அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளிலும் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த நெல்லை கருப்பசாமி பாண்டியன் இன்று காலையில் காலமானார்.
இவர் 1977-இல் ஆலங்குளம், 1980-இல் பாளையங்கோட்டை, 2006-இல் தென்காசி தொகுதிகளிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியவர் ஆவார்.
இரு கட்சிகளிலும் மாவட்டச்செயலாளராகவும் செயல்பட்டுள்ளார்.
கருப்பசாமியின் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. கருப்பசாமி பாண்டியன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். நீண்டகாலம் அவையின் உறுப்பினராக இருந்த அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் உடனடியாக இரங்கல் தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தன் இரங்கல் செய்தியில் , “ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் தளகர்த்தர்களில் ஒருவரும், அ.இ.அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க. முதல் மாவட்டச் செயலாளர் என்கிற பெருமைக்குரியவருமான ஆருயிர்ச் சகோதரர் வீ.கருப்பசாமி பாண்டியன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
தமது 26 ஆவது வயதிலேயே ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தொடர்ந்து பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணி ஆற்றியவர்.
“என் தம்பி கருப்பசாமி பாண்டியன் உருவம்தான் கருப்பு. உள்ளமோ வெள்ளை” என்று மக்கள் திலகத்தால் பாராட்டிப் போற்றப்பட்டவர்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அம்மையார் செல்வி ஜெயலலிதா தலைமையில் சில காலம் பணியாற்றி, திராவிட முன்னேற்றக் கழகத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் தலைமை ஏற்று மாவட்டச் செயலாளராகவும், தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் தொண்டாற்றியவர்.
ஆளும் கட்சிகளில் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் மாவட்டத்திற்குத் தேவையான திட்ங்களைக் கொண்டுவர பாடுபட்டவர்.
1980 களில் நானும், அவரும் மாவட்ட அரசியலில் எதிரும் புதிருமாகப் பணியாற்றிய நெருப்புப் பொறி பறந்த காலகட்டத்தில்கூட எங்களுக்குள் அரசியலுக்கு அப்பாற்பட்டதோர் இணக்கமான நட்பு பேணப்பட்டு வந்ததை அனைவரும் அறிவார்கள். எங்கள் இயக்கத் தோழர்கள் நிகழ்ச்சிகளில் இவரைச் சந்திக்கும் போதெல்லாம் எங்கள் நட்பை, பாசப் பிணைப்பை வெளிப்படுத்துவார். என் பொதுவாழ்வு சிறக்க வேண்டும் என மனதார விரும்பியவர் என்பதை அறிவேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
”தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள திருத்து கிராமத்தில் பிறந்து, 50 ஆண்டு காலமாக நெல்லை மாவட்ட அரசியல் களத்தில் சிறந்ததோர் ஆளுமையாக வலம் வந்து, நெல்லைச் சீமைத் தொண்டர்களால் “நெல்லை நெப்போலியன்” எனப் போற்றப்பட்ட ஆருயிர் சகோதரர் வீ.கருப்பசாமி பாண்டியன் அவர்களின் மறைவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எங்கள் இயக்கத்தின் சார்பில் துணைப் பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன், நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம், நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளர் உவரி ரைமண்ட் ஆகியோர் பங்கேற்று புகழ் வணக்கம் செலுத்துவார்கள்.” என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.