“பழைய கதைகளை திரையில் பேசினால் முற்போக்கு, புரட்சி...” – மோகன் ஜி-யின் அதிரடி பதிவு!
“செல்போன் பயன்படுத்தும் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்ற தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரியின் கருத்தைப் பகிர்ந்துள்ள இயக்குநர் மோகன் ஜி, ”இந்த அறிவுரை சாதி வெறியாகவும், பிற்போக்குத்தனமாகவும் பார்க்கப்படும்” என கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையமும், தேசிய மகளிர் ஆணையமும் இணைந்து ‘சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள்’ என்ற தலைப்பில் திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் நேற்று நிகழ்ச்சி நடத்தியது. இதில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், கல்லூரி மாணவிகள் டிபி-யில் புகைப்படங்களை வைக்க வேண்டாம். புகைப்படங்களை எடுத்து மார்ஃபிங் செய்கிறார்கள். டெக்னாலஜியில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ, அதே அளவு தீமைகளையும் கொண்டுள்ளது அதனை எப்படி ஆள வேண்டும் என்பது முக்கியம்” என கூறியிருந்தார்.
இது தொடர்பான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ளார் இயக்குநர் மோகன் ஜி. “இந்த அறிவுரை சாதி வெறியாகவும், பிற்போக்குத்தனமாகவும் பார்க்கப்படும்..இன்றைய சமுதாயத்தில் நடக்கும் எந்த தவறையும் திரைப்படத்தில் காட்ட கூடாது.. மீறினால் சாதி வெறியன், பிற்போக்குவாதி பட்டம் தரப்படும்.. பழைய கதைகளைத் திரையில் பேசினால் முற்போக்கு, புரட்சி..” என காட்டமாக பதிவு செய்துள்ளார்.
மோகன் ஜி இயக்கத்தில் வெளியான பகாசூரன் திரைப்படத்தில் செல்போன் பயன்படுத்தும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னையை பேசியிருந்தார். அதை பலரும் விமர்சித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.