மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை, 100 நாள் வேலை கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஏப்-22 முதல் சென்னை கோட்டை தொடர் முற்றுகை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில தலைவர் தோ.வில்சன், பொதுச்செயலாளர் பா.ஜான்ஸிராணி ஆகியோர் இதுகுறித்து இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், “ஆந்திரா மாநிலத்தைப் போன்று மாற்றுத்திறனாளிகளுடைய ஊனத்தின் தீவிரத்தைப் பொறுத்து தமிழகத்திலும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.6000, ரூ.10,000, ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இரண்டிலும் உதவித்தொகைக்காக விண்ணப்பித்து ஓராண்டுக்கும் மேலாகக் காத்திருப்பவர்கள் மற்றும் பொருத்தமான காரணமின்றி ஏற்கனவே உதவித்தொகை பெற்றுவந்து நிறுத்தப்பட்டுள்ளவர்கள் என சுமார் ஒரு லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்கிட வேண்டும்.
ஏற்கனவே தமிழக அரசும் சமூக நலத்துறை அமைச்சரும் வாக்குறுதி அளித்தும் நிறைவேற்றப்படாமல்.. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத நடைமுறையாக தமிழகத்தில் 18வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் வயதுவரம்பு தளர்வுக்குழு மூலம் உதவித்தொகை என்ற நிலைமையை – வயது வரம்பை நீக்கி, விண்ணப்பிக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்கிட வேண்டும்.
வருவாய்த்துறை மூலம் உதவித்தொகை வழங்கப்படும் நடைமுறையை மாற்றி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட வேண்டும். ஆகிய உதவித்தொகை சம்பந்தப்பட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தியும்..
100 நாள் வேலை திட்டத்தில் விண்ணப்பிக்கின்ற மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் வேலை அட்டை வழங்குவதுடன், 100 நாட்களும் வேலையை முழுமையாக வழங்க உத்தரவாதமான தீவிர நடவடிக்கை வேண்டும். 50 சதவீத பணி என்ற அடிப்படையில் 4 மணி நேரம் என ஏற்கனவே இருந்துவந்த நடைமுறையை, 8 மணி நேரம் – நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்ற 2024 ஊரகவளர்ச்சித்துறை உத்தரவை ரத்து செய்து 4 மணி நேர பணியை உத்தரவாதம் செய்ய வேண்டும். 2 கி.மீ. தூரத்திற்கு மேல் செல்ல வேண்டிய பணித்தளத்திற்கு வாகன ஏற்பாடு, பணித்தளத்தில் கழிப்பறை உள்ளிட்ட சட்டப்படியான மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வசதிகள் செய்துதர வேண்டும்.
சமூகப்பாதுகாப்பு திட்டங்களில் 25% அளவு கூடுதலாக வழங்க வேண்டும் என்ற ஊனமுற்றோர் உரிமைகள் சட்ட விதி அடிப்படையில் வேலை நாட்களை 125 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும். 2024-25 ஊதிய பாக்கிகளை உடனடியாக வழங்க வேண்டும்.
ஊதிய தாமதத்திற்கான சட்டப்படி தாமதக் கட்டணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்டப் போராட்டங்களை எமது சங்கம் நடத்தியும் தமிழக அரசு கண்டுகொள்ளாததால் ஏப்-22 செவ்வாய் 10-00 மணி முதல் சென்னை எழிலகத்தில் துவங்கி கோரிக்கை நிறைவேறும் வரை கோட்டை - தலைமை செயலகத்தை தொடர் முற்றுகையிடப்படும்.” என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.