கோவில்களில் அர்ச்சகர் நியமனம் குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து பற்றியும், தமிழ்நாடு அரசு உடனடியாக செய்யவேண்டியது என்ன என்பது குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருத்து கூறியுள்ளார்.
”தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி 2006 இல் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்ற நிலையில், நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்தி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக அரசின் இந்து சமய அறநிலையத் துறையால் நியமிக்கப்படவும், அதற்கு முன் வழமையாக இருந்த பிறவி அடிப்படையிலான பாரம்பரிய அர்ச்சகர் நியமன முறையை (Hereditary appointment of Archakas) ரத்து செய்தும் சட்டம் இயற்றியதோடு, அரசின் இட ஒதுக்கீட்டின்படி, அர்ச்சகர் தகுதிகள் – சிவாகமம், வைணவ ஆகமம் ஆகியவற்றின் அடிப்படையில் அந்தந்த சைவக் கோவில்களிலும், வைணவக் கோவில்களிலும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தார்.
மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் என்று இழுக்கடிக்கப்பட்டதால், ஆகமப் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதி அர்ச்சகர்கள் 10 ஆண்டுகளுக்குமேல் நியமனம் கிடைக்காமல் இருந்தனர்.
கடந்த நான்காண்டுகளுக்குமுன் முதலமைச்சராகப் பதவியேற்று, ‘திராவிட மாடல்’ ஆட்சி அமைத்த ஸ்டாலின் 2021, ஆகஸ்ட் 14 ஆம் தேதி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் வகையில் பணி நியமனங்களுக்கான ஆணை ஒரு பகுதியினருக்கு வழங்கப்பட்டது என்றாலும், பெரிய கோவில்களில் பழைய நிலையே நீடித்திருந்தது.
தொடர்ந்து கண் கொத்திப் பாம்புகள்போல, பார்ப்பனர்கள் மீண்டும் மீண்டும் ‘‘நீதிமன்றப் படையெடுப்பை’’ நடத்தி, ஏதேதோ சாக்குப் போக்குச் சொல்லி, சுமார் ஓராண்டுக்கு மேலாக புதிதாக அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படாமல் உச்சநீதிமன்றத்தின் தடை இருந்தது!
நேற்று (14.5.2025) உச்சநீதிமன்றம் அர்ச்சகர் நியமனங்களைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்று ஆணை வழங்கியபோதும், குறுக்குச்சால் விட்டுள்ளனர் – ஆகம விதிக் கோவில், ஆகம விதிப்படி கட்டப்படாத கோவில் என்ற ஒரு விநோத (குயுக்தி) பிரிவைக் காட்டி, இந்த நியமனங்களுக்கும் மறைமுக வழியில் தடுப்புச் சுவர் எழுப்பும் வேலையைத் தொடங்கியுள்ளனர்.” என்று வீரமணி விவரித்துள்ளார்.
”சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (ஜஸ்டிஸ் பண்டாரி) இருவகைக் கோவில்களை அடையாளம் காணவேண்டும் என்று தேவையற்ற கருத்துகளை நுழைத்து, மூன்று மாதங்களுக்குள் அதை அடையாளம் காணும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதை எதிர்த்து, கால தாமதமானாலும் இப்போதாவது தமிழ்நாடு அரசும், அறநிலையத் துறையும் தனி மேல்முறையீடு செய்யவேண்டியது அவசியமாகும்.
ஆகம விதிகள் உள்ள ‘‘பிரபல கோவில்கள்’’ தமிழ்நாட்டில் பல உள்ளதை நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினரே தமிழ்நாடு முழுக்க கண்டு ஆராய்ந்து தந்துள்ளனர்!
அவை, கோவில்களாக, பூசைகள், புனஸ்காரங்கள் இயங்கும் நிலையில், பழைய ஆகமம் தெரியாத அர்ச்சகர்கள் முதுகில் பூணூல் கொண்டுள்ளதால், தனிச் சலுகைகளோடு அந்தந்த கோவில்களில் இன்னமும் நீடிக்கின்றனர்.
வைணவ திவ்ய தேசங்கள் 108 இல் 30 கோவில்களில் மட்டுமே ஆகமம் தெரிந்தவர்கள் உள்ளனர் என்று நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் அறிக்கை கூறியுள்ளது.
இந்தக் குழு நேரிடையாக அனைத்து சிவ, வைணவக் கோவில்களுக்கும் சென்று ஆய்வு நடத்தியது. அக்குழுவில் வைணவத்தைச் சேர்ந்த பட்டாச்சாரியார்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சிறீரங்கம் நாராயண ஜீயர், பிச்சை சிவாச்சாரியார் போன்ற ஆகம நிபுணர்கள் இடம்பெற்றிருந்தனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள சிவன் கோவிலான கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள 41 அர்ச்சகர்களில் 4 அர்ச்சகர்களுக்கு மட்டுமே ஆகம விதிகள் தெரிந்திருந்தன. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 116 அர்ச்சகர்களுள் ஆகமம் பயின்றவர்கள் 28 பேர் மட்டுமே என்று தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட அந்த ஆய்வுக் குழுவின் அறிக்கை கூறுகிறது.
ஆகம விதிகளுக்கு மாறாகக் கட்டப்பட்டுள்ள சென்னை தியாகராயர் நகர் உள்பட பல இடங்களில் உள்ள சிவா– விஷ்ணு கோவிலை என்ன செய்ய உத்தேசம்? அங்கும் குறிப்பிட்ட அர்ச்சகர்கள்தானே குடிகொண்டுள்ளனர்!
ஆட்சியின், ‘‘மனிதாபிமானம்’’ என்று காரணம் கூறப்பட்டாலும், ‘அவாளது’ விஷமம் மட்டும் எல்லையற்று சென்று கொண்டிருக்கிறது.
இந்தக் கோவில்களில் பக்தி நடவடிக்கைகள், விழாக்கள், அர்ச்சனைகள் நடக்கும்போதுதான்; அதற்குப் பிறகு, எந்த ஆகமக் கோவில், ஆகமம் அல்லாத கோவில் என்ற பகுப்புக்கு என்ன தேவை?
நியாயமாக இவர்கள் கூறும் ஆகம விதிப்படிதான் கோவில் இருக்கவேண்டும் என்றால், மற்ற கோவி்ல்களை இழுத்து மூடிவிடுவதுதானே சட்டப்படியும், சம்பிரதாயப்படியும் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும்?” என்றும் வீரமணி சரமாரியாகக் கேள்விகளை முன்வைத்துள்ளார்.
”எனவே, சுமார் 2000 பணியிடங்களில் – முக்கியமாக பழனி கோவில் உள்பட புலிப்பாணியர் வம்சத்தினர் உள்பட மீண்டும் நியமனங்கள் 69 சதவிகிதப்படி நடைபெறவேண்டும்.
இவர்கள் பிரித்துள்ளதே, ஆகமக் கோவில் – ஆகமம் அல்லாத கோவில் என்பதால்தான்.
முக்கிய பெரிய கோவில், மற்ற சிறிய கோவில் என்று சொல்லி, ‘பிரபல’ பெரிய கோவில்களில் ஆதிதிராவிடர் உள்பட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற நியமனம் (உச்சநீதிமன்றமே ஒப்புக்கொண்ட நிலையில்) உடனடியாக, இனியும் எந்த சுணக்கமும் இன்றி, நியமனங்கள் நடைபெறவேண்டும் என்று முதலமைச்சரையும், அறநிலையத் துறை அமைச்சரையும் அவசர, அவசிய நடவடிக்கை – ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் (Time Bound) செய்யவேண்டுமென உரிமையுடனும், கனிவுடனும் கேட்டுக் கொள்கிறோம்.
1. எஞ்சிய நியமனங்கள் 69 சதவிகிதப்படி, ஆதிதிராவிடர்கள் உள்பட அனைத்து ஜாதியினர்களும், அனைத்துக் கோவில்களிலும் (பிரபலக் கோவில்கள், கருவறை உள்பட) நியமனம் செய்யப்படவேண்டும்.
2. ஆகமப் பயிற்சி வகுப்பு (இரு பிரிவுக்கு சிவாகமம், வைணாகமம்)களுக்கு ஆண்டுதோறும் மனுக்களைக் கோரி, எவ்வித இடையூறும் இன்றி, பயிற்சி வகுப்புகளைத் தொடரவேண்டும் (69 சதவிகித இட ஒதுக்கீடுப்படி).
3. அவர்கள் பயிற்சி பெறுகையில், உதவித்தொகை (Stipend) வழங்கப்படுவதும் அவசியமாகும்.” என்று கி.வீரமணி கூறியுள்ளார்.