கழுவேர்த்தி மூர்க்கன்: திரைவிமர்சனம்!

கழுவேர்த்தி மூர்க்கன்: திரைவிமர்சனம்!

தமிழ் சினிமாவில் தென்மாவட்டங்களை மையப்படுத்திய கதை என்றால், அவை சாதி பெருமிதத்தைப் பேசுவதாகத்தான் இருக்கும். இந்த வழக்கத்திலிருந்து மாறி, சமாதானம் பேசினால் அதுதான் கழுவேர்த்தி மூர்க்கன்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தெக்கப்பட்டி கிராமம் தான் படத்தின் கதைக்களம். மேலத்தெருவை சேர்ந்த அருள் நிதியும், கீழத்தெருவை சேர்ந்த சந்தோஷ் பிரதாபும் நெருங்கிய நண்பர்கள். இவர்களின் நட்பு சாதி மற்றும் அரசியல் ஆதிக்கம் கொண்டவர்களின் கண்ணை உறுத்த சந்தோஷ் பிரதாப் படுகொலை செய்யப்படுவார். அந்த படுகொலைக்கு என்ன காரணம்? நண்பனை கொன்றவர்களை அருள்நிதி என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சாதி கடந்த நட்பால் இரு நண்பர்கள் எதிர்கொள்ளும் சதியும், துரோகம், உயிரிழப்பும் தான் படத்தின் கதை என்றாலும், அதை மிக கவனமாக கையாண்டுள்ளார் இயக்குநர் சை கெளதம ராஜ். நல்லவர்களும் கெட்டவர்களும் எல்லா சாதியிலும் இருப்பார்கள் என்பதை பிசகல் இல்லாமல் சொல்லியிருக்கிறார்.

கதாபாத்திர அறிமுகம், அதற்கான பின்புலம், காதல் என படத்தின் முதல் பாதி மிதமான வேகத்திலும் செல்கிறது. இரண்டாம் பாதியில் பாசமும், பழிவாங்கலும் என திரைக்கதையில் அனல் பறக்கிறது. படத்தின் முக்கிய குறியீடுகளாக அம்பேத்கர் சிலையும், கழுமரமும் உள்ளன.

மூர்க்கசாமி கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை துளியும் குறையில்லாமல் கொடுத்திருக்கிறார் அருள் நிதி. சண்டைக் காட்சிகளில் எதிரிகளைப் பந்தாடுவது, அவரின் உயரத்திற்கு இயல்பாக வருகிறது. ஆனால் காதல் காட்சிகளில் கொஞ்சம் பேக் அடிக்கிறார். துஷாரா விஜயனுக்கு வழக்கம் போல் நாயகனை மிரட்டும் கதாபாத்திரம். தெலுங்கு பேசும் பெண்ணாகக் கவர்கிறார். படத்தின் மற்றொரு நாயகன் என்று சொல்லும் அளவிற்கு சந்தோஷ் பிரதாபின் கதாபாத்திரம் உள்ளது. அரசியல் விழிப்புணர்ச்சி, சமூக மாற்றம் பேசும் அற்புதமான கதாபாத்திரம். அதில் தன்னைப் பொருத்திக் கொண்டுள்ளார் அவர். மாவட்டச் செயலாளராக வரும் ராஜசிம்மன், அருள்நிதியின் அப்பாவாக நடித்துள்ள யார் கண்ணன், முனிஷ்காந்த், பத்மன் மற்றும் சந்தோஷ் காதலியாக வரும் சாயாதேவி ஆகியோர் குறைகாண முடியாத அளவிற்கு நடித்துள்ளனர்.

‘அவ கண்ணைப் பார்த்தால்...', ‘செந்தாமரை’ பாடல் கேட்கும் படி உள்ளது. அருள் நிதியின் ஆவேசத்திற்கு ஏற்ற பின்னணி இசையை அமைத்துள்ளார் இமான். படத்தின் பலமாக ஸ்ரீதரின் ஒளிப்பதிவை சொல்லலாம். ராமநாதபுரத்தின் நிலவியலை அப்படியே திரையில் காட்டியுள்ளார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பும் சிறப்பு. அதேபோல், கணேஷ்குமாரின் சண்டைப் பயிற்சியில் ரத்தம் தெறிக்கிறது. பல வசனங்கள் மிகவும் கூர்மையாக உள்ளன.

‘கம்பி கிடைத்தால் போதுமே… கொடிய மாட்டிட்டு வந்துடுவீங்க’ என மாவட்டச் செயலாளரை பார்த்து அருள் நீதி பேசும் வசனமும், ‘இந்த மாதிரி மீசை வைக்க கூட சாதி முக்கியம் டா’ என சந்தோஷ் பிரதாப் பேசும் வசனம் கதைக்கு பலம் சேர்க்கிறது.

படத்தின் ஆரம்பத்தில் காட்சிகள் துண்டு துண்டாக இருப்பது கொஞ்சம் சுவாரசியமில்லாமல் இருக்கிறது. கருவேல காட்டுக்குள் ஒளிந்திருக்கும் அருள்நிதியை கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறை தடுமாறுகிறது எல்லாம் கொஞ்சம் சறுக்கல் தான்.

கழுவேர்த்தி மூர்க்கன் - சாதியம் என்பது பிறசாதிகளுக்கு மட்டும் எதிரானது அல்ல; அது சொந்தச் சாதியினரையும் பலிகொள்ளும் என்பதை அழுத்தமாக பேசும் ஒரு வணிகப்படம்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com