நடிகர் மாரிமுத்து
நடிகர் மாரிமுத்து

மாரிமுத்துவுக்கு நேரில் அஞ்சலி: உடைந்து அழுத பிரபலங்கள்! #RIPMarimuthu

இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலை உயிரிழந்த நிலையில், திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்திவருகின்றனர். இளம் வயதினர் முதல் மூத்த கலைஞர்கள்வரை பலரும் மாரிமுத்துவின் உடலைப் பார்த்து உடைந்து அழுதபடி அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி.” என்று தெரிவித்துள்ளார்.

“மாரிமுத்து சார் இப்போது இல்லை என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமாக உள்ளது. நாங்கள் இருவரும் ஒன்றாக வேலை செய்த காலங்களை நினைவுகூர்கிறேன். அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.” என்று நடிகர் சிலம்பரசன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

மாரிமுத்து இயக்குநராக அறிமுகமான ’கண்ணும் கண்ணும்’ திரைப்படத்தில் நாயகனாக நடித்த பிரசன்னா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மாரிமுத்துவின் மறைவு செய்திகேட்டு மிகவும் துயருற்றேன். நாங்கள் கண்ணும் கண்ணும் புலிவால் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றினோம். சகோதரர்கள் போல பழகிவந்தோம். பல விஷயங்களில் எங்களுக்கு மாற்றுக்கருத்துகள் இருந்தன. அவருடைய வாழ்க்கை எளிதானது அல்ல. இறுதியாக நடிகராக நன்றாக நடித்துவந்தார். இன்னும் சில காலம் அவர் அதில் தொடர்ந்திருக்க வேண்டும். அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். போயிட்டுவாப்பு...” என பதிவிட்டுள்ளார்.

மாரிமுத்துவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் கூறியது:

நடிகர் எஸ்.வி.சேகர்

சமீபத்தில் தொலைக்காட்சித் தொடரில் உச்சகட்ட புகழை அடைந்த ஆண் நடிகர் மாரிமுத்து. எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து அனைவர் உள்ளத்திலும் இடம் பிடித்தவர். சினிமாவை நூறு சதவீதம் நேசித்த நபர்.

நடிகர் சரத்குமார்

இன்னைக்கு காலையில் தான் ஜெயிலர் படம் பார்த்துட்டு இருந்தேன். அதுக்குள்ள இப்படி ஒரு செய்தி வந்தது. வளர்ந்து வரும் கலைஞன் அவர்.

இயக்குநர் - நடிகர் எஸ்.ஜே சூர்யா

வசந்த் சாரிடம் நான் உதவி இயக்குநராக வேலை பார்த்தபோது, அவர் இணை இயக்குநர். நல்ல மனிதர். நல்ல மனிதர், அனைவரையும் சிரிக்க வைக்கக்கூடியவர். வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வரும்போது அவருக்கு இப்படி ஆனது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

இயக்குநர் மாரி செல்வராஜ்

பரியேறும் பெருமாள் படத்தில் ஜோவுக்கு அப்பாவாக நடித்திருந்தார். படத்தின் வெற்றிக்கு அது முக்கியமான காரணம். நல்ல சமுதாயத்தை, சினிமாவை, அரசியலை பேசக்கூடிய மனிதரை இழந்திருக்கிறோம். அவர் பேசும் வீடியோவை எனக்கு அனுப்பி விவாதிப்பார். என்னுடைய அடுத்த படத்தில் நடிக்க அவரிடம் பேசியிருந்தேன்.

மதன் கார்கி

மாரிமுத்துவின் கையெழுத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவருடைய கையெழுத்து இயந்திரத்தால் பதிவு செய்யப்பட்டது போன்று இருக்கும். அவரைப் போலவே எழுத முயன்றிருக்கிறேன். யதார்த்த நடிப்பைக் கொடுக்கக் கூடியவர். அவர் நினைவு என்றும் நம்முடன் இருக்கும்.

நடிகர் சூரி

எனக்கு ரொம்ப பிடித்த ஐந்து நண்பர்களில் அண்ணன் மாரிமுத்து ஒரு ஆள். இப்படியொரு செய்தி வந்தபோது அது ஒரு வதந்தியாக இருக்கக் கூடாதா என்று நினைத்தேன்.

நடிகர் ரோபோ சங்கர்

எல்லோருக்கும் பிடித்த மனிதராக இருந்தவர் மாரிமுத்து. நான், சிநேகன், விமல், இளவரசு ஆகியோ ஜிம்முக்கு போவோம். எந்த கெட்ட பழக்கமும் இல்லாத மனிதர். தென் மாவட்டத்துக்காரருக்கான குரல், உடல்மொழி அவரிடம் அழகாக இருக்கும்.

நடிகை சத்யப்ரியா

அவருடன் நடித்ததை மறக்க முடியாது. அவர் ஒரு வாத்தியார் மாதிரி. தமிழ் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று எல்லோருக்கும் சொல்லிக்கொடுப்பார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com