காதலில் விழுந்த கல்லூரிப் பேராசிரியர்!

காதலில் விழுந்த கல்லூரிப் பேராசிரியர்!

வளர்ந்த இரண்டு பிள்ளைகள் இருக்கிற மூத்த கல்லூரிப் பேராசிரியர் ஒருவருக்கு காலம் போன கடைசியில் இளவயது பேராசிரியை மீது காதல் வருகிறது. அதை காதல் என்றுகூட சொல்ல முடியாது. கூட்டம் ஒன்றுக்குப் போனபோது அறிமுகம். போனில் ஜொள்விட்டுப் பேசிக்கொண்டிருக்கிறார். அந்த பெண்ணோ இவரை விழுந்துவிழுந்து நேசிக்க ஆரம்பித்து, தினமும் போனில் அழைத்து, குறுஞ்செய்தி அனுப்புகிறாள். இப்படிப்போகிற உறவுக்கு வில்லியாக பேராசிரியரின் மனைவி வர, அவர் அடைகிற மன உளைச்சல். இந்தப் பெண்ணுடனான காதலைத் துண்டிக்க அவர் படும்பாடு எல்லாவற்றையும் நெஞ்சறுப்பு என்ற நாவலாக ஆக்கி இருக்கிறார் இமையம். ஸ்ரீரங்கப்பெருமாள் என்ற அப்பாவி(!) பேராசிரியர் சொல்வதாக இந்த நாவல் விரிந்து செல்கிறது. அவர் மனைவி காமாட்சியிடம் மாட்டிக் கொண்டு படும் அவஸ்தையைக் கண்டு நமக்கு அவர் மீது பரிதாபம் ஏற்படுகிறது. செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டு அதில் வரும் எல்லா குறுஞ்செய்தியையும் அவள்தான் படிக்கிறாள். என்ன ஒரு மனுஷி எனத் தோன்றிவிடுகிறது.

ஒருவழியாக அவர் அந்தப் பிரச்னையிலிருந்து விடுபடுகையில் நிம்மதி ஏற்படுவது அவருக்கு மட்டுமல்ல நமக்கும்தான். ஸ்ரீரங்கப்பெருமாளுக்கு வரும் காதல் குறுஞ்செய்திகளை குறித்து வைத்துக் கொள்வது இளம் காதலர்களுக்கு வசதியாகக் கூட இருக்கும்.

காதலில் விழுந்த கல்லூரிப் பேராசிரியர், உதவிப் பேராசிரியரை சீரழித்த கல்லூரிப் பேராசிரியர் என்றெல்லாம் டிவிகாரர்கள் கிரைம் செய்தி போட்டு நாறடிக்கப்போகிறார்களே என்று பேராசிரியர் புலம்புவது இந்த காலகட்ட தனிமனிதர்களின் அந்தரங்கத்தை ஊடுருவிப் பார்க்கும் ஊடகப் போக்கை விமர்சனப்போக்குடன் முன் வைக்கிறது. முழுக்க முழுக்க ஆண் மையப் பார்வையில்தான் இந்த கதையின் கோணம் அமைந்துள்ளது. ஒருவேளை இது ஓர் ஆணாதிக்க நாவல் என்று சொல்வார்களோ என்றுகூடத் தோன்றும் அளவுக்கு இப்படைப்பு சென்றுவிடுகிறது.

நெஞ்சறுப்பு, இமையம், க்ரியா, எண் 58,

டிஎன்எச்பி காலனி, சானடோரியம், தாம்பரம்,

சென்னை - 47 பேச: 7299905950 விலை ரூ 275.

அம்மன் அருள்

நூற்றி நான்கு பக்கங்களே கொண்ட இந்த குறுநாவலுக்குள் பெரிய உலகையே விரித்துவைத்து ஆட்டம் காண்பித்திருக்கிறார் ஸ்ரீராம். கண்பார்வை வேண்டி கோட்டை மாரியம்மன் கோவில் மடத்தில் சித்தப்பாவுடன் காத்திருக்கும் சிறுவனுக்கு ஏற்படும் அனுபவங்களுடன் தொடங்கும் இந்நாவல், வாழ்க்கை ஓட்டத்தில் பெரியவனாகும் அவனது மகனுக்கே இறுதியில் பார்வை இழப்பு ஏற்பட, அதே கோவில் வாசலில் நம்பிக்கையுடன் காத்திருக்கத் தொடங்குவதுடன் முடிவடைகிறது. இதற்கிடையில் தன் அழகிய எழுத்துமுறையால் ஒரு கிராமத்துக் கோவிலையும் அங்கு ஓடும் ஆற்றையும் உருவாக்கிக் காட்டி, வாசகர்களையும் அருகிலிருந்து பிரமித்துப் போகவைக்கிறார். கதையில் ஆங்காங்கே முடிச்சுகள். அவற்றை நாம் தான் அவிழ்த்துக் கொள்ளவேண்டும். அதுதான் மாயாதீதம். வெளிவந்த உடனே படைப்பழகுக்காகப் பரவலான பாராட்டைப் பெற்றிருக்கும் நாவல் இது. இதில் வரும் மனிதர்களும் அவர்களுக்கு இடையிலான உறவுகளும் அழகாக அமைந்திருக்கின்றன.

மாயாதீதம், என். ஸ்ரீராம், வெளியீடு: தமிழ்வெளி, 1, பாரதிதாசன் தெரு, ஸ்ரீனிவாசன் நகர், மலையம்பாக்கம், சென்னை - 600122 பேச: 9094005600 விலை ரூ.120

கல்வி முறை

இந்திய நவீன கல்விமுறையை உருவாக்கிய மெக்காலே என்னும் ஆங்கில அதிகாரியைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் இந்நூல் அவரைக் கொண்டாடும் நோக்கில் எழுதப்படவில்லை. நாட்டின் கல்வி வரலாறு விருப்பு வெறுப்பின்றி வாசிக்கப்படவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டிருப்பதாக இந்நூல் தெரிவிக்கின்றது. ஆனால் மெக்காலே கொண்டுவந்த கல்விமுறை இந்தியர்களை தங்கள் பாரம்பர்ய மரபு ரீதியான கல்விமுறையில் இருந்து மாற்றி அடிமைகளை உருவாக்கும் கல்வியாக இருந்தது என்று அவர் மீது கடும் விமர்சனங்கள் இருக்கின்றன. ஆகவே இந்நூல் எழுதத் தொடங்கும்போதே எதிர்ப்புகளையும் எதிர்கொள்ளும் என்பது திண்ணம். ஆனால் மெக்காலே பள்ளிகளில் பாகுபாடுகளை ஒழித்தவர். மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்றார். ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம் அளிக்கவேண்டும் என்றார். ஓர் ஆசிரியருக்கு 30 மாணவர்கள் என்ற விகிதத்தை உருவாக்கினார் போன்ற தகவல்களும் இந்நூலில் உண்டு. மெக்காலே கல்வித்திட்டம் மட்டும் உருவாக்கவில்லை. இந்திய தண்டனைச் சட்டத்தையும் அவரே தொகுத்து உருவாக்கினார். மெக்காலேவின் அணுகுமுறை பற்றிய பார்வையை உருவாக்கிக் கொள்ள இந்நூல் உதவும்.

மெக்காலே, பழமைவாதக் கல்வியின் பகைவன், இரா.சுப்பிரமணி, சாளரம், 4ஏ, பூபதி நகர், கீழ்க்கட்டளை, சென்னை - 117 விலை ரூ 180

வேண்டுகிறோம்!

மக்களாட்சி என்றாலே பொறுப்பில் இருப்பவர்களுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேண்டுகோள் கடிதங்கள் அளிப்பது சகஜமாக நடப்பதுதான். மூத்த ஊடகக்காரரான டிஎஸ்எஸ் மணியும் பல்வேறு வேண்டுகோள் கடிதங்களை தமிழ்நாட்டு அமைச்சர் களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் அனுப்புகிறார். ஒரே வேறுபாடு இக்கடிதங்களை உள்ளாட்சி முரசு என்ற பத்திரிகைவாயிலாக வெளியிடுகிறார். இவை தொகுக்கப்பட்டு நூலாகி உள்ளன. உண்மையில் இவற்றை கடிதங்கள் எனச் சொல்வதை விட பிரச்னைகள் பற்றிய கட்டுரைகள் என்றே சொல்லவேண்டும். மணி, பொதுவாக மக்கள் பிரச்னைகள் தொடர்பான போராட்டங்கள் எனில் களத்தில் முதல் ஆளாக நிற்பவர் என்பதால் ஒவ்வொரு பிரச்னை குறித்தும் ஆழமான தரவுகளை அறிந்திருக்கிறார். அவை பற்றி சம்பந்தப்பட்ட அமைச்சருக்குக் கடிதமாக எழுதி இருக்கிறார். உதாரணத்துக்கு தண்டுவடம் காயமடைந்த மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை பற்றி அவர் எழுதும் கடிதம். ஆயிரம் எறும்புகள் கடித்தும் எனக்கு வலியே தெரியவில்லை என பாதிக்கப்பட்ட ஒருவரின் கூற்றின் மூலம் இந்த பிரச்னையின் ஆழத்தையும் மருத்துவமனைகளில் பிளாஸ்டிக் சர்ஜன்கள் வேண்டும் என்பது உள்பட அவர்கள் முன்வைக்கும் பல கோரிக்கைகளையும் வலியுறுத்துகிறார். இவற்றில் எத்தனை பிரச்னைகளில் அவர்கள் தீர்வு கண்டார்கள் என்பது தெரியாது. ஆனால் குறைந்தபட்சம் கவனம் ஈர்ப்பதில் மணி வெற்றி கண்டுள்ளார்.

மாண்புமிகு... வேண்டுகோள் கடிதங்கள், டிஎஸ்எஸ் மணி, வெளியீடு: உள்ளாட்சி பதிப்பகம், வெஸ்ட் பிளாக் 4வது தெரு, அண்ணா நகர், சென்னை - 40 பேச: 9025706355, விலை ரூ 200

கொஞ்சம் மருத்துவம் நிறைய மனிதம்

கண்மருத்துவரும் எழுத்தாளருமான அகிலாண்டபாரதியின் புதிய புத்தகம் இது. மருத்துவம் தொடர்பான ஆலோசனைகளை தான் பார்த்த நோயாளிகளை எடுத்துக்காட்டாகக் கொண்டு எளிய மொழியில் எழுதியிருக்கிறார். திலகவதி ஐபிஎஸ் சொல்லி இருப்பதுபோல் இந்நூலைப் படிக்கும் வாசகர்களுக்கு இவர் தம் குடும்ப மருத்துவர் என்றே தோன்றும். தைராய்டு பிரச்னையாக இருக்கட்டும். கர்ப்பப் பிரச்னையாக இருக்கட்டும் நம் சமூகத்தின் பார்வையில் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு கோணங்கள் இருக்கின்றன. இவற்றை அணுகுவதற்கு மருத்துவருக்கு மனிதம் சார்ந்த பார்வை தேவைப்படுகிறது. அது நம் டாக்டருக்கு நிறைய இருப்பதை இக்கட்டுரைகள் தெளிவுபடுத்துகின்றன. அதே சமயம் மருத்துவர்கள் எதிர்கொள்ளும்

சிக்கல்களையும் சுட்டிக்காட்டுகின்றன. அட்டெண்டர் இல்லாத கேஸ்கள் எனப்படும் தனிமையில் வாழும் முதியவர்கள் மருத்துவமனையில்

சேர்க்கப்பட்டு படும் அவஸ்தைகளையும் வார்டில் சேர்ந்து வீட்டுக்குப் போக மறுத்த அரசியல் பேச்சாளர் ஒருவர் பற்றிய தகவல்களும் கட்டுரைகளைக் கனமாக்குகின்றன. எதற்கெடுத்தாலும் சிடி ஸ்கேன் பண்ணுங்க எனக்கேட்பவர்கள் அதிகரித்துவிட்டதையும் டாக்டர் பொறுப்போடு சுட்டிக்காட்டுகிறார். ஒவ்வொரு கட்டுரையும் உண்மைச் சம்பவங்களைக் குறிப்பிட்டு எழுதப்-படுவதால் வாசிக்க நன்றாக இருக்கிறது.

கொஞ்சம் மருத்துவம் நிறைய மனிதம் (இரண்டாம் பாகம்), டாக்டர் எஸ்.அகிலாண்ட பாரதி, சந்தியா பதிப்பகம், 77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை &83 பேச: 044&24896979, விலை.

ரூ 340

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com