கூட்டணி தொடர்பாக ஊடகங்கள், சமூக ஊடகங்களில் தலைமையின் அனுமதி இல்லாமல் கட்சியினர் கருத்துக்கூறக் கூடாது என நேற்று அ.தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து பா.ஜ.க. சார்பிலும் இப்படியான வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் இன்று நடைபெற்ற பா.ஜ.க. பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார். அப்போது, தேர்தல் கூட்டணி குறித்து மைய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பேசிக்கொள்வார்கள் என்றும் தான் உட்பட்ட நிர்வாகிகள் யாரும் பேசவேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், முகநூல், டுவிட்டர் ஆகியவற்றில் அது எப்படி இது எப்படி என்று கூட்டணியைப் பற்றி கருத்துகள் சொல்லவேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாட்டில் சனாதனத்துக்கு, ஆன்மிகத்துக்கு எதிரான ஆட்சி இருக்கக்கூடாது என்பதுதான் நம் இலட்சியமாக இருக்கவேண்டும்; பொறுப்பாளர்கள் அனைவரும் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் என்றும் நயினார் அறிவுறுத்தினார்.