தொடர்கள்

ஒரு கனவின் மரணம்

ஜா.தீபா

பெண்ணின்  மொழி, திசை, இசை, வாசம் வீரம்,ஈரம், கவிதை, உயிர் என பெண்பாலை பற்றிப் பேசும் உலகப்படங்களை பற்றி ஜா.தீபா எழுதும் இத்தொடர் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அந்திமழையில் வெளிவரும்.




தற்செயலாகவே இருந்தாலும் சில நேரம் நம்மைக் கடந்து போகிறவைகளில்  சில முகங்களோடு மட்டும் நமக்கு நட்பு கொள்ளத் தோன்றுகிறது. அந்த முகங்களில் ஒரு தோழமையோ வாழ்க்கை மீதான அக்கறையோ, பரிவார்ந்த நேசிப்போ நிச்சயம் இருக்கும். ‘Dancer in the dark’  என்கிறப் படத்தில் வரக்கூடிய செல்மாவின் முகமும் கூட நமக்கு அப்படியானதொரு நம்பிக்கைத் தரக்கூடியது தான்.  ஒரு நல்லக் கதைக்கு தேவையான, காட்சிகளில் வெளிப்படுத்தப்படவேண்டிய உணர்வுகளுக்கு தக்க முக்கியத்துவம் தந்து நம்மை ஈர்க்கிற படமாக இது அமைந்திருக்கிறது. மகனுக்காகத் தியாகம் செய்கிற அம்மாக்கள் எத்தனையோ படங்களில் வந்தும், நாம் பார்த்தும் இருந்தாலும் கூட, சில தாய்மார்களின் கதாபாத்திரங்கள் மட்டும் உணர்வு மீதாமல் நம்மோடு அப்படியே தங்கி விடுகின்றன.


2000ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தின் வெற்றி திரைப்படத் துறையினர் பலருக்கு நம்பிக்கையை அளிப்பதாக இருந்திருக்கிறது. காரணம் முழுவதுமாக ஒரு ஆவணப்படத்திற்கான தன்மையிலேயே உருவாகியிருந்த  இந்தப்படத்தின் உருவாக்கம். பாடல்களின் மூலம் மிகவும் பிரபலமான இந்தப் படத்தின் இயக்குனர் Von Trier. படத்தில் வரும் செல்மாவின் கதாபாத்திரத்திற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை Bjork,ஃபிரான்ஸ் திரைப்பட விழாவின் போது சிறந்த நடிகைக்கான விருதைப் பெறுகையில், யாரும் குறிப்பிடாமலேயே சபை எழுந்து நின்று கைதட்டியது. அதற்கான பொருள் படம் பார்க்கிறபோது நமக்குத் தெரிகிறது.
 
செல்மா, தனது பனிரெண்டு வயது மகன் ஜீனியுடன் அமெரிக்க கிராமம் ஒன்றில் வாழ்கிறாள். பார்த்தவுடன் யாருக்குமேப் பிடித்துப் போய்விடுகிற குழந்தைத்தனமான முகத்தைக் கொண்டிருக்கிற செல்மா ஒரு  உலோகத் தொழிற்சாலையில் வேலை செய்கிறாள். செல்மாவின் வாழ்க்கை முறையானத் திட்டமிடுதலுடன் இயங்குகிறது. தொழிற்சாலை வேலை முடிந்ததும் வீட்டிற்கு வந்துவிடும் செல்மா செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் தனது தோழி கேத்தியுடன் நடனப் பயிற்சிக்காக செல்கிறாள். அதன் பிறகான அவளது நேரங்கள் வழக்கம்போல் ஜீனியுடன் கழிகிறது.
வீட்டில் இருக்கும் மற்ற நேரங்களில், ஹேர்பின்களைத் தயாரித்துத் தரும் வேலையைப் பகுதி நேர வேலையாகவும் பார்க்கிறாள். மிகவும் சிக்கனமாக தனது பணத்தை செலவிடுகிற செல்மாவிடம், ‘இப்படியெல்லாம் உழைக்கிற பணத்தை என்ன தான் செய்கிறாய்?’ எனக் கேட்பவர்களிடம், தன்னுடைய சொந்த நாடான, செகஸ்லவகியாவில் தங்கியுள்ள தனது அப்பா ஒல்ட்ரிச் நோவிக்கு அனுப்பிவைப்பதாக புன்னகையுடன் பதில் சொல்கிறாள். அப்போது அவளது தடித்த கண்ணாடியையும் மீறி அவளது கண்கள் தனித்தன்மையோடு பளபளக்கின்றன.

செல்மா தங்கி இருக்கும் வீட்டின் உரிமையாளர்களான பில்லும் அவரது மனைவியும் பள்ளிக்கூடம் விட்டு வருகிற ஜீனை செல்மா வேலையிலிருந்து வரும் வரை  கவனித்துக் கொள்கின்றனர். ஜீனின் பிறந்தநாளுக்காக சைக்கிள் வாங்கித்தரும் அளவுக்கு செல்மாவின் குடும்பத்தோடு மிகுந்த பிரியமாக இருக்கிறார்கள். தன்னுடைய மகனுக்காக மற்றவர்கள் பரிசு தருவதை விரும்பாத செல்மா, சைக்கிளைப் பார்த்ததும் தனது மகனுக்கு ஏற்படும் பரவசத்திற்கு முன் செயலற்று அமைதியாகி அவனது சந்தோசத்தை அங்கீகரிக்கிறாள்.

ஜெஃப் எனப்படும் செல்மாவின் தொழிற்சாலையில் வேலைப் பார்க்கும் ஒருவன் அவள் மீது மிகுந்த அன்பு கொண்டு அவளை ஒருதலையாக காதலிக்கிறான். உதவிகள் செய்வதின் மூலமாக ஜெஃப் தனது அன்பை வெளிப்படுத்த முயற்சிக்கிற சமயங்களில் எல்லாம் அழகாய் மறுத்துவிடுகிறாள் செல்மா.  இதுவே அவள் பக்கம் ஜெஃபை அதிகமாக ஈர்க்கிறது.

ஒரு நாள் வீட்டு உரிமையாளர் பில், செல்மாவைத் தேடி முன்னிரவு நேரத்தில் வருகிறான். போலீஸ் அதிகாரியான அவன் செல்மாவிடம் தனது பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்ள முனைகிறான். தனது மனைவியின் ஆடம்பர செலவிற்காக ஏகப்பட்ட கடன் பெற்றதையும் ,அதை அடைப்பதற்கு வீட்டை அடமானமாக வைத்திருப்பதையும் உருக்கமாக சொல்லும் அவன் இது தன் மனைவிக்கு கூட தெரியாத ரகசியம் என்கிறான்.



இந்த சமயத்தில் செல்மாவும் ஒரு ரகசியத்தினை பில்லிடம் கூறுகிறாள். இன்னும் சிலநாட்களில் தான் முழுமையாக பார்வையை இழக்கப் போவதாகவும், தனக்கு வந்திருப்பது ஒரு பரம்பரை வியாதி என்றும் சொல்லும் அவள் இந்தக் கண்பார்வைக் கோளாறு தனது மகன் ஜீனுக்கும் வரப்போவதை சொல்ல திகைத்து விடுகிறான் பில். ஆனால் இதைச் சொல்லும் செல்மாவின் முகத்தில் இருக்கும் வழக்கமானப் புன்னகை மட்டும் மாறாமல் அப்படியே இருக்கிறது. “என்னைப் போல் என் மகனை விட்டுவிட மாட்டேன்..... அவனுடைய அறுவை சிகிச்சைக்காக நான் பணம் சேர்த்துவைத்துள்ளேன்..... பதிமூன்று வயதாகும் போது தான் அந்த ஆபரேஷனை செய்ய முடியும் என டாக்டர் சொல்லியிருக்கிறார்’ என்கிறாள்.

செல்மாவிடம் பேசிவிட்டு பில் கிளம்பும்போது, இருவரும் மற்றவர்களின் ரகசியத்தை யாரிடமும் சொல்லப்போவதில்லை என உறுதி பெற்றுக் கொள்கிறார்கள். இரவு நேரத்தில் செல்மா வீட்டில் இருந்து வெளியேறும் தனது கணவனை பில்லின் மனைவி தன் வீட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
 
பகல் முழுவதும் தொழிற்சாலையில் வேலை செய்யும் செல்மாவின் அக உலகம் கனவுகளில் அடிக்கடி ஆழ்ந்து போய்விடுகிறது. இயந்திர சத்தங்கள் ஒவ்வொன்றையும் அவள் இசைக் குறிப்புகளாக தனக்குள் மொழி பெயர்த்துக் கொள்கிறாள். அந்த கற்பனைகுள்ளே அவள் பாட்டு பாடுகிறாள். அவளைச்சுற்றி உள்ளவர்கள் சந்தோசமாக ஆடுகிறார்கள். ஆட்டத்தின் நடுவே செல்மா தனது கனத்த கண்ணாடியைத் தூக்கி தூர வீசி விடுகிறாள். அவளால் தனது உடலை எளிதாக காற்றில் வீசி ஆட முடிகிறது. சிடுமூஞ்சித் தனத்தோடு இருக்கும் தொழிலாளர்கள் கூட அந்நேரத்தில் சிரித்தபடி உற்சாகமாக அவளுடன் ஆடுகிறார்கள். இயந்திர சத்தங்கள் சீரான தாள கதியாக மாறுகின்றன. இப்படி கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் செல்மா ஒருநாள் இரண்டு பிளேட்டுகளை தவறுதலாக இயந்திரத்தில் வைத்து விட, கடைசி நொடியில் கேத்தி ஓடிவந்து தடுத்து விடுகிறாள். மேற்பார்வையாளன் வந்து செல்மாவிடம் கோபப்படுகிறான். இதன்காரணமாக ‘இனிமேல் பகல் கனவு காணமாட்டேன்’ என கேத்தியிடம் உறுதி அளிக்கிறாள் செல்மா.

இதன் பிறகு நாளுக்குநாள் செல்மாவின் கண்பார்வைத் திறன் குறைந்து கொண்டே போகிறது. முழுதாக பார்வை மறையும் முன் தன் உடல்தகுதிக்கும் மீறி அவள் வேலை செய்கிறாள். பகல் பொழுது மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் கூட கடினமாக வேலை செய்கிறாள். இச்சமயங்களில் இரவு அவள் வேலை முடித்து வரும்வரை தொழிற்சாலை வாசலிலேயே ஜெஃப் காத்திருக்கிறான்.

களைப்பாக வீட்டுக்கு வரும் செல்மா, அன்றைய தனது சம்பளத்தை தனது சேகரிப்பு பணத்தோடு சேர்த்து வைக்கும் போது மறைந்திருந்து பில் பார்த்துக்  கொண்டிருக்கிறான்.செல்மாவின் பார்வைக் குறைபாடு காரணமாக அவளால் வேலையில் சிறு தவறுகள் நடக்கத் துவங்குகின்றன. இதனால் அவளுக்கு வரவேண்டிய சம்பள பாக்கியைத் தந்து வேலையிலிருந்து நிறுத்தி விடுகிறார்கள் நிர்வாகத்தினர்.சம்பள பணத்தோடு தனியாக ரயில்வே தண்டவாளத்தில் நடந்துவருகிற செல்மாவை கவனித்து அவளைப் பின்தொடர்ந்து வருகிறான் ஜெஃப். செல்மாவுக்கு கண்பார்வை முழுவதுமாகத் தெரியவில்லை என்பதை அவன் புரிந்துகொள்கிறான். ‘உனக்கு கண்தெரியவில்லையா செல்மா?’ என ஜெஃப் கேட்க, அந்த நேரம் அவர்கள் இருவரையும் ரயில் ஒன்று கடந்து செல்கிறது. அந்த ரயிலின் தாள கதியான ஓட்டம், செல்மாவை வழக்கமான அவளது கற்பனை உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. ஜெஃப் கேட்கும் கேள்விகளுக்கு பாடல் வரிகளில் ஆடியபடியே செல்மா பதில் சொல்கிறாள்.


ரயில் போய் முடிந்ததும் ஜெஃப் கேட்ட ஒரு கேள்வி செல்மாவை நிகழ் உலகத்திற்கு இழுத்து வருகிறது. தனக்கு கண் தெரியாததை யாரும் கவனிக்கக்கூடாது என்கிற சுய உணர்வில் ஜெஃப்பிடம் இருந்து விடைபெற்று வீடு வருகிறாள் செல்மா. வீட்டுக்கு வருகிற செல்மா, வழக்கம் போல் பணத்தை வைப்பதற்காக தனது ரகசிய இடத்திற்கு போகிறாள். பணம் வைக்கும் டப்பா காலியாக இருக்கிறது. இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத செல்மா திகைத்துப் போகிறாள். தடுமாறியபடி பில் வீட்டிற்கு செல்கிறாள்.

எப்போதும் இனிமையான முகத்துடன் வரவேற்கும் பில்லின் மனைவி செல்மாவைப் பார்த்தும் கோபப்படுகிறாள். ‘அடிக்கடி பில் உன்னைத் தேடி வரும் ரகசியம் எனக்குத் தெரியும். நீ அவரை விரும்புவதாக பில் என்னிடம் சொல்லி விட்டார்’ என்கிறாள். இதை விட அதிர்ச்சியான சம்பவம் நடந்திருப்பதால் பில்லின் மனைவி சொன்னதைப் பற்றி கண்டுகொள்ளாமல் பில்லைத் தேடி மாடிக்குப் போகிறாள். தன்னுடைய பணத்தைத் தரும்படி அவனிடம் கெஞ்சுகிறாள். ஒரே மாதத்தில் திருப்பித் தருவதாக சொல்கிறான் பில். அது தன் பணமில்லை என்றும், ஜீனின் எதிர்காலமே அந்தப் பணத்தை நம்பித்தான் இருக்கிறது எனவும் மெல்லிய குரலில் அவனிடம் விளக்க முற்படுகிறாள். பில் எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை.  அவனிடமிருந்து பணத்தைப் பிடுங்கிக் கொண்டு போகிற செல்மாவைத் தன்னுடைய துப்பாக்கியைக் காட்டி மிரட்டுகிறான் பில். ‘இது என்னுடைய பணம்.  இதை என்னிடமிருந்து திருடுகிறாய்’ என்று அவள் மேல் பழி போடுகிறான். சத்தம் கேட்டு மாடிக்கு வந்த மனைவியிடம் பில், தன் பணத்தை செல்மா தூக்கிப் போவதாகவும், தன்னை கொலை செய்வதாக அவள் மிரட்டுவதாகவும் சொல்கிறான்.

சண்டை நடந்ததில் சாமர்த்தியமாக பில், தன்னுடைய துப்பாக்கியை செல்மா கையில் தந்திருக்க, இப்போது செல்மாவின் கையில் உள்ள துப்பாக்கியைப் பார்த்ததும் பில்லின் மனைவி நிலைமையைத் தவறாக புரிந்து கொண்டு போலீசை அழைத்து வர ஓடுகிறாள்.

செல்மாவின் கையிலிருக்கும் துப்பாக்கி பில்லை நோக்கி தவறுதலாக சுட்டு விடுகிறது. அதில் பில் இறந்து போகிறான். செல்மா திகைத்துப் போய் உட்கார்ந்து விடுகிறாள். என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் செல்மா தன்னை ஆசுவாசப்படுத்துகிற கனவுக்குள் மூழ்குகிறாள். அந்தக் கனவில் பில் உயிர் பெற்று வருகிறான். செல்மா அவனிடம் மன்னிப்பு கேட்கிறாள். அவனும் மன்னிப்பை வழங்குகிறான். இருவரும் நடனமாடுகிறார்கள். செல்மாவை சந்தோசமாக வழி அனுப்புகிறான் பில்.

கற்பனையில் இருந்து விடுபடுகிற செல்மா, பில் வீட்டில் இருந்து கிளம்பி வெளியே வந்து நிற்கிறாள். அவளைத் தேடி வரும் ஜெஃப்பிடம் நடந்த எதையும் கூறாமல், தன்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கேட்கிறாள்.
மருத்துவமனைக்கு அருகில் வந்ததும், தன்னைப் பின்தொடர வேண்டாம் எனத் தனியாக நடந்து செல்கிறாள். ஜின்னின் அறுவைச் சிகிச்சைக்கானப் பணத்தை மருத்துவரிடம் தந்து, வரப்போகிற அவனது பதிமூன்றாவது பிறந்தநாளன்று கண் ஆபரேசன் செய்யுமாறு கூறிச் செல்கிறாள்.

இதனிடையில் பில்லைக் கொலை செய்த குற்றத்திற்காக போலீஸ் செல்மாவைக் கைது செய்கிறது. சாட்சியங்கள் யாவும் செல்மாவுக்கு எதிராக அமைகிறது. ‘பில்லை ஏன் கொலை செய்தாய்’ என வக்கீல் கேட்கிறபோது, ‘எதையும் சொல்ல மாட்டேன் என பில்லுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளேன்’ என்கிறாள் உறுதியாக. செல்மா தனது அப்பாவுக்கு பணம் அனுப்பியதாக சொல்லப்பட்ட விலாசத்திலிருந்து ஒல்ட்ரிச் நோவி என்பவர் வரவழைப்படுகிறார். தனக்கு செல்மாவைத் தெரியாது என்கிறார் அவர். தான் ஒரு நடிகன் என்றும், ஒரு காலத்தில் செகஸ்லவகியாவில் புகழ்பெற்ற நடனக் கலைஞராக இருந்ததாகவும் தன்னைப் பற்றி சொல்கிறார் நோவி.

இந்த நேரத்திலும் செல்மாவின் கற்பனை விரிகிறது. நீதிமன்றத்தில் இருக்கும் எல்லோரும் அவளது பாடலுக்கு ஆடுகிறார்கள். நோவி செல்மாவுக்காக ஆடிக் காட்டுகிறார். அவளது கற்பனை உலகம் சுருங்கி, யதார்த்தத்துக்கு வரும்போது செல்மாவுக்கு தூக்குத் தண்டனை வழங்கும் தீர்ப்பு வாசிக்கப்படுகிறது.

செல்மாவைத் தனிமைச் சிறையில் அடைக்கின்றனர். அங்கும் பாடிக் கொண்டிருக்கிற செல்மாவுக்கு ஒரு பெண் காவலாளி தோழியாக மாறிப் போகிறாள். ‘ஏன் நீ எப்போதும் பாடிக் கொண்டிருக்கிறாய்?’ எனக் கேட்கும் அந்தப் பெண் காவலாளியிடம், ‘கற்பனையில் தான் எல்லோரும் மிக நல்லவர்களாக, சந்தோசமானவர்களாக இருக்கிறார்கள். நான் ஒரு தொழிற்சாலையில் வேலைப் பார்த்தேன். அங்குள்ள இயந்திரத்தின் சத்தங்களை இசையாகவே கேட்டுப் பழக்கப்படுத்திக் கொண்டேன். எந்த இடத்திலும் என்னால் ஒரு ‘ரிதத்தை’ உணர முடிகிறது. இங்கு மிக அமைதியாக இருக்கிறது. நீங்கள் கைதிகளை வெளியே உலவ விட அனுமதிக்க மாட்டீர்களா?’ எனக் கேட்கிறாள் செல்மா. செல்மாவின் வெகுளித்தனம் அவளது தோழியை கண்கலங்கும்படி செய்கிறது.

சிறையில் செல்மாவைப் பார்க்க கேத்தியும், ஜெஃப்பும் அடிக்கடி வருகிறார்கள். ஆனால் மகன் ஜீனி மட்டும் தன்னைப் பார்க்க இங்கெல்லாம் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாள் அவள். ஜீனியின் ஆப்ரேசனுக்காகத் தான் செல்மா பணம் சேர்த்து வைத்திருந்தாள் என்பதைக் கண்டுபிடித்துவிடுகிறான் ஜெஃப். இதை முன்வைத்து அவளை மேல்முறையீடு செய்ய வற்புறுத்துகிறாள் கேத்தி. வக்கீல் ஒருவரும் செல்மாவுக்காக வாதாட முன்வருகிறார். தன்னால் செல்மாவின் தூக்குத் தண்டனையை நிறுத்தி தண்டனைக் காலத்தையும் குறைக்க முடியும் என உறுதி தருகிறார். இது செல்மாவுக்கு சந்தோஷத்தைத் தருகிறது. ஆனால் அவருக்கான சம்பள பணத்தை ஜீனின் மருத்துவ செலவிலிருந்து எடுத்துத் தர கேத்தி முடிவு செய்திருப்பது தெரிந்ததும் தனது மேல் முறையீட்டுக்கு மறுத்து விடுகிறாள். ஜீனிக்கு அம்மாவை விட அவன் கண்கள் தான் முக்கியம் என கேத்தியிடம் வாதாடுகிறாள் செல்மா. ‘நான் எனது மனம் சொல்வதைத் தான் கேட்கிறேன் கேத்தி. எனது மகன் அவன் பேரப் பிள்ளைகளைக் கண்களால் பார்க்க வேண்டும்’ எனக் கதறுகிறாள்.
தூக்குத் தண்டனை நிறைவேறும் நாள் வருகிறது. தனது அறையிலிருந்து அழைத்துச் செல்லப்படும் செல்மா, அப்போதும் தனது கற்பனையின் உதவியை நாடுகிறாள். அவள் அந்தக் கற்பனை மூலம் எல்லோருடனும் கைகோர்த்து ஆடுகிறாள். அங்குள்ள குற்றவாளிகளுக்கு ஆறுதல் சொல்கிறாள்.

தூக்குத் தண்டனை மேடை செல்லும் வரையிலும் தளராத செல்மா அதன் அருகில் சென்று நின்றதும் சட்டென்று துவண்டு விடுகிறாள். அப்போது செல்மா முகத்தின் வழக்கமானப் புன்னகை வசீகரமாக மாறுகிறது. அவள் மெலிதான தனது குரலால் பாடத் துவங்குகிறாள். அந்த நேரம் அவளது பாடலின் கனம் தாங்காமல் அனைவரும் கலங்கி விடுகின்றனர். அவளின் பாடலுக்கு நடுவில் சட்டென தண்டனை நிறைவேற்றப்பட்டு, அவளது உயிர் கரைந்து விடுகிறது.
வாழ்வின் கடைசி நேரத்தில் அவளது மனம் ஜீனை நினைத்திருக்கக்கூடும். அவன் தனது நாட்களை பேரக்குழந்தைகளுடன் சந்தோசமாக கழிக்கும் காட்சிகள் கூட அவளது மனதில் ஓடி இருக்கும். அந்த உன்னதமான கற்பனையில் தான் அவளது உயிரும் பிரிந்திருக்கும். ஏனெறால் அவளது கற்பனையிலேயே மிகவும் அழகானதும், நம்பிக்கை அளிப்பதும் ஜீன் பற்றியதாகவே இருந்திருக்க முடியும். தனக்கு எதிரான ஒரு அநீதி செய்யப்பட்டபோதும் கூட அதனை சமமான மனதோடு அவளால் ஏற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது. அவள் எப்படி வாழவேண்டுமென்று நினைத்தாளோ அதெல்லாமே அவளது மனதிற்குள் வந்து அவளை கனவாய் வழிநடத்திக் கொண்டே இருந்திருக்கின்றன. அந்தக் கனவில் ஜெஃப்புடனான காதலும், நடனத்தின் மீதுள்ள பற்றும் பொதிந்திருந்ததை அவள் கடைசிவரை வெளிப்படுத்தாமல் பத்திரமாக பாதுகாத்துக் கொண்டே வந்திருக்கிறாள்.

(ஜா. தீபாசென்னையில்வாழும்எழுத்தாளர். திரைப்படத்துறையில்உதவிஇயக்குநராகப்பணிபுரிகிறார்)