அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மைய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பானது. ஆனால் முன்னதாக புதுதில்லிக்குச் சென்ற எடப்பாடி, தான் அங்குள்ள அ.தி.மு.க. அலுவலகத்தைப் பார்ப்பதற்காகவே வந்துள்ளதாக விளக்கம் அளித்திருந்தார்.
அந்த விளக்கம் வந்து அரை நாள் ஆவதற்குள்ளாகவே தலைமைக் கழக நிருவாகிகளுடன் அவர், அமித் ஷாவைச் சந்தித்துப் பேசிய தகவல் படத்துடன் வெளியானது.
சுமார் ஒரு மணி நேரம் நீண்ட அந்த உரையாடல், வரும் தேர்தலை முன்னிட்டதே என்பதும் உறுதியாகியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வை அகற்றுவதே தங்கள் இலக்கு என அமித்ஷா கூறியிருக்கிறார்.
எடப்பாடி தரப்பில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை நீக்கவேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது ஒரு புறம் இருக்க, அ.தி.மு.க.வை ஒன்றாக்குவதில் பா.ஜ.க.வின் யோசனையை ஏற்காமல் அக்கட்சியின் தலைவர்களை எடப்பாடி சந்திக்காமல் தவிர்த்துவந்தார். ஆனால், அவருக்கு நெருக்கமான உறவினரின் வீட்டில் கடந்த ஜனவரியில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் 750 கோடி ரூபாய் தொடர்பான விவகாரம் சிக்கிய நிலையில்தான், இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததாக சமூக ஊடகங்களில் வறுத்தெடுக்கின்றனர்.
அவரவர் கற்பனைக்கேற்ப திரைப்பட வசனங்களையும் பலர் அத்துமீறி வசைகளையும் எழுதிவருகின்றனர்.
தமிழகத்துக்குத் திரும்பி எடப்பாடி அளிக்கவுள்ள பதில் இதில் இன்னும் சுவையைக் கூட்டக்கூடும்!