பா.ம.க.வில் ஏற்பட்ட புகைச்சலை அடுத்து அன்புமணிக்கும் அவரின் தந்தை இராமதாசுக்கும் இடையிலான மோதலாக வெடித்தது. பல மாவட்டச் செயலாளர்களை இராமதாசு நீக்க நீக்க, அவர்களை அதே பதவியில் தொடர்வதாக கட்சியின் சட்டதிட்டப்படி அன்புமணி அறிவித்துவருகிறார்.
இந்தப் பிரச்னை பெரிதாகாமல் தடுக்க, முன்னாள் தலைவர்கள் தீரன், ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி ஆகியோர் இராமதாசிடம் சமாதானம் பேசிவருகின்றனர்.
இன்னொரு பக்கம், அன்புமணியை அவரின் தந்தையுடன் பேசுமாறு கூட்டணிக் கட்சிகளின் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், தைலாபுரம் தோட்டத்துக்கு இன்று காலையில் சென்ற அன்புமணி, அவரின் தந்தை இராமதாசைச் சந்தித்தார். இருவரும் முக்கால் மணி நேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. ஆனால் யார் கூறியதை யார் கேட்டுக்கொண்டார்கள் என்பது வெளியிடப்படவில்லை.
அத்துடன், பிரபல அரசியல் இடையீட்டாளரும் சங் பரிவார் புள்ளியுமான ஆடிட்டர் குருமூர்த்தி பா.ம.க. பிரச்னையிலும் மத்தியஸ்தம் செய்யும் முயற்சியாக இராமதாசுடன் பேசிவருகிறார். சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் அவருடன் இருந்தார்.
குருமூர்த்தி ஏற்கெனவே அ.தி.மு.க.வில் பிரச்னை வந்தபோது பன்னீர்செல்வம் தரப்புக்கும் பழனிசாமி தரப்புக்கும் இடையே சமாதானம் செய்வதில் ஈடுபட்டது நினைவிருக்கலாம்.