கடந்த நான்கு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் புதியதாக ஒரு மாவட்டதையாவது உருவாக்கி இருக்கிறீர்களா என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இராணிப்பேட்டையில் அ.தி.மு.க. பிரமுகர் இரவியின் இல்லத் திருமண விழாவில் இன்று அவர் கலந்துகொண்டார். அங்கு பேசுகையில், திருமணத்தில் பெரும்பாலும் அரசியல் பேசுவதைத் தவிர்த்துவிடுவேன்; ஆனாலும் இங்கு பேசுகிறேன் என்று குறிப்பிட்டார்.
மேலும், ” அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் விரைவில் இடம்பெறும். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் போகிற இடமெல்லாம் 2026 தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றிபெறுவதாகச் சூளுரைத்துக்கொண்டு வருகிறார். ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். அந்தத் தேர்தல் அ.தி.மு.க. வெற்றிபெறுகின்ற தேர்தல். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் உட்பட ஆறு புதிய மாவட்டங்களை உருவாக்கித் தந்தோம். நான்கு ஆண்டு ஆட்சி முடிந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள தி.மு.க. ஏதாவது ஒரு மாவட்டத்தையாவது உருவாக்கிக் காட்டியுள்ளதா?” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.