கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கவேண்டும். அதற்கான நிதியை மாநில அரசு வழங்கும். இதற்காக மத்திய அரசு குறிப்பிட்ட அளவு நிதியை மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டும்.
ஆனால் கடந்த கல்வியாண்டுக்கான நிதியை தமிழக அரசு வழங்கவில்லை எனக்கூறி, பெரும்பாலான தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு 25 சதவீத சேர்க்கையை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிசக் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உட்பட தலைவர்களும் கல்வியாளர்களும் மாநில அரசு இதில் தலையிடுமாறு கேட்டுக்கொண்டனர்.
இதனிடையே சேர்க்கையைத் தொடங்க மாநில அரசுக்கு உத்தரவிடுமாறு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
அதில், இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி தரவேண்டிய நிதியை தமிழக அரசுக்கு மைய அரசு உடனே தரும்படியும் சேர்க்கையைத் தொடங்கும்படியும் உத்தரவிட்டுள்ளனர்.