தொடர்கள்

மகிமையழியும் அடையாளங்கள்

ஜா.தீபா

பெண்ணின்  மொழி, திசை, இசை, வாசம் வீரம்,ஈரம், கவிதை, உயிர் என பெண்பாலை பற்றிப் பேசும் உலகப்படங்களை பற்றி ஜா.தீபா எழுதும் இத்தொடர் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அந்திமழையில் வெளிவரும்.

ஒருக் குறிப்பிட்ட இனத்தில் பிறந்த காரணத்திற்காகவே உலகம் முழுவதும் பல இனக் குழுக்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களை விட்டு துரத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நாம் அறிந்தவைகள், நம்மிடம் சொல்லப் பட்டவைகள் என்பவற்றைத் தாண்டியும் சொல்லப்படாத பல கதைகள் அவர்களிடம் இருக்கின்றன. அந்தக் கதைகளும், நினைவுகளும் அவர்களுடனேயே வாழ்ந்தும் புதைக்கப்பட்டும் மறைந்து போகின்றன. திணிக்கப்பட்ட தனது அடையாளத்தை சகித்துக் கொண்டு,  சிறுவயதின் அனுபவங்களை வாழ்நாள் முழுதும் தூக்கி சுமந்தபடி அதை இறக்கி வைக்க இயலாத, ஒரு மூதாட்டியின் அனுபவக் கதையை அதன் சுமை குறையாமல் தந்திருக்கிறது ‘waiting for the clouds’ என்கிற துருக்கியத் திரைப்படம்.
முதல் உலகப் போர் முடிந்ததும் துருக்கிய அரசு ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அதன்படி துருக்கிய குடியரசு என்பது ஒரே தேசமாக ஒன்றிணையவேண்டும் என்பது முடிவு. இந்த முடிவின் காரணமாக நூற்றாண்டு காலங்களுக்கும் மேலாக அங்கு வாழ்ந்து வந்த சிறுபான்மை இனத்தவர்களான அர்மேனினியர்கள், கிரேக்கர்கள் அங்கிருந்து துரத்தப்படுகிறார்கள். புதிய துருக்கிய குடியரசு உருவானதும், துருக்கியும், கிரேக்கமும் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்கின்றன. அதன் விளைவு , கிரீசில் வாழ்கின்ற துருக்கியர்களும், துருக்கியில் வசிக்கும் கிரேக்கர்களும் அவரவர் நாட்டுக்கு குடிபெயரவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அதையும் மீறி துருக்கியிலேயே வாழ விழைந்தவர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து இஸ்லாமியர்களாகத் தங்களை மாற்றிக் கொண்டார்கள்.

இது போன்ற ஒரு பின்னணியை படம் தன் துவக்கத்தில் எடுத்துச் சொல்கிறது. இந்த ‘இனப் பரிமாற்றம்’ நடந்து முடிந்து ஐம்பது ஆண்டு காலத்திற்குப் பின் துருக்கியின் ஒரு மலை கிராமத்தில் அறுபது வயதை நெருங்கும் ஒரு பெண் நமக்கு அறிமுகமாகிறார். தனது மூத்த சகோதரி செல்மாவுடன் வாழ்ந்து வருகிற அந்த வயதான ஆயிஷாவுக்கு உடல்நிலை சரியில்லாத செல்மாவைப் பராமரிப்பதில் காலம் கழிகிறது. ஆயிஷாவிற்கு பக்கத்துவீட்டு சிறுவன் மெஹ்மூதிடம் ஆழமான அன்பு இருக்கிறது.  தனது பழைய செல்லரித்துப் போன புகைப்படப் பொக்கிஷங்களை அவனுக்கு காட்டி அதில் உள்ளவர்களைத் தன்னுடைய குடும்பத்தினர் என்று சொல்லுகிறாள்.

ஒரு நாள் செல்மா இறந்துபோகிறாள். அந்த கணத்திலிருந்து ஆயிஷா மற்றவர்களிடம் பேச்சை நிறுத்திவிட்டு மௌனமாகி விடுகிறாள். செல்மாவின் பிரிவு தாங்க முடியாத வேதனையைத் தந்திருக்கிறது என்று நினைக்கும் பக்கத்துவீட்டுக்காரர்கள் அவளை நன்றாக பராமரிக்கின்றனர். ஆனாலும் எப்போதும் போல் அல்லாமல் ஆயிஷா அவர்களிடமிருந்து விலகியே இருக்கிறாள். அவளுக்கு துர் ஆவி பிடித்துவிட்டதாக கருதி அதை ஓட்ட முயற்சி செய்கிறார்கள் கிராமத்து பெண்கள். அவர்களைத் திட்டி அனுப்பிவிடுகிற ஆயிஷாவின் விசித்திர போக்கு கிராமத்தினரிடம் வேகமாகப் பரவுகிறது. எப்போதும் மலைமுகட்டில் தனிமையில் அமர்ந்து மேகத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் ஆயிஷா மெஹ்மூத்திடம் மட்டும் பரிவு குறையாமல் இருக்கிறாள். அவனை ‘நிகோ’ என்ற புதிய பெயரால் அவள் திடீரென்று அழைக்கத் தொடங்குகிறாள்.

மெஹ்மூத் தன்னுடைய நண்பனான செங்கியிடம் அடிக்கடி ஆயிஷாவைப் பற்றி பகிர்ந்து கொள்கிறான். செங்கி, ‘நிகோ’ என்பது கிரேக்கப் பெயர் போல உள்ளது என்கிறான்.
இந்த நேரத்தில் அந்த ஊருக்கு வயதான புதிய ஆள் ஒருவர் வருகிறார். மெஹ்மூதும், செங்கியும் வந்தவரின் தோற்றத்தை வைத்து அவர் தான் நிகோவாக இருப்பார் என சந்தேகப்படுகின்றனர். அவர் போகுமிடமெல்லாம் பின்தொடர்கின்றனர். ஒரு சந்தர்ப்பத்தில் அவர் இவர்களிடம் பேச்சுக் கொடுக்க, வந்தவர் நிகோ இல்லை என்பதும் அவர் பெயர் தனாசிஸ் என்றும் தெரிய வருகிறது. அவரிடம், ‘உங்களின் உச்சரிப்பு ஆயிஷா பாட்டி பேசுவது போலவே இருக்கிறது’ என்கிறான் மெஹ்மூத். இதைக் கேட்டு ஆர்வமாகிறார் தனாசிஸ். தன்னை ஆயிஷாவிடம் அழைத்துப் போகும்படி மெஹ்மூதிடம் கேட்க, அவனும் உற்சாகமாக அழைத்து செல்கிறான். இவர்கள் போகிற சமயம் வழக்கம் போல மேகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிற ஆயிஷா, அன்றைய தினம் மெஹ்மூதைப் பார்த்ததும் பேசத் தொடங்குகிறாள்.

“அந்த மேகத்தைப் பார்... எனது அம்மா தோளில் சுமந்த சோஃபியாவுடன் அதில் தெரிகிறாள். ஆனால் என்னால் சோஃபியாவை தெளிவாக பார்க்க முடியவில்லை. அவளது தலை தொங்கிப் போயுள்ளது. அவள் உயிரோடிருக்கிறாளா என்பது தெரியவில்லை. அவர்களைப் பாதுகாக்க என்னுடைய அப்பா அங்கு வரப்போவதில்லை. ஞாபகமிருக்கிறதா? அவர் புரட்சியாளர்களால் சுடப்பட்டுவிட்டார். பார்...அம்மா குழந்தை சோஃபியாவை பனியில் போடுகிறாள். அங்கேயே அவளை விட்டு விட்டுச் செல்கிறாள். நினைவிருக்கிறதா நிகோ? ஒவ்வொரு நாளும் நமது உயிருக்காக எப்படி பயந்தோம் என்று? ஒவ்வொரு நாளும் நடப்பதற்காகவே நம் சக்தி முழுவதையும் செலவழித்தோம். ஒவ்வொருவராய் இறந்துபோவதை  ஒவ்வொரு இரவுகளிலும் பார்த்துக் கொண்டிருந்தோம். அவர்கள் என் நமக்கு அப்படி செய்தார்கள் நிகோ? இரண்டு நாட்கள் மட்டுமே நடக்கவேண்டும் என்று தானே சொன்னார்கள். ஆனால் மெர்சினை அடைய எத்தனை வாரங்கள் நடந்து கொண்டே இருந்தோம்? நமது மரணங்களை அவர்கள் பார்த்தபடியே இருந்தார்கள். நான் யாரென்று உனக்குத் தெரிய வேண்டுமா? நிகோ எனது சகோதரன். நான் எலினி தெர்ஜிடிஸ். போந்துஸ் இனத்தைச் சேர்ந்த மரிகாவின் மகள். அப்பா இறந்து போவதற்கு முன், நிகோவை பாதுகாக்க வேண்டும் என்று என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார். அவர் என்னை நம்பினார்” என்று ஆயிஷா நடுங்கும் குரலில் சொல்றாள்.   ஆயிஷா பேசப் பேச மெஹ்மூத் கண்கலங்குகிறான். தனாசிஸினால் அவளது உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆயிஷாவை இருவருமாக சேர்ந்து வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். “என்னுடைய அப்பா சுலைமான் என்னைக் கண்டெடுத்தப்போது நான் பயந்து போன மிருகம் போல பனியில் கிடந்தேன். சுலைமான் எனக்கு புது அப்பாவாக கிடைத்தார். அவரது மகள் செல்மா எனது சகோதரியானாள். அவர்கள் தான் நான் மீண்டும் மனுஷியாக மாறுவதற்கு உதவி செய்தார்கள். நிகோ மிச்சம் மீதி இருக்கிற அனாதைகளோடு பயணத்தைத் தொடர வேண்டும் என நினைத்தான். திரும்பவும் நடக்கவேண்டும் என்பதை என்னால் நினைக்கக் கூட முடியவில்லை. ஐம்பது வருடங்களாக நான் யாரென்ற சந்தேகம் யாருக்கும் வந்ததில்லை. ஐம்பது வருடங்களில் எனது சொந்தமொழியைக் கூட பேசியதில்லை. செல்மாவுடன் இந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம். இப்போது செல்மாவும் என்னுடன் இல்லை. நிகோ போய்விட்டான். அவனைத் தொலைத்துவிட்ட குற்றஉணர்வு என்னை வாட்டுகிறது” என்கிறாள். ஆயிஷா போலவே அகதியாக ஊர் ஊராகத் திரிந்த தனாசிஸுக்கு அவளுடைய துயரம் வேதனையைத் தருகிறது.

தனாசிஸ் கிளம்பிப் போன சில நாட்களில் ஆயிஷாவுக்கு அவரிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. அதில் நிகோ உயிரோடிருப்பதாக செய்தியும், நிகோவின்  முகவரியும் தரபட்டிருக்கிறது. ஆயிஷாவுக்குப் பழைய உற்சாகம் வந்துவிடுகிறது. நிகோவைத் தேடி தனது மலை கிராமத்திலிருந்து பல மைல்கள் தொலைவிலிருக்கும் நகரம் நோக்கி பயணம் ஆகிறாள் ஆயிஷா.
இத்தனை வருடங்கள் அவன் நினைவாக இருந்த ஆயிஷாவுக்கு நிகோவை நல்ல நிலையில் பார்த்ததும் சந்தோசமாகிறது. தன்னை அவனுடைய சகோதரி என்று அறிமுகப்படுத்திக் கொள்ள, நிகோ சட்டென்று அவளை வீட்டு வாசலிலேயே நிற்க வைத்து கதவை மூடி விடுகிறான். என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிற ஆயிஷாவை நிகோவின் மனைவி தான் வீட்டினுள் அழைத்துப் போகிறாள். மறுநாள் நிகோவுடன் பேசிக்கொள்ளலாம் என சமாதானம் சொல்கிறாள்.  அன்றைய இரவு நிகோவும், மனைவியும் பேசுவது இவளுக்கு கேட்கிறது. நிகோவுக்கு சோஃபியாவை நினைவிருக்கிறது. அவளை அவள் அம்மா புதைத்தது நினைவில் இருக்கிறது. ஆனால் ஒரு சகோதரி இருந்தாள் என்பதையே அவன் மறந்து போயிருக்கிறான். வாழ்நாள் முழுவதும் அவனுக்கு துரோகம் இழைத்ததாய் குற்றஉணர்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆயிஷாவுக்கு இது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.
மறுநாள் தனாசிஸைத் தேடித் போகும் ஆயிஷா எதிர்வரும் ஒரு மூதாட்டியிடம் தனாசிஸ் வீட்டைப் பற்றி விசாரிக்க, அதற்கு அவள் தனாசிஸ் வெளியில் போயிருக்கிறார். என் வீட்டுக்கு வாயேன்” என்று அழைத்துச் செல்கிறாள். தன்னைப் போலவே மூதாட்டியும் ஒரு அகதி என்பது ஆயிஷாவுக்குத் தெரியவருகிறது. போகும்போது, ஆயிஷாவிடம், ‘உன் பெயர் என்ன?’ என்று அந்த மூதாட்டிக் கேட்க, ‘எலினி’ என்கிறாள் ஆயிஷா. நீண்ட நாள் பழகியதைப் போல இருவருக்குள்ளும் நெருக்கம் வந்துவிடுகிறது.  ‘நான் பிறந்த என் கிராமத்தில் பெரிய மல்பெரி மரம் இருக்கிறது. அதனடியில் தான் என்னைப் புதைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்’ என்று பேசிக் கொண்டே வருகிறாள் மூதாட்டி. அந்த மூதாட்டியிடம் பேசுவது ஆயிஷாவுக்கு உற்சாகத்தைத் தருகிறது.
அடுத்தக் காட்சியில் ஆயிஷா ஒரு தேவாலயத்திற்குள் நுழைகிறாள். பிறப்பில் கிருத்துவளான ஆயிஷா தனது இழந்து போன தரிசனத்தைப் பார்ப்பது போலவே தேவாலயத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பார்த்தபடி இருக்கிறாள். வீடு திரும்புகிற ஆயிஷா மீண்டும் நிகோவை சந்திக்கிறாள். அவன் முன்னால் பல புகைப்படங்கள் கிடக்கின்றன. ஒவ்வொன்றாய் காட்டி, ‘இது என்னுடைய பள்ளிக்காலத்தில் எடுத்தது.....இது நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் எடுத்துக் கொண்டது.... இந்தப் புகைப்படம் திருமணத்தின் போது எடுத்தது. இது என்னுடைய குழந்தையின் ஞானஸ்நானத்தின் போது எடுக்கப்பட்டது...” என அவன் காட்ட காட்ட தனது தம்பியின் வாழ்கையை புகைப்படங்கள் மூலம் தெரிந்து கொண்ட மகிழ்ச்சியிலும் நிம்மதியிலும் காணப்படுகிறாள் நிகோ. புகைப்படங்களை எல்லாம் காட்டியபின், “இது தான் என் வாழ்க்கையின் சொந்தங்கள். இதில் நீ எங்கே இருக்கிறாய்? என்னுடைய சகோதரி என்று சொல்லிக்கொண்டு நான் உன்னை மன்னிக்க வேண்டும் என்று கேட்கிறாய்...” என்கிறான். அவனையே கூர்ந்து பார்த்தபடி இருக்கிற ஆயிஷா தன்னிடமுள்ள ஒரு நைந்த புகைப்படத்தை எடுத்து அவனிடம் கொடுக்கிறாள். அது சிறுவயது குடும்பப்படம். அதில் ஆயிஷாவும், அவளது தம்பியான நிகோவும் இருக்கிறார்கள். திகைத்துப் போகிறான் நிகோ. அந்த உறைந்த அமைதியோடு படம் முடிகிறது.

“ஆயிஷா போலவே பல ஆயிரக்கணக்கான மக்கள் துருக்கியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்களது அடையாளத்தை மறைத்துக் கொண்டு இவர்கள் வாழ்வதற்கு ஒரே காரணம் பயம் மட்டுமே. ஒரு அரசாங்கம் சாதாரண மக்கள் மீது எத்தகைய அழுத்தத்தைத் தருகிறது என்பதையே நான் இந்தப் படம் மூலமாக சொல்ல விரும்பினேன்” என்கிற Yesim ustaglou  துருக்கிய பெண் இயக்குனர். இவரது முந்தைய படங்களும் தனது இனத்தின் வேரைத் தேடுகிற மக்களைப் பற்றியதாகவே இருக்கிறது.
இந்தப் படத்தில் வருகிற மெஹ்மூத் சந்தித்த மனிதர்கள், சம்பவங்கள் எல்லாமே  Yesim ustaglou தனது சிறுவயதில் சந்தித்தவை. அதனைப் படமாக்க வேண்டும் என்று நினைத்தப் போது கிரேக்க எழுத்தாளர் ஜார்ஜ் அன்ட்ரியடிஸ் எழுதிய ‘தமன்னா’ என்கிற நாவல் கிடைத்திருக்கிறது. தனது சிறுவயது சம்பவங்களைப் போலவே எழுதப்பட்டிருக்கிற நாவலைப் படித்ததுமே அதனை படமாக்க முடிவு செய்துள்ளார் yesim.
ஆயிஷாவாகவும், தனாசிஸாகவும் நடித்த இருவரைத் தவிர மற்ற எல்லோருமே தொழில் முறை நடிகர்கள் இல்லை. எல்லோருமே அந்த மலை கிராமத்தை சேர்ந்த மக்கள். இன்று வரையிலும் தங்களது வாழ்க்கை குறித்த எந்த ரகசியத்தையும் வெளியிட பயப்படும் மக்கள் உலகம் முழுவதுமே இருக்கிறார்கள். சிறுவயதில் அவர்கள் வாழ்ந்த  சூழலும், அனுபவங்களுமே அவர்களுக்குள் பதிந்து போயிருக்கிறது. சுயத்தோடும், அடையாளத்தோடும்  வாழவிடாமல் அதிகாரத்தினால் சிதறடிக்கப்பட்டு அகதிகளான மக்கள் மனதுக்குள் சிதைந்து போயிருப்பதைக் காட்டும் திரைப்படங்களில் முக்கியமானப் படமாக ‘waiting for the clouds’ தன்னை நிறுத்திக் கொள்கிறது.   

(ஜா. தீபா சென்னையில் வாழும் எழுத்தாளர். திரைப்படத் துறையில் உதவி இயக்குநராகப் பணிபுரிகிறார்)