அரசு இல்லத்தில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்!

அமைச்சர் கீதா ஜீவன்
அமைச்சர் கீதா ஜீவன்
Published on

சென்னையை அடுத்த தாம்பரத்தில் சமூக நலத் துறையின் கண்காணிப்பில் அரசு சேவை இல்லம் நடத்தப்படுகிறது.  இங்கு தங்கிப் படித்துவந்த சிறுமி ஒருவரை இல்லத்தின் காவலாளி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளது நேற்று தெரியவந்தது.

தகவல் அறிந்த துறை அதிகாரிகள் காவல்துறைக்குத் தெரிவிக்க, அவர்கள் அந்த நபரைக் கைதுசெய்தனர். 

தலைநகர் பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் மாநிலத்தில் பரவலாக அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. 

விவகாரம் பெரிதான நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சமூக நலன், குழந்தைகள் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், அந்தக் காவலாளி தன்னுடைய 21 வயதிலிருந்து நீண்ட காலமாக அங்கு பணியாற்றுவதாகவும் இப்போதுதான் இப்படி சம்பவம் நிகழ்ந்திருப்பதாகவும் கூறினார். 

விடுதிக் காப்பாளர் விடுப்பில் சென்றுவிட்டார் என்றும் அவர் மாவட்ட சமூக நல அலுவலரிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றிருக்க வேண்டும்; அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.  

பெண் காவலாளிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com