வட்டமிடும் வரைபடம்

வட்டமிடும் வரைபடம்

‘உனக்கான இடமில்லையெனில்

உன்னோடு

நானும் வெளியேறிவிடுவேன்

இந்தக் கவிதையை விட்டு'

என்று இந்த பூரண பொற்குடம் என்கிற தன் புதிய கவிதைத்தொகுப்பில் ஒரு கவிதையில் குறிப்பிடுகிறார் கவிஞர் பழநிபாரதி. இந்த ஆவேசத் துடன் இத்தொகுப்பின் அத்தனை கவிதைகளிலும் காதலுக்கு இடமளித்து ஆச்சரியப்பட வைக்கிறார்.

//கசிந்துருகும் மணத்தில்

இதுவும்

உனக்கான கவிதையானதை

தவிர்க்க முடியவில்லை// என்கிற கவிஞர்

‘நீ என்னை

மெதுவாக

கரைத்துக்கொண்டிருக்கிறாய்‘  என்று வருடுகிறார்.

'சொற்களற்ற பாடல்&&&பறவையின் குரல்'

'மனக்கடிகாரத்தில் இப்போது மணியென்ன தெரியவில்லை'

'அவளின்றி அமையாது காடு'

'வடிவிலாக்காற்று அவளுக்குள் வடிவம் கொள்கிறது'

 என்பவை இத்தொகுப்பில் பழநிபாரதி நிகழ்த்திக்

காட்டும் மொழிஜாலங்களுக்கு சில உதாரணங்கள்.

'ஒரு பறவையைப்போல

உனை விடுவித்தேன்

என் அகங்கை முழுதும்

ஆகாய நீலம்'

என்ற வரிகளை வாசிக்

கையில் நாமும்  உள்ளங்கையைப் பார்த்துக் கொள்கிறோம். அது கண்ணாடி போல் மனதைக் காட்டிவிடுகிறது.

'ஒவ்வொரு பூவையும்

முதற்பூவாய்ப் பார்த்தாய்

இப்போது

கடைசிப்பூ

எதுவென்றே தெரியவில்லை'& தமிழில் காதலுக்கும் பூக்களுக்கு-மான தொடர்பு என்றைக்கும் அறுபடவே போவதில்லை. அத்துடன் காதலியின் வீட்டைச் சுற்றும் காதலனும் மறையப் போவதில்லை.

தலைக்கு மேல்

ஒரு பறவையைப் போல்

வட்டமிடுகிறது

உன் வீட்டின் வரைபடம்& என்கிறார்.

கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கி இருக்கும் காதலர்கள் தலைக்கு மேல் இந்த வரைபடங்கள்தான் உலவுகின்றன!

பூரண பொற்குடம், கவிஞர் பழநிபாரதி, வெளியீடு: கொன்றை வெளியீடு, கதவு எண் எஸ்1, 119 ராயல் கேஸ்டில் பேஸ் 2, கணேஷ் அவென்யூ 6&வது தெரு, சக்தி நகர், போரூர், சென்னை&16 தொடர்புக்கு: 90940 05600 விலை: ரூ.140                                      - சீனிவாசன்

மரமாக மாறும் பெண்!

கொரியர்கள் என்னமாதிரி  அசைவ உணவுகளை உண்பார்கள் என்பது பற்றி ஓரளவு நமக்குத் தெரிந்திருக்கும். விதம்விதமான சிப்பிகள், இறைச்சிகள் இல்லாமல் அவர்கள் உணவு அமையாது. அப்படி ஒரு கொரியக் குடும்பப் பெண் திடீரென அசைவமே சாப்பிடமாட்டேன் எனச்

சொல்லிவிடுவதாகத் தொடங்கும் இந்த நாவல், அது தொடர்பான சர்ச்சைகளில் மூழ்கி, ஆழ்மன விவகாரங்களுக்குள் நகர்கிறது. ஹான் காங் என்கிற தென் கொரிய எழுத்தாளரின் நாவலை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மரக்கறி என்ற பெயரில் மொழி பெயர்த்து உள்ளார் கவிஞர் சமயவேல்.

சர்வதேச மேன்புக்கர் பரிசு பெற்ற இந்நாவல் அதற்கான தகுதியுடன் உள்ளது. சைவ பிரசாரம் செய்யும் நாவலாக இதை நினைத்துவிடக்கூடாது. இயாங் &ஹை என்கிற பெண் எப்போதும் பெண்களுக்கு எதிராகவே இயங்கும் இந்த மனித உலகுக்கு எதிராக தன்னை முன்னிறுத்துகிறாள். அதற்காகவே இறைச்சி உண்பதை நிறுத்துகிறாள். தன்னை ஒரு மரமாகக் கருதி, தலை கீழாக நிற்கிறாள். சூரிய ஒளியே போதும் எனச் சொல்லி பின்னர் எதையுமே உண்ண மறுக்கிறாள். மருத்துவமனையின் மணம் வீசும் படுக்கைகளுக்கு இந்த நாவல் பாதிக்குப் பின்னால் நகர்ந்துவிடுகிறது.  இயாங்&ஹையை யாரும் புரிந்துகொள்ள இயலவில்லை. அவளுடன் மருத்துவமனைகளில் போராடிக்கொண்டிருக்கும் அவளது அக்காவும் கூட. மருத்துவர்களும்

செவிலிகளும் வலுக்கட்டாயமாக இயாங் - ஹையை உணவுண்ண வைக்கப் போராடித் தோற்கிறார்கள். ஒரு பெண்ணின் மாறுபட்ட மன உலகில் பிரவேசிக்கும் அனுபவத்தை நாவலின் சிறப்பான தமிழ் மொழி பெயர்ப்பு தருகிறது.

மரக்கறி, ஹான் காங், தமிழில்: சமயவேல், வெளியீடு: தமிழ்வெளி, 1, பாரதிதாசன் தெரு, சீனிவாசா நகர், மலையம்பாக்கம், சென்னை&122. பேச:9094005600, விலை ரூ: 220

ஊர் பேசுகிறது

உங்கள் சொந்த ஊரை விட்டு வெகுதூரம் வந்துவிட்டீர்கள். திரும்பப் போகமுடியுமா என்ற ஐயம். அந்த சோகத்துடன் ஊரின் நினைவுகளை மீட்டெடுக்கிறீர்கள். இதுதான் புத்திரன் நாவல். ஈழ எழுத்தாளர் வாசு  முருகவேல் எழுத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் ஈழத்தின் நயினாத்தீவு என்ற ஊர் எழுத்துகளாக வாழ்கிறது. அங்கு இருக்கும் மாந்தர்கள், அவர்களின் நினைவுகள், நீர்நிலைகள், குளங்கள், மரங்கள், ஆடுகள், மாடுகள் வாழ்கிறார்கள். அம்மன் கோவிலும் அதன் மூன்று தேர்களும் ஆர்ப்பரிக்கும் கடலும் அச்சமூட்டும் ராணுவ முகாம்களும் அவ்வப்போது வந்துபோகும் கடல்களும் என வரிக்கு வரி பெருமூச்சு விடவைக்கும் நினைவுகள் மிதக்கும் நூல் இது. கதை என்னவோ ஒற்றை வரிதான். இதற்குள் ஒரு வாழ்வே விரிந்து அலை அலையாக மோதுகிறது. நயினாத் தீவின் மூச்சின் ஓசையை, இதயத் துடிப்பின் ஒலியை இந்நாவலில் கேட்கலாம்.

புத்திரன், வாசு  முருகவேல்,  வெளியீடு: எழுத்து பிரசுரம், நொ.55(7), ஆர் பிளாக், ஆறாவது நிழற்சாலை,  அண்ணா நகர், சென்னை -40. பேச: 9840065000 விலை: ரூ 170

பெண்மை வெல்க!

பல நாட்கள் கழித்து ஒரே மூச்சாக தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குநர்

கி. மணிவண்ணன் எழுதிய 'செம்மை மாதர்' என்ற நூலினைப் படித்து முடித்தேன்.

'அவள் விகடன்' ஆசிரியர் அறிவழகன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், ‘குங்குமம்' ஆசிரியர் சிவராமன் ஆகியோரின் அணிந்துரைகளுடன் வெளிவந்துள்ளது.

இயக்குநர் மகேந்திரன், எழுத்தாளர் பிரபஞ்சன், தோழர் நல்லகண்ணு, கவிஞர் வாலி, இறையன்பு, இயக்குநர் மணிவண்ணன், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, கிரேஸி மோகன், திருச்சி சிவா,கவிஞர் பழநிபாரதி,ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, தமிழருவிமணியன், வண்ணதாசன் ஆகியோர் தங்கள் வாழ்வில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய பெண்களைப்பற்றிப் பகிர்ந்ததைத் தன் பாணியில் சுவைபட எழுதியிருக்கிறார்.

கவிஞர் வாலி பிறந்த போது அவரின் தாய் குளிர் காய்ச்சலில் வாடியதால் தாய்ப்பால் கொடுக்க இயலாத நிலையில் இஸ்லாமியத்தாய் ஃபாத்திமாவிடம் தாய்ப்பால் அருந்தியதை நன்றியுடன் நினைவு கூர்ந்து இஸ்லாமியப் பெருமக்கள் தன் முன்னேற்றத்திற்கு உதவியதையும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுவதைச் சிறப்பாக எழுதியுள்ளார். அன்னை பாத்திமாவின் முலைப்பால் ஈரத்தில் முளை விட்டவர் என்று வாலி பாணியிலேயே வாலியைக் குறிப்பிடுகிறார்.

தமிழச்சி தங்கபாண்டியன் தன் அருமையான அணிந்துரையில் பசும்பொன் முத்துராமலிங்கதேவர்  அவர்களின் தாய் இறந்து விட்டதால் கமுதியில் வாழ்ந்த ஆயிஷா பீவி அம்மாளிடம் தாய்ப்பால் குடித்து வளர்ந்ததையும் அந்தத் தாய் மறைந்த போது தலைமறைவாய் இருந்த தேவர் போலீசுக்குப் பிடிபடாமல் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச்

சென்றதையும் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

பெரியார் மண்ணில் பசும்பொன் தேவர் அவர்களும் கவிஞர் வாலி அவர்களும் இசுலாமியத் தாய்களிடம் தாய்ப்பால் குடித்து வளர்ந்தவர்கள் என்ற சிறப்பான நெகிழ்வான மகிழ்வான மனிதாபிமான உண்மையை இந்த காலகட்டத்தில் எடுத்துக்காட்டுகிறது நூல்.

பெண்மையின் வலிமையை பல்வேறு கோணங்களில் நெகிழ்வான கோணங்களில் படம்பிடிக்கிறது இந்நூல்.

செம்மை மாதர், கி.மணிவண்னன், வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ், 6, மகாவீர் காம்ப்ளக்ஸ், முனுசாமி சாலை, கே.கே. நகர் மேற்கு, சென்னை-78 பேச:044-48557525, விலை ரூ:160

மு.செந்தமிழ்செல்வன்

ஜூலை, 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com