சிறப்புப்பகுதி

கோழிப் பண்ணையாளர்கள் கோரிக்கை!

மருத்துவர் டி. சந்திரசேகர்

கோழிப் பண்ணையாளர்கள் இன்று எதிர்கொள்ளும் முக்கிய சிரமங்களில் ஒன்று கோழித்தீவன விலை ஏற்றம். சோயாவின் விலை கிலோ 32 ரூபாயாக இருந்தது இப்போது 52 ரூபாயாக உயர்ந்துவிட்டது. எனவே பண்ணையாளர்கள் திணறிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஒரே வழி வெளிநாடுகளில் இருந்து சோயா மீல் இறக்குமதி செய்ய அனுமதிப்பதுதான். நம்மை சுற்றி இருக்கும் நாடுகள் அனைத்துமே கோழிப்பண்ணைகளுக்கு சோயா இறக்குமதி செய்ய அனுமதித்துவிட்டன. நாம் மட்டுமே அது மரபணு மாற்றப்பட்ட உணவுப்பொருள் என்று சொல்லி அனுமதிக்க மறுக்கிறோம். ஏற்கெனவே மரபணு மாற்றப்பட்ட பருத்தி மாட்டுப்பண்ணைகளுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் கோழிகளுக்குப் பயன்படுத்த சோயா இறக்குமதிக்கு அனுமதி வழங்காமல் இருப்பது ஏனென்று புரியாமல் உள்ளது. புதிய மாநில அரசு இந்த பிரச்னைக்கு  சரியான தீர்வு காணவேண்டும்.

அதுபோல் கோழிகளுக்கு வரும் நோய்களுக்கு தடுப்பூசி இறக்குமதி அனுமதி பெறவும் படாத பாடுபடவேண்டி உள்ளது. ஒரு தடுப்பூசி என்றால் சுமார் 3 கோடி டோஸ்கள் என்ற அளவில்தான் நம் நாட்டில் குழந்தைகளுக்குத் தேவைப்படுகிறது. ஆனால் கோழிகளில் இந்த எண்ணிக்கை பிரமாண்டமானது. கறிக்கோழிகளை மட்டும் எடுத்துக்கொண்டால் சராசரி கணக்கீட்டில் ஆண்டுக்கு 300 கோடி குஞ்சுகள் உருவாக்கப்படுகின்றன.  அப்படியெனில் ஒவ்வொரு தடுப்பூசியுமே 300 கோடி டோஸ்களுக்கு மேல் தேவை. நான் கறிக்கோழிகளை மட்டுமே குறிப்பிடுகிறேன். முட்டைக் கோழிகளைச் சேர்க்கவில்லை. அந்த அளவுக்கு தொழில்ரீதியாக கோழி வளர்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் தடுப்பூசிகள் இறக்குமதி அனுமதி போன்றவற்றுக்கான கட்டுப்பாடு இன்னும் மனித மருந்துகள் துறையிடம் தான் உள்ளது. கால்நடைக்கென தனியான அமைப்பு உருவாக்க வேண்டியது இப்போது அவசியத் தேவை. ஏனெனில் தடுப்பூசி இறக்குமதிக்கு ஆகும் காலதாமதத்தால் இத்துறை இழப்பையே சந்திக்கிறது. இதற்கான நடவடிக்கைகளையும் மாநில அரசு முன்னெடுக்கவேண்டும்

-மருத்துவர் டி.சந்திரசேகரன்,

கோழி உணவியல் துறை நிபுணர்.

ஏப்ரல், 2021