நடுத்தட்டு வயதுப் பிரிவினர் அதிகமாகப் புழங்கும் முகநூல் சமூக ஊடகத்தில் பரவலான கவனத்தைக் கொண்ட எழுத்தாளர்களில் இரா. முருகவேளும் ஒருவர். இவரின் நையாண்டி கலந்த சிறு, குறு பதிவுகள் நகைச்சுவையாகவும் சர்ச்சையாகவும் ஏராளமானவர்களின் கவனத்தைக் கவர்பவை.
இன்று அவர் எழுதிய, பல காரணங்களால் முதல் காதல் நினைவுக்கு வந்தது... எனத் தொடங்கும் பதிவொன்று வாசகர்களின் படித்துச் சுவைப்பதற்காக..!
”பல காரணங்களால் முதல் காதல் நினைவுக்கு வந்தது. மழை என்பதால் ஏதாவது பாரில் உட்கார்ந்து ரகசியங்களை கொட்டப்போகிறேன் என்று நண்பர்கள் உணர்ச்சிவசப்பட்டுவிட வேண்டாம். முதல் காதல் என்பது மொழிபெயர்ப்பு.
நான் சுமார் இரண்டாயிரம் காதல்களில் இறங்கி இருந்தாலும் என்னைக் காதலித்தது மொழிபெயர்ப்புதான் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்.
நூலின் கையெழுத்துப் பிரதியில் (அதன் முதல் வெளியீட்டாளர்) விடியல் சிவா இரண்டு இடத்தில் சுழித்து இருந்தார். ஹியரிங் எய்ட், இண்டர்காண்டினெண்டல் ஹோட்டல் காஃபி ஷாப் ஆகிய இரண்டு சொற்களை அப்படியே ஆங்கிலத்தில் கொடுத்து இருந்தேன். அவற்றை தமிழில் மாற்ற வேண்டும் என்றார்.
இவை தமிழில் புழக்கத்தில் இருப்பதுதான்; புரியும்; எனவே மாற்ற வேண்டாம் என்று மறுத்தேன்.
விவாதமாக மாறி சிவா சாம பேத தானத்தைப் பயன்படுத்தினார். அதாவது அங்கண்ணன் கடை பிரியாணி வாங்கித்தந்தார். இருந்தும் நான் மாற்ற மறுத்து விட்டேன்.
பிரச்சினை விடியல் ஆசிரியர் குழுவுக்கு போனது. ஒரு பிரிவு என்னை ஆதரித்தது. இன்னொரு பிரிவு சிவாவை ஆதரித்தது.
மூன்றாவது பிரிவு சொன்னதுதான் பயங்கரம். இண்டர் காண்டிநெண்டல் ஓட்டல் என்பதையும் மொழிபெயர்க்க வேண்டும் என்றது.
வன்முறைப் பாதையை கைவிட்டு அமைதிவழிக்குத் திரும்பி இருக்கும் எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
எனக்கும் சிவாவுக்கும் விவாதம் தீவிரமாக நடந்து கடைசியில் பஞ்சாயத்தாக மாறியது. ஹியரிங் எய்டை தமிழில் மொழிபெயர்ப்பது, காஃபிஷாப்பை விட்டுவிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
காமன் சென்ஸ் நண்பர்களே காமன் சென்ஸ்.
மொழிபெயர்ப்பு என்பது மூலத்துக்குசெய்யும் துரோகம்.
ஒரு சொல்லுக்காக ஏழு கடல் ஏழு மலை கடந்தேன் விவகாரங்களை எல்லாம் தலையைச் சுற்றி வீசிவிடுங்கள்.
மூலப் பிரதி மீதான பீதி, முன்னோடிகள் மீதான பயம் இதெல்லாம் உதவாது. இயல்பாக, எளிமையாக, நேரடியாக, நேர்மையாக மொழிபெயர்ப்பை அணுகுங்கள். இது இலக்கியத்தின் எந்தப் பிரிவுக்கும் பொருந்தும்.” என்று இரா. முருகவேள் முடிக்கும்போது மட்டும் சீரியசாகக் குறிப்பிட்டுள்ளார்.