும் விளங்கி இருக்கும். கணிப்பொறி, ஊடக வலிமை பெற்ற இந்தக் காலத்திலேயே இந்த அளவு ஏமாற்றுகள் நடக்கிறது என்றால், ஓலைச்சுவடிகளை மட்டுமே ஆவணமாகக் கொண்டிருந்த பழங்காலங்களில் எந்த அளவு ஏமாற்றுகள் நடந்திருக்கும் என எண்ணிப் பார்க்க வேண்டும். இதே வேலையை வேறு யாரேனும் செய்திருந்தால் தொண்டை கிழியக் கத்திக் கூச்சல்போடும் தமிழ் இந்துத் தமிழ்த்தேசியர்கள் இதற்கு அடங்கிக் கிடப்பது ஏன்?” என்று சக தமிழினவாத அமைப்புகள் மீது விமர்சனத்தையும் முன்வைத்தார்.

எதிர்ப்பும் கண்டனமும் வலுத்தபின்னர், அவை ஊடகங்களிலும் எதிரொலித்தன. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை போன்றவர்கள்வரை இந்த விவகாரம் பேசும்படி ஆனது.

இந்த நிலையில், அளிக்கப்பட்ட விருதுகளை ஐம்பது பேரிடமிருந்தும் திரும்பப் பெற்றுக்கொண்டு மீண்டும் வழங்குவதாக ஆளுநர் அலுவலகம் கூறியிருக்கிறது.

சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் குறித்து இன்னும் சூடான விவாதங்கள் தொடர்ந்தபடி உள்ளன.