ஆளுநருக்குக் கண்டனம், ஊடகங்களுக்கு உத்தரவு- அப்பாவு அதிரடி

ஆளுநருக்குக் கண்டனம், ஊடகங்களுக்கு உத்தரவு- அப்பாவு அதிரடி
Published on

ஆளுநருக்கு சட்டப்பேரவை சார்பில் அவைத்தலைவர் அப்பாவு கண்டனம் தெரிவித்தார். அத்துடன் ஊடகங்களுக்கு ஓர் ஆணையையும் அவர் வெளியிட்டார். 

இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற கவன ஈர்ப்புத் தீர்மான விவாதங்களை முன்னிட்டு, எதிர்க்கட்சியான அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது.  

அதையொட்டியும் பேரவைத்தலைவர் அளித்த மிக நீண்ட விளக்கம்:

“ கவன ஈர்ப்பு அறிவிப்புகள்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: பேரவையின் கவனத்திற்கு.

விதி எண்கள் 55, 56 போன்ற அறிவிப்புகள் சட்டமன்றப் பேரவைச் செயலர் அவர்களிடமோ, சட்டப் பேரவைத் தலைவரிடமோ தரும்போது, அதை அனுமதித்து, அதை சட்டமன்றத்தில் நாம் எடுத்துக்கொள்ளலாம்; விவாதிக்கலாம். ஆனால், சில உறுப்பினர்கள்—நான் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை—அறிவிப்புகளை எழுதி, உடனடியாக youtube, தொலைக்காட்சி, பத்திரிகைகளுக்குக் கொடுப்பதை தயவு செய்து நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். அதுகுறித்து பேரவை விதி 36, உட்பிரிவு 5, மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. விதி 36, உட்பிரிவு 5-ல், கொடுக்கப்படும் முன்னறிவிப்பினை பேரவைத் தலைவர் அனுமதித்து, உறுப்பினர்களுக்கு அனுப்பாத வரை, அதனை உறுப்பினரோ அல்லது வேறு எவரோ வெளியிடக்கூடாது. இன்றுமுதல், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், ஊடகங்கள் உட்பட அனைத்திற்கும் சேர்த்தே சொல்கிறேன். அவ்வாறு பேரவை உறுப்பினர்கள் யாராவது இதுசம்பந்தப்பட்ட, இதுபோன்ற அறிவிப்புகளை எழுதித்தந்தால் பிரசுரிக்கவும் கூடாது. ஆகவே, பேரவை விதிக்குட்பட்டு, நீங்கள் நடந்துகொள்ள வேண்டுமென்று நான் உங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

6-1-2025 அன்று பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது குறித்து, நம்முடைய மாண்புமிகு ஆளுநர் அவர்களும், அதேபோல இங்கே பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.  இங்கே சிறிது விளக்கமாக அதுகுறித்து நான் கூற விரும்புகிறேன்.

முதலில் இந்நிகழ்வு குறித்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஒரு கருத்தை எக்ஸ்  வலைதளத்தில்  நாடாளுமன்றத்தில் பின்பற்றப்படுகிற நடைமுறையைக் குறிப்பிட்டு, ஒரு கருத்தை வெளியிட்டு, பின்னர் அதை நீக்கியுள்ளார்கள்.  பின்னர் அனைத்துச் சட்டமன்றங்களிலும் பின்பற்றப்படுகிற நடைமுறை எனக் குறிப்பிட்டு, எக்ஸ் தளத்தில் வெளியிட்டு பின்னர் அதையும் நீக்கியுள்ளார்கள்.  பின்னர் வேறு ஒரு கருத்தைத் தெரிவித்தார்கள். அடுத்து, இங்கேயுள்ள மாமன்ற உறுப்பினர் மாண்புமிகு திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் கருத்தை, அப்படியே தன்னுடைய கருத்தாகவும் வெளியிட்டுள்ளார்கள். அவர்களுடைய கருத்திலேயே தடுமாற்றம் இருந்துள்ளது. அதையும் நீக்கிவிடுவார்கள் என்று அனைவரும் பேசிக்கொள்கிறார்கள்.  அதேபோல், மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தெரிவித்த, இன்னும் வலைதளத்தில் நீக்கப்படாமல் உள்ள கருத்துகள் உட்பட யாவற்றுக்கும் நான் ஒரு சிறு விளக்கம் அளிக்க விரும்புகின்றேன்.          ஏற்கெனவே Doordarshan என இருந்தது, தற்போது பிரச்சார் பாரதி என மாற்றப்பட்டுள்ளது, India's Public Service Broadcaster, தூர்தர்ஷன் 1997 ஆம் ஆண்டு முதல், நம்முடைய மறைந்த தலைவர் கலைஞர் அவர்களுடைய ஆட்சியில்தான் முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது நேரடி ஒளிபரப்பாக செய்யப்பட்டது.                

பின்னர், 1999 ஆம் ஆண்டு முதல், மறைந்த தலைவர் கலைஞர் அவர்களுடைய ஆட்சிக் காலத்திலிருந்தே, அரசமைப்புச் சட்டத்தின்கீழ், ஆளுநர் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் உரையாற்றிய நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்து வருகிறது. பொதுவாக, சென்னை தொலைக்காட்சி நிறுவனத்திடமிருந்து முறையான அனுமதி கோரும் விண்ணப்பம் வரும்; அதனைப் பேரவைத் தலைவர் பரிசீலித்து ஒவ்வோராண்டும் சில நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி வழங்குவார். அந்த நிபந்தனைகளில் ஒன்று, ஆளுநர் உரையை மட்டுமே ஒளிபரப்பு செய்தல் வேண்டும் என்பதாகும். இதன் அடிப்படையில், எவ்விதக் கட்டணமும் பெறாமல் தொலைக்காட்சி நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்து வந்ததை நீங்கள் அறிவீர்கள். இந்தப் பேரவை அமைக்கப்பெற்றவுடன், நான் பேரவைத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், பிரச்சார் பாரதி நிறுவனத்திற்கு ஏற்கெனவே பல ஆண்டுகளாக கூறப்பட்ட நிபந்தனைகளுக்குட்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க இயக்குநர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, பேரவைச் செயலகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், அவர்களும், சென்னை தொலைக்காட்சி நிலையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், மேற்காணும் நிகழ்வுகளை ஒளிபரப்பு வாகனம்மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யுமாறும், வினாக்கள்-விடைகள் மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பதிலுரை ஆகியவற்றை நேரடியாக ஒளிபரப்பு செய்திட உரிய கட்டணம் பேரவைச் செயலகத்தால் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்கள். 5-1-2022 முதல் 10-5-2022 வரை நடைபெற்ற பேரவை நடவடிக்கைகளில் வினாக்கள்-விடைகள், கவன ஈர்ப்பு, விதி 110-ன்கீழ் அறிக்கைகள், முக்கிய சட்டமுன்வடிவுகளின் மீதான விவாதம், தனித் தீர்மானங்கள் மற்றும் மாண்புமிகு அமைச்சர்களின் பதிலுரைகள் ஆகியவை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. (குறுக்கீடு) கொஞ்சம் எல்லோரும் கவனித்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன். மேலும், இதற்காக 44 இலட்சத்து 65 ஆயிரத்து 710 ரூபாய் பிரச்சார் பாரதி நிறுவனத்திற்கு பேரவைச் செயலகத்தால் வழங்கப்பட்டது. மேலும், 17-10-2022 முதல் மீண்டும் பேரவைக் கூட்டம் நடைபெற்றபோது, நேரடி ஒளிபரப்பு செய்ய கடிதம் அனுப்பப்பட்டபோது, பிரச்சார் பாரதி நிறுவனம் 17-10-2022 அன்று நாளிடப்பெற்று அனுப்பிய கடிதத்தில், VVIP coverage திட்டமிடப்பட்டதன் காரணமாகவும், DSNG கிடைக்காததாலும், அதாவது OB van கிடைக்காததாலும், சென்னைத் தொலைக்காட்சி தங்களால் நேரடி ஒளிபரப்பு செய்ய இயலாது எனத் தெரிவித்துள்ளது. India's Public Service Broadcaster இவர்கள்.  VVIP coverage எனக் கூறி தவிர்த்தார்கள்.

இதேபோன்று, தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு ஆளுநர் உரை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. 10-1-2023 முதல் ஏற்கெனவே நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டவாறு ஒளிபரப்பு செய்திட பேரவைச் செயலகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டபோது, பிரச்சார் பாரதி நிறுவனம் அனுப்பிய கடிதத்தில், VVIP coverage திட்டமிடப்பட்டதன் காரணமாகவும், DSNG, அதாவது, OB van கிடைக்காததாலும் தங்களால் நேரடி ஒளிபரப்பு செய்ய இயலாது எனத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, நேரடி ஒளிபரப்பு செய்திட மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பேரவை தொடர்ந்து கூடிய நாட்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்திட கேட்டுக்கொள்ளப்பட்டது. பிரச்சார் பாரதி நிறுவனத்திடமிருந்து நமக்கு பதில் எதுவும் வரப்பெறவில்லை.  அவர்களை நேரடியாக அழைத்து, VVIP coverage என்றால் என்ன? OB van எங்கே சென்றது? எங்களிடம் ஒப்புக்கொண்டு, பணமும் வாங்கிக் கொண்டு எங்கு சென்றீர்கள் என்று கேட்டபோது, குஜராத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்று அவர்கள் சொல்லிவிட்டார்கள். அதேபோன்று, தொடர்ந்து இரண்டுமுறை கூறினார்கள். இந்த முறையும், அவர்கள் அனுமதி கேட்பது, அனுமதி கொடுத்தால் வர மறுப்பது என்பது தொடர் கதையாக வருகின்ற காரணத்தினால், இந்த ஆண்டு அவர்களை அழைத்து, முறைப்படி எழுத்துபூர்வமாக அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஏற்கெனவே, பலமுறை இவ்வாறு செய்திருக்கின்றார்கள். அப்போது இதுகுறித்து கூடி பேசும்போதுகூட, அவர்களையும் அழைத்து, இந்தமுறை நீங்கள் புதுடெல்லியில் தேர்தல் நடைபெறுகிறது என்று நீங்கள் சென்றுவிட்டால், என்ன செய்ய முடியும்? என்று கேட்டு, அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.  ஆனால், மாண்புமிகு ஆளுநர் அவர்கள், 6-1-2025 அன்று பேரவைக்கு தன்னுடைய உரையை ஆற்றுவதற்காக, ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்காக வருகை தந்தார்கள்.

வருகை தந்ததற்கு சற்று நேரத்திற்கு முன்னால், DD பொதிகை-யினர் இந்தப் பேரவையின் அனுமதியில்லாமல் பேரவைக்குள் வந்து தங்களுடைய camera-வை போடுகிறார்கள். அதேபோல் All India Radio உள்ளே வருகிறார்கள். ஏற்கெனவே அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அனுமதி வழங்கப்படாதபோதும், அவர்கள் வருகை தந்தார்கள். நான் கேட்ட அளவில், விசாரித்த அளவில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் வருகின்றபோது, இவர்கள் வந்து நேரடியாக அப்படிப்பட்ட காட்சிகளையெல்லாம் படம் பிடித்து ஊடகங்கள்மூலம் அவர்கள் நினைத்தபடி வெட்டி ஒட்டி அனுப்புவது வழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது. ஆகவே, பேரவையின் அனுமதி பெறாத ஒருவரை எவ்வாறு உள்ளே அனுப்ப முடியும்? இரண்டு முறை எங்களால் வர முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். கட்டணம் கொடுத்த பின்பும், உறுதிபடுத்தப்பட்ட பின்பும் அவர்கள் இவ்வாறு இங்கே வருகை தராமல் எங்களுக்கு வேறு பணி இருக்கிறது; OB Van, அந்த பெரிய Van-லிருக்கக்கூடிய OB-ஐ எடுத்துக்கொண்டு வேறு பணி, V.V.I.P. பணிக்கு நாங்கள் சென்றுவிடுகிறோம் என்று மாநிலம் விட்டு மாநிலம் சென்றுவிடுவதை நாம் பார்த்தோம். இவ்வாறு அந்தத் துறையினுடைய அமைச்சர்கள் சொல்வதை கருத்தாகக் கொண்டு செயல்படுகிறார்கள். என்னைக்கூட ஒரு முறை கடிதம்மூலம் ஒரு கருத்துக்காக அவர்கள் வலியுறுத்தி ஒன்றை எழுதித் தந்தார்கள்.  இதுகுறித்து அவர்களிடம் அழைத்து நான் கேட்டேன். என்னுடைய அதிகாரத்தில் நீங்கள் தலையிடுவதற்கு உங்களுக்கு எப்படி உரிமையிருக்கிறது? யாருடைய அழுத்தத்தில் உங்களால் இதை செய்ய முடியும்? என்று கேட்டபோது, எங்களை மன்னித்துவிடுங்கள் என்று சொல்லி, எழுத்துப்பூர்வமாக மன்னிப்பும் எழுதி தந்துவிட்டு சென்றிருக்கிறார்கள். இயக்குநர் அவர்களை நான் பார்க்கவில்லை. அவர்களை யார் இயக்குகிறார்கள் என்பதை நீங்கள்தான் தெரிந்துகொள்ள வேண்டும்; புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே, அவ்வாறு அனுமதி பெறாமல் உள்ளே வந்த காரணம். அவர்கள் வந்திருக்கக்கூடாது.

இப்போது நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள். கவர்னருடைய X வலைத்தளப் பதிவில், ஏதோ ஒரு நெருக்கடி நிலை, அவசர நிலை பிரகடனம்போல், சட்டமன்றம் கெடுபிடியாக இருப்பதாகச் சொல்கின்றார்கள். நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள். மாண்புமிகு ஆளுநர் அவர்கள் வந்தார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. முறையாக அழைத்து வந்தோம். அது முடிந்தவுடன் பேசுவதற்காக, உரையாற்றுவதற்காக புத்தகத்தை கையில் கொடுத்திருந்தோம். அதேபோல் கணினியிலும் வந்துக்கொண்டிருந்தது. அவர்கள் அடுத்த நிமிடம் நம்முடைய மாண்புமிகு பிரதான எதிர்க்கட்சியினர் ஒரு பெரிய பதாகைகளோடு முன்னுக்கு வந்தார்கள். எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியினர் தன்னுடைய சட்டையில் கருப்பு துண்டு துணியை குத்திக்கொண்டு அவர்களும் முன்னுக்கு வந்துவிட்டார்கள். பல பேர் ஆளுநருக்கு எதிராக அவரை பேசவிடாமல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் உட்பட பல பேர் ஒட்டுமொத்தமாக பேசவிடாமல் ஆளுநரை மறித்தது நீங்கள். இந்த அவையில் இருக்கக்கூடிய மற்ற உறுப்பினர்கள், நான் பெயர் குறிப்பிடாத உறுப்பினர்கள் அமைதியாக இருக்கிறார்கள். நீங்கள் பதாகையைக் காட்டி நெருக்கடி கொடுத்தவுடன், இங்கே என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. மாண்புமிகு ஆளுநர் அவர்களை நாம் அழைத்து வந்திருக்கிறோம். அவர்களை சுற்றி வளைத்து அவர்களுக்கு எந்த அவமானமும் வந்துவிடக் கூடாது என்பதற்காக உங்கள் முன்னிலையில்தான் நான் சொன்னேன், மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இப்போது இங்கே இருக்கும்போது, இந்தப் பதாகைகளையெல்லாம் கொண்டு வந்து, அவரை நெருக்கடி செய்வதை வெளியிட வேண்டாம் என்று நான்தான் சொன்னேன். அதுபோக, நீங்கள் பதாகையோடு வந்தது, நெருக்கடி செய்தது என்ற உண்மையைத்தானே சொல்கிறேன். உண்மைக்கு புறம்பாக சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இவ்வாறு அதன்பின்பு தொடர்ந்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இரண்டு நிமிடத்தில் வெளியேறிவிட்டார்கள். நீங்கள் மீண்டும் என்னுடைய chair-க்கு முன்பு உட்கார்ந்துவிட்டீர்கள். அதன்பின்பு அவை நடவடிக்கை தொடர வேண்டும் என்பதற்காக நான் உங்களை வெளியேற்றினேன்.

ஆனால், மாண்புமிகு ஆளுநர் அவர்கள், உரையாற்ற வரும்போது, ஜனநாயக ரீதியாக எல்லா எதிர்க்கட்சிகளுமே கொஞ்ச நேரம் கோஷம் போடுவார்கள். இரண்டு நிமிடங்கள், மூன்று நிமிடங்கள், ஐந்து நிமிடங்கள்-அந்தக் காலகட்டத்தில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இருக்கையில் உட்கார்ந்திருப்பார்கள். ஒன்று, கோஷமிடுபவர்களை வெளியேற்றுவார்கள் அல்லது ஜனநாயக ரீதியில் அவர்கள் அவையில் உட்கார்ந்துவிடுவார்கள் அல்லது அவர்களாகவே வெளி நடப்பு செய்துவிடுவார்கள். அதன்பின்பு மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உரையாற்றுவார்கள். இதுதான் தொன்றுதொட்டு நடந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், பல காலக்கட்டங்களில் மாண்புமிகு ஆளுநர் உரையாற்றுகின்றபோது, மாமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் காய்கறி மாலைகளையெல்லாம் போட்டுக்கொண்டு வந்தார்கள். அதேபோல், நீங்கள் அந்தப் பதாகைகளை எடுத்துக்கொண்டு வந்து மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு நெருக்கடி கொடுத்ததால், அவர் சென்றுவிட்ட காரணத்தினால், அவையிலிருந்து உங்களை நான் வெளியேற்றினேன்.

அதேபோல, ஆளுநர் அவர்கள் வெளியே சென்ற பின்பும், நான் நம்முடைய முதன்மைச் செயலாளர் அவர்களை அழைத்து நேரே போய் ஆளுநரைக் அழைத்து  வாருங்கள் என்று சொல்லி அனுப்பினேன்.

               மாண்புமிகு ஆளுநர் அவர்கள்  அன்றைய தினமே, இங்கே நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது என்று ‘X’ தளத்தில் பதிவிட்டிருப்பதற்கு, காரணம் நம்முடைய -- Doordarshan  அலுவலர்களை, அவர்களோடு அழைத்து வந்து, ஒளிப்பதிவு எடுப்பதற்கு மறுக்கப்பட்டது. இரண்டு நிமிடம் அல்லது  மூன்று நிமிடங்கள்தான், மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பிறகு இருந்தார்கள். அதன்பின் அவர்கள் வெளியே சென்று விட்டார்கள். அதன்பின்பு என்ன நடந்தது என்பதையெல்லாம் நாம் நேரடி ஒளிபரப்பிலே என்ன என்று பார்த்து தெரிந்துகொண்டோம். இதுவரையில் இருந்த DD-க்கு பதிலாக, இப்போது நம்முடைய தமிழ்நாடு அரசினுடைய I&PR துறை இப்போது முழுமையாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஆங்காங்கே புதியதாக இப்போது இவர்கள் இதை ஏற்றுக்கொண்டு, அந்த ஒளிபரப்பை அவர்கள் செய்கின்ற காரணத்தினால் சில நேரங்களில் சில நிறை, குறைகள் இருந்தாலும் நிச்சயமாக அது நிவர்த்தி செய்யப்படும். இந்த அரசு, முதல் முதலாக கேள்வி-பதில் ஆரம்பித்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பதிலில் இருந்து, மற்ற மாண்புமிகு அமைச்சர்கள் பதில்கள் வரை, முக்கியமான நிகழ்வுகள் வரை, இப்போது நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருக்கிறோம். நிச்சயமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முழுமையாக நேரடியாக ஒளிபரப்பு செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆகவே, நான் ஒன்றை மட்டும் மாண்புமிகு ஆளுநர் அவர்களுடைய பதிவிற்கு  விடையாக சொல்கின்றேன். மாண்புமிகு ஆளுநர் அவர்கள் DD பொதிகை தொலைக்காட்சி மூலமாக எதாவது படம் பிடித்து, அதை வெட்டி, ஒட்டி ஏதாவது செய்யலாம் என்று நினைத்து வந்தததை இந்த அரசு முன்அறிந்து, அவரால் கொடுக்கப்பட்ட நெருக்கடியில் இருந்து, இந்த அரசை, இந்தப் பேரவையை மீட்டது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய நிர்வாகம்தான் அதை முன்அறிந்து, நிவர்த்தி செய்திருக்கின்றது. இல்லையென்றால் DD பொதிகை தொலைக்காட்சி அன்று இங்கே உள்ளே இருந்திருந்தால் அவ்வாறுதான் நடந்திருக்கும். அது நடக்கவில்லையே என்ற காரணத்தினால்தான், நம்முடைய மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இப்படிப்பட்ட பதிவுகளை போட்டு, தமிழக மக்களையும், தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களையும், அவமானப்படுத்துகின்ற ஒரு செயலாக செய்வதை, வன்மையாக இந்தப்பேரவை கண்டிக்கிறது. நிச்சயமாக நம்முடைய மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை. இந்திய அரசமைப்பு சட்டம் 176 (1)-ன்படி அமைச்சரவை எழுதிக்கொடுக்கின்ற, உரையை வாசிப்பது மட்டும்தான் அவருடைய ஜனநாயக கடமை. தேசிய கீதம் முதலில் பாடுங்கள் என்று கோரிக்கை வைப்பதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை. அதாவது மாண்புமிகு ஆளுநர் அவர்கள் சட்டப்படி நடக்கவேண்டுமே தவிர, கோரிக்கை வைத்து, எங்களுக்கு இது தாருங்கள் என்று கேட்பது முறையல்ல. கோரிக்கை வைப்பது சாதாரண மக்கள், எங்களுக்கு ஆயிரம் ரூபாய் வேண்டுமென்று கோரிக்கை வைக்கலாம். நம்முடைய மாண்புமிகு கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கோரிக்கை வைக்கலாம். ஒரு அரசமைப்பு சட்டம் சார்ந்த, பேரவை விதிப்படி நடப்பதில், இவ்வாறு தலையிடக்கூடாது என்பதை நான் மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன்.

               அடுத்து, 6-1-2025 நாளன்று பேரவையில் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் தனக்கு,  அளிக்கப்பட்டுள்ள கடமையை ஆற்ற மாண்புமிகு அளுநர் அவர்கள் இப்பேரவைக்கு வருகை தந்திருக்கிறார்கள். எதிர்க்கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்கள், பேரவையின் விதிகளுக்கு மாறாக, பதாகைகளை தாங்கி மாண்புமிகு ஆளுநரை உரையாற்ற விடாமல் இடைமறித்தும், கூச்சலிட்டும், திட்டமிட்டு குழப்பம் விளைவித்துக்கொண்டிருந்தனர். பேரவை விதி 17-ன்கீழ் ஆளுநர் உரைக்கு முன்னர் இடையூறு செய்யக்கூடாது என இருந்தாலும், ஜனநாயக முறைப்படி அமைதியான முறையில் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கலாம். ஆனால் விதிகளின்படியும், மரபுகளின்படியும் அன்றி, நடந்தவற்றை எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. கடந்த 2023 அன்று, ஜனவரி திங்கள் 9 ஆம் நாள் இங்கே மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உரையாற்றும் முன்னிலையில், ஜனநாயக முறைப்படி மரபையொட்டி, எதிர்க்கட்சிகள் நடந்துக்கொண்ட முறையை சுட்டிக்காட்டி, அது தவிர்க்கப்படவேண்டும். அவர் உரையாற்ற வருகையில், இடையூறு செய்யக்கூடாது என தீர்ப்பளித்திருந்தேன். கடந்த 6 ஆம் தேதியும் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உரையாற்றுகையில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த மாண்புமிகு உறுப்பினர்கள் இங்கே நடந்துக்கொண்ட விதத்தை, நீங்கள் அனைவரும் அறிந்துள்ளீர்கள். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அன்றே நான் தெரிவித்து இருந்தேன். இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படவேண்டுமென்றும்,  இது அவை உரிமை மீறிய செயல் என்றும் என்னிடத்திலே காலையில் இருந்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் வலியுறுத்தியுள்ளார்கள்.

அன்றைக்கு அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்க வேண்டுமென்றே, விதிகளுக்கு மாறாக, மரபுகளைப் பின்பற்றாமல் குழப்பம் விளைவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்பதில் அனைவருக்கும் ஒருமித்த கருத்து உள்ளதாலும், வருங்காலங்களில் இந்த நிகழ்வு என்பது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக்கூடாது என்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆகவே, 6-1-2025 அன்று பேரவையில் நடைபெற்ற இந்நிகழ்வினை மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது இது அவை உரிமை மீறிய செயலாக இருப்பதால், இதுகுறித்து விசாரித்து, ஆய்ந்து அறிக்கை அளிப்பதற்காக பேரவை விதி 226-ன்கீழ் அவை உரிமைக் குழுவிற்கு அனுப்பி வைக்கிறேன்.” என்று அவைத்தலைவர் அப்பாவு பேசினார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com