அகிலன்: திரைவிமர்சனம்!

அகிலன்: திரைவிமர்சனம்!

எளிய மக்களின் பசியைத் தீர்க்க அதிகார வர்க்கத்துக்கு எதிராகப் போராடும் தந்தை மகனின் கதையே அகிலன் திரைப்படம்.

ஆஸ்திரேலியா தப்பிச் செல்ல முயன்ற அகதி மக்கள் ஒரு சிறு தீவில் மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் கொண்டு வந்த உணவுப் பொருள்கள் காலியாக பசியால் தவிக்கின்றனர். அவர்களுக்கு உதவப் போய் நண்பர்களின் துரோகத்தால் கொலை செய்யப்படுகிறார் அகிலனின் (ஜெயம் ரவி) அப்பா. அவரைப் போலவே பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் அகிலன் யாரையெல்லாம் எதிர்க்கிறார், தனது தந்தையின் கனவை நிறைவேற்றினாரா இல்லையா என்பதே படத்தின் கதை.

இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் நல்ல கதையை தேர்ந்தெடுத்திருந்தாலும், அதை திரைக்கதையாக்குவதில் முற்றிலும் கோட்டை விட்டிருக்கிறார். படத்தின் முதல் பாதி அடி – தடி, வெட்டு - குத்து என நகர, அதற்கான காரணம் இரண்டாம் பாதியில் சொல்லப்படுகிறது.

முறுக்கேறிய உடலுடன் வரும் நாயகன் ஜெயம்ரவி தனது ஆக்ரோஷமான நடிப்பால் நம்மையும் முறுக்கேற்றுகிறார். போலீஸ் கதாபாத்திரத்தில் வரும் நாயகி பிரியா பவானி சங்கர் முகத்தைக் கொஞ்சம் அதிக நேரமாவது காட்டியிருக்கலாம். அவருடைய ரசிகர்கள் ஆறுதல் அடைந்திருப்பார்கள். வழக்கம் போல் தன்யா ரவிச்சந்திரனுக்கு படத்தில் ஐந்து நிமிடங்கள் தான் வேலை.. தாதாவாக வரும் ஹரீஷ் பேராடி, சிராக் ஹானி, ஹரிஷ் உத்தமன் என பலர் பார்வையாலேயே நம்மை மிரட்டி எடுக்கின்றனர். வில்லனாக வரும் தருண் தன்னுடைய கதாபாத்திரத்திற்குக் கூடுதலாக மெனக்கெட்டிருக்கலாம்.

சர்வதேச அளவுக்கு தொடர்புடைய தனது முதலாளி, உள்ளூர் தாதா, நண்பன் என பலரையும் எதிர்கொள்ளும் ஜெயம்ரவி செய்யும் கொலை மற்றும் கடத்தல்கள் நம்பும்படியாக இல்லை. வில்லனால் சுடப்பட்டு கடலில் வீழ்ந்து மூழ்கிவிடும் ஜெயம் ரவி, இறுதிக் காட்சியில் உயிருடன் வருகிறார். அது எப்படி சாத்தியம்? இப்படி படத்தில் நிறை லாஜிக் மிஸ்ஸிங்.

விவேக் ஆனந்தின் ஒளிப்பதிவு துறைமுகத்தைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. சாம் சி.எஸ் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு கைகொடுக்கவில்லை.

கடல் வாணிபம், கடத்தல்கள், ஈழத் தமிழர் விவகாரம், பசி போன்ற அழுத்தமான விஷயங்களை பேசவந்த அகிலன் திசைதெரியாமல் தவிக்கிறான்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com