பிரிவோம் ஆனால் சந்திப்போம்! பிரபலங்களின்  மணமுறிவு அறிவிப்புகள்!

பிரிவோம் ஆனால் சந்திப்போம்! பிரபலங்களின் மணமுறிவு அறிவிப்புகள்!

மூத்த நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி சமீபத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபரான ருபாலி பருவாவை மணந்துகொண்ட செய்தி சமூக ஊடகங்களில் பெரிதாக கவனிக்கப்பட்டது. அசிஷ் வித்யார்த்திக்கு இது இரண்டாவது திருமணம். அவர் மணமுறிவு பெற்றவர். ருபாலி பரூவா சில ஆண்டுகளுக்கு முன்பாக கணவரை இழந்தவர். இருவருக்கும் பழகியதில் பிடித்துப்போய் மணம் செய்துகொண்டனர். இந்நிலையில் ஆசிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவியான பில்லு வித்யார்த்தி தங்கள் மணமுறிவு பற்றி அழகான விளக்கம் அளித்ததுடன் திருமணத்தையும் வாழ்த்தி இருந்தார்.

‘திருமணம் மற்றும் விவாகரத்து பற்றி இவ்வளவு முதிர்ச்சியான, பக்குவமான விளக்கத்தை இதுவரை பார்த்ததில்லை’ என பில்லு வித்யார்த்தியின் பேட்டியைக் கண்டு பலரும் மெய்சிலிர்த்துப் போனார்கள். அதற்குக் காரணம், குடும்ப நல நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கும் விவாகரத்து வழக்குகளே!

 திருமணத்தை அளவுக்கு அதிகமாக புனிதப்படுத்தும் இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் இன்று திருமண உறவு பெரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறது. ஆனாலும் சிலர், திருமணத்தை போன்றே விவாகரத்தையும் இயல்பானதாக்க முயற்சி செய்கின்றனர். சமீபத்தில் சீரியல் நடிகை ஷாலினி எடுத்த, விவாகரத்து போட்டோ சூட்டே பிரபலமான உதாரணம்.

நாக சைதன்யா - சமந்தா
நாக சைதன்யா - சமந்தா

கடந்த இரண்டு - மூன்று வருடங்களில் திருமண உறவிலிருந்து பிரிந்த தனுஷ் – ஐஸ்வர்யா, நாக சைதன்யா - சமந்தா, ஆஷிஷ் வித்யார்த்தி – பில்லு வித்யார்த்தி தம்பதிகள், தங்களின் பிரிவு அறிவிப்பை அல்லது அதற்கான விளக்கத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருப்பதை பார்க்க முடியும். “நாங்கள் இருவரும் பரஸ்பரமாக பிரிகிறோம்” என்பது தான் அது. இதுபோன்ற விளக்கக் குறிப்புகள் விவாகரத்திற்குப் பின் ‘உலகம் அழிந்துவிடாது’ என்ற உண்மையை இருபாலருக்கும் உணர்த்துபவை.

“பல உரையாடல்கள் மற்று யோசனைகளுக்குப் பிறகு இருவரும் கணவன் மனைவி என்ற உறவில் இருந்து பிரிந்து, இருவருடைய தனிப்பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளோம். எங்களுடைய இந்த முடிவுக்கு மதிப்பளித்து, இந்த கடினமான சமயத்தில் எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அனைவரும் மதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். உங்கள் அனைவரது அன்புக்கும் நன்றி," சமந்தாவும் – நாக சைதன்யாவும் பிரிவதாக தங்களது சமூக வலைத்தள பக்கங்களில், 2 அக்டோபர் 2021 அன்று அறிவித்தனர். இவர்களின் மண முறிவே அதிகம் பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டது.

அதேபோல், மற்றொரு பிரபல ஜோடிகளான தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதிகள் தங்களது விவாகரத்தைக் கடந்த  ஜனவரி 2022ஆம் ஆண்டு பரஸ்பரமாக அறிவித்தனர்.   “நண்பர்களாகவும், தம்பதியாகவும், பெற்றோர்களாகவும், ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும் 18 வருடங்கள் இணைந்திருந்தோம். எங்களுடைய பயணத்தில் வளர்ச்சி, புரிதல், சரிப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் மாற்றியமைத்தல் என இருந்தோம். இன்று நாங்கள் எங்கள் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம்…தனுஷும் நானும் ஒரு ஜோடியாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம், மேலும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவுசெய்துள்ளோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்கத் தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும் என்று”இருவரும் தெரிவித்திருந்தார்கள்.

 இது தொடர்பாக எழுத்தாளர் அபிலாஷ் சந்திரனிடம் பேசினோம், “பெரும்பாலான பிக்கல் பிடுங்கல் பணம் சார்ந்த விஷயத்தில் தான் உள்ளது. பணம் இருந்தால் எல்லாம் சமரசத்தில் தான் முடிகிறது. பிரபலங்கள் இப்படியான முடிவுகளை எடுத்து, திருமண உறவிலிருந்து பிரிந்து நண்பர்களாக இருப்பது என்பது நல்ல விஷயம் தான். விரோதம் இல்லாமல் பிரிந்துவிடுவது நல்ல வாழ்க்கை முறை தான். உணர்வுப்பூர்வமான மோதலாக அதை மாற்றாமல் இருப்பது நல்லது.” என்றார்.

ஆஷிஷ் வித்யார்த்தி – பில்லு வித்யார்த்தி
ஆஷிஷ் வித்யார்த்தி – பில்லு வித்யார்த்தி

சமீபத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பில்லு வித்தியார்த்தி பேட்டி முக்கியமானது. தன்னுடைய முன்னாள் கணவர் ஆஷிஷ் வித்தியார்த்தி திருமணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து அவர் கொடுத்த போட்டி: “நானும் ஆஷிஷும் கடந்த 2021-இல் விவாகரத்து பெற்றோம். அதை நாங்கள் வெளி உலகிற்குப் பிரபலப்படுத்த விரும்பவில்லை. நாங்கள் இருவரும் இன்றளவும் நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம்.

எங்கள் பிரிவை ஆஷிஷ் தான் அழகானதாக மாற்றினார். அவரது ஆதரவு இல்லாவிட்டால் இது நடந்திருக்காது. வழக்கமாக விவாகரத்தின்போது வழக்கறிஞர் அலுவலகத்தில் பல அசிங்கமான சண்டைகள் நடக்கும். எங்கள் பிரிவு அழகாக அமைந்தது. எங்கள் இருவருக்குமே அதை எளிமையாக்கினார் ஆஷிஷ்.” என கூறியிருந்தார்.

இது தொடர்பாக எழுத்தாளர் கீதா இளங்கோவனிடம் பேசினோம்,”பில்லு வித்தியார்த்தியின் பேட்டியைத்தான் நான் படித்துள்ளேன். மற்ற இருவருடையதைப் படிக்கவில்லை. நண்பர்களாக தங்களது திருமண உறவை விட்டுப் பிரிவது நல்ல விஷயம். அதே போல் அவர்கள், தங்களின் இமேஜை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் கூட இப்படி அறிவிக்கலாம்.

 திருமணத்தை எப்படிக் கொண்டாடுகிறார்களோ, அதேபோல பிரிவையும் பார்க்க வேண்டும். அது தவிர்க்க முடியாதது. ஒவ்வொரு நிமிடமும் நாம் மாறிக் கொண்டே இருக்கிறோம். அதனால் நம் சிந்தனையும் மாறும். கருத்துகள் மாறுவதை நான் பரிணாம வளர்ச்சியாகப் பார்க்கிறேன்.  சில காலங்களுக்கு முன்பு பிடித்தவர் இப்போது பிடிக்காமல் இருக்கலாம். அதனால் தனியாகவோ, அல்லது இன்னொருவருடனோ இருந்தால் நன்றாக இருக்கும் என இருவரும் நினைக்கலாம். அதனால், அவர்கள் நண்பர்களாக பிரிகிறோம் என அறிவிக்கிறார்கள். இது பாராட்டப்பட வேண்டியது. அதேபோல், விவாகரத்து எங்கள் இருவர் சம்மந்தப்பட்டது, அதனால் நாங்களே முடிவு எடுத்துக் கொள்கிறோம் என்று சொல்வதை ஒரு சலுகையாகவே பார்க்கிறேன். அது எல்லோருக்கும் கிடைத்திருக்கிறதா? என்றால் இல்லை.” என இன்னொரு கேள்விக்கான பதிலையும் சொன்னார்.

பிரபலங்களின் விவாகரத்து அறிவிக்கைகள் விளக்கங்கள் முதிர்ச்சியும் பக்குவமும் கொண்டதாக இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்! அதே காரணங்கள் சாமானியர்களுக்கு இருக்குமா? என்பது தான் கேள்விக்குறி. மணமுறிவுகள் இன்றைக்கு சாதாரணமாகிவிட்ட சூழலில் எல்லா தரப்புகளும் இதை சகஜமாக மாற்றி, எளிதாக்கி முன்னகர முன்வரவேண்டும்!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com