ஓட்டுநரை செருப்பால் தாக்கிய மேலாளர்... கட்டப்பஞ்சாயத்து செய்யவா அரசாங்கம்?

ஓட்டுநரை செருப்பால் தாக்கிய மேலாளர்... கட்டப்பஞ்சாயத்து செய்யவா அரசாங்கம்?
Published on

மதுரையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டதற்கு காரணமான உதவி மேலாளர் உடனடியாக  கைது செய்யப்பட வேண்டும்; இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 


”மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில், எந்தத் தவறும் செய்யாத அரசுப் போக்குவரத்துக்கழக ஓட்டுநரை அரசுப் போக்குவரத்துக்கழக உதவி மேலாளர் காலணியால் அடித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதற்குக் காரணமாக உதவி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசும், காவல்துறையும்  அவரை காணொலியில் மன்னிப்புக் கேட்கச் சொல்லி விட்டு ஒதுங்கியிருப்பது  அதைக் விடக் கொடுமையானது.  போக்குவரத்துக்கழகம் மற்றும் காவல்துறையின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.” என்று அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

”பாதிக்கப்பட்ட அரசு பேருந்தின் ஓட்டுநர் எந்தத் தவறும் செய்யவில்லை. மாறாக, பேருந்தை இயக்கும்படி பயணிகள் கோரிய போது உயரதிகாரியான  மேலாளர் ஆணையிட்டால் தான் இயக்க முடியும் என்று கூறியுள்ளார்.  இதில் எந்தத் தவறும் இல்லை. இது தொடர்பாக  உதவி மேலாளரிடம் பயணிகள் முறையிட்ட போது,  பயணிகளைத் தரக்குறைவாகப் பேசிய உதவி மேலாளர், சம்பந்தப்பட்ட ஓட்டுநரை தாம் அணிந்திருந்த காலணியால் அடித்திருக்கிறார்.  இது மன்னிக்க முடியாத குற்றம்.

ஓட்டுநரை உதவி  மேலாளர் காலணியால் தாக்கும் காணொலி வைரலாகி வரும் நிலையில், அதனடிப்படையில் விசாரணை நடத்தி  உதவி மேலாளர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்  திவு செய்யப்பட்டு  அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,  அதற்குப் பதிலாக நடந்த நிகழ்வுக்கு மன்னிப்புக் கேட்பதாக  உதவி மேலாளரை காணொலி வெளியிடச் செய்திருக்கிறது அரசு. இது  அப்பட்டமான கட்டப்பஞ்சாயத்து என்பதைத் தவிர வேறில்லை.” என்று அன்புமணி சாடியுள்ளார்.

”பொதுமக்கள் மத்தியில் ஒருவரை எவரேனும் காலணியால் தாக்கும் பட்சத்தில்  அவர் காணொலியில் மன்னிப்பு கேட்டால் போதுமானது என்றால்,  பலரும் முன்கூட்டியே மன்னிப்பு காணொலிகளை பதிவு செய்து வைத்து விட்டு,  யாரை வேண்டுமானாலும் காலணியால் தாக்குவார்கள். இப்படி ஒரு சூழலைத் தான்  தமிழக அரசு, போக்குவரத்துக் கழகம், காவல்துறை ஆகியவை விரும்புகின்றனவா என்பதை அரசு விளக்க வேண்டும். அரசின் கடமை நிர்வாகம் செய்வது தான், கட்டப்பஞ்சாயத்து செய்வதில்லை என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com