யாதும் ஊரே யாவரும் கேளிர்: திரைவிமர்சனம்!

யாதும் ஊரே யாவரும் கேளிர்: திரைவிமர்சனம்!

உலக நாடுகளின் எல்லைக் கோடுகளும், நாடுகளின் ஆவணங்களும் அகதிகளை எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறது என்பதை பேச முனைகிறது விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்திருக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம்.

இலங்கை உள்நாட்டுப் பேரினால் அனாதையாக திரியும் சிறுவன் புனிதன் (விஜய்சேதுபதி) ஒரு பாதிரியாரிடம் (ராஜேஷ்) வந்து சேர்கிறான். மனதில் பதிந்துப் போன பேரின் பெரும் சத்தம், அவனை தொந்தரவு செய்கிறது. இதை அறியும் பாதிரியார், புனிதனை இசை பயில்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறார். இசையில் வல்லவனாக வரும் புனிதன் நாடற்றவனாகவும், அடையாளமற்றவனாகவும் இருக்கிறான். இந்த காரணங்கள் அவனது புகழுக்குத் தடையாக வந்து நிற்க, இவைகளை தாண்டி புனிதன் இசைக்கலைஞனாக ஜெயித்தானா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், அவர் அந்தப் படத்திலிருந்து விலகினார். ஆனால், அதற்கு முன்பாகவே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’படத்தில் ஈழத்தமிழர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கிற்கு முன்பாகவே இந்தப் படத்தின் பணிகள் முடிந்திருந்தாலும், படம் இப்போதுதான் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், விவேக், மோகன் ராஜா, மகிழ்திருமேனி, கனிகா, ராஜேஷ், ரித்விகா உட்படப் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஈழப்போர், தமிழ்நாட்டில் இலங்கை அகதிகளின் நிலை என்னவாக உள்ளது என்பதை அடிப்படையாக வைத்து திரைக்கதையை எழுதியுள்ளார் இயக்குநர். முதல் பாதியில் திருப்பங்களோ, உணர்ச்சிப் பூர்வமான காட்சிகளோ இல்லாமல் செல்கிறது. இரண்டாம் பாதி அந்த குறைகளை போக்குகிறது. இறுதிக் காட்சியில், விஜய் சேதிபதி, அகதிகள் குறித்து உலக நாடுகளுக்கு முன்வைக்கும் கோரிக்கைகள் சப்பென்று உள்ளது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதியிடம் சுமாரான நடிப்பையே எதிர்பார்க்க முடிகிறது. நாயகி மேகா ஆகாஷ், விவேக், மகிழ் திருமேனி, கனிகா உள்ளிட்ட பலரும் நன்றாக நடித்திருந்தாலும், அவர்களின் கதாபாத்திரம் வலுவாக எழுதப்படாதது பெரும் குறை.

இசை சார்ந்த படம் என்பதால் நிவாஸ் கே பிரசன்னா அதிகம் உழைத்திருப்பார் போல. படத்தின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை அவரின் இசையே படத்தை தாங்கிப் பிடிக்கிறது. வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவும் கவனிக்க வைக்கிறது. குறிப்பாக இலங்கையில் நடந்த போர் காட்சிகள் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

‘இங்க வாழ ஆவணங்கள் வேண்டும்’, ’இங்க இங்கிலீஸ்ல பேசனத்தான் தூக்கி வச்சுப்பானுங்க’ இப்படி படத்தில் வரும் ஓரளவு கவனத்தை ஈர்க்கிறது.

படத்தின் தலைப்பிற்கு ஏற்ற நியாயத்தை கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் படக்குழுவால் செய்திருக்க முடியும். அதை ஏனோ தவறவிட்டிருக்கிறார்கள்!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com