சிந்துவெளி தொடர்பாக அகழ்வாய்வுகளில் முதலில் ஈடுபட்டு அதன் பழமையை உலகுக்குச் சொன்ன சர் ஜான் மார்சலுக்கு சென்னை, எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்ட சிலை அமைப்புப் பணி விறுவிறுவென முடிந்தது. இன்று அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அருங்காட்சியகம் வளாகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இச்சிலையைத் திறந்துவைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவரைப் பற்றி நினைவுகூரப்பட்டுள்ளது.
“சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் அவர்கள் இங்கிலாந்து நாட்டின் செஸ்டர் நகரில் 19.3.1876 அன்று பிறந்தார். 1902-ஆம் ஆண்டு தனது 26 வயதில் இந்தியத் தொல்லியல் கழகத்தின் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றார். 1924-ஆம் ஆண்டு செப்டம்பர் 20-ஆம் நாள் வரலாற்று சிறப்புமிகுந்த சிந்துவெளிப் பண்பாட்டின் கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவித்தார். இந்தியத் துணைக்கண்ட வரலாறு பற்றி அதுவரை நிலவிய புரிதல்களைப் புரட்டிப் போட்டது இந்த அறிவிப்பு. சிந்துவெளிப் பண்பாட்டின் மொழி குறித்த திராவிடக் கருதுகோளுக்கு வித்திட்டார்.
சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் இந்தியத் தொல்லியல் கழகத்தின் தலைமைப் பொறுப்பு வகித்த காலத்திலேயே இங்கிலாந்து நாட்டின் தொல்லியல் அறிஞர் அலெக்ஸாண்டர் ரீ மூலம் ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் (1903-04) நடைபெற்றன. தமிழ் மண்ணின் தொன்மையை உலகம் அறிவதற்கு வித்திட்ட சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் அவர்கள் 17.8.1958 அன்று மறைந்தார்.” என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.