’சித்தராமையாகிட்ட மு.க.ஸ்டாலின் பாடம் படிக்கணும்’

’சித்தராமையாகிட்ட மு.க.ஸ்டாலின் பாடம் படிக்கணும்’
Published on

மத்திய அரசு நடத்துவது வேறு, மாநில அரசுநடத்துவது வேறு; சித்தராமய்யாவிடம் சமூகநீதி படிக்கவேண்டும்; தமிழகத்தில் சாதிவாரி சர்வே நடத்தவேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

“மத்திய அரசின் சார்பில் 2027&ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில், கர்நாடக அரசின் சார்பில் மீண்டும் சாதிவாரி மக்கள்தொகை சர்வே நடத்தப்படுவது ஏன்? என்பது குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா அற்புதமான விளக்கம் அளித்திருக்கிறார். இவ்வளவுக்குப் பிறகும் சாதிவாரி சர்வே நடத்த தமிழக அரசு மறுப்பது அதன் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.” என அறிக்கை ஒன்றில் அவர் கூறியுள்ளார். 

”மாநில அளவில் சமூகநீதியை நிலைநிறுத்தும் வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக கர்நாடகத்தில் கடந்த 2015&ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், கணக்கெடுப்பு நடத்தப்பட்டு பத்தாண்டுகளாகிவிட்ட நிலையில், மீண்டும் புதிய சாதிவாரி மக்கள்தொகை சர்வே நடத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமய்யா அறிவித்திருக்கிறார். மத்திய அரசின் சார்பில் 2027&ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில், கர்நாடகத்தின் சார்பில் தனியாக சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டுமா? என்ற வினாவுக்கு முதலமைச்சர் சித்தராமய்யா கூறியிருக்கும் கருத்துகள் முக்கியமானவை.

‘‘மத்திய அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மட்டும் தான் நடத்துகிறது. ஆனால், நாங்கள் விரிவான சமூகப் பொருளாதார சாதி சர்வே மேற்கொள்ளவிருக்கிறோம். சமூகநீதி வழங்க வேண்டும் என்றால், ஒவ்வொரு சமூகம் குறித்த சமூக, பொருளாதார, கல்வி நிலை குறித்த புள்ளிவிவரங்கள் தேவை. அவை இல்லாமல் நலத் திட்டங்களைச் செயல்படுத்த முடியாது. அதற்காகத் தான் சாதிவாரி சர்வே நடத்த உள்ளோம்’’ என்று சித்தராமய்யா கூறியிருக்கிறார். மத்திய அரசே சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தினாலும்,  மாநிலத்தில் சமூகநீதியை நிலைநாட்ட மாநில அரசு தனியாக சாதிவாரி சர்வே நடத்த வேண்டும் என்பதற்காக நான் தெரிவித்து வந்த காரணங்களை கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா அப்படியே எதிரொலித்திருக்கிறார். சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களின் நிலைப்பாடுகள் ஒன்றாகத்தான் இருக்கும் என்பதற்கு இது சான்று.

ஆனால், தமிழ்நாடு தான் சமூகநீதியின் தொட்டில், இங்கு நாங்கள் தான் சமூகநீதிக்கு உரம் போட்டு  தழைக்க வைக்கிறோம் என்று எழுதிக் கொடுக்கப்பட்ட வசனங்களை படித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இது குறித்து வாயைத் திறக்க மறுப்பது ஏன்? கனடாவில் காலை உணவுத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டதற்கெல்லாம் தமிழ்நாடு தான் முன்னோடி என்று தனக்குத் தானே புகழ்மாலை சூட்டிக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்டை மாநிலத்தில் சமூகநீதிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்தும், அதை தமிழகத்திலும் செயல்படுத்த வேண்டும் என்ற பா.ம.க.வின் கோரிக்கை குறித்தும் கருத்து தெரிவிக்க மறுப்பது ஏன்? சாதிவாரி சர்வே என்றால் முதல்வருக்கு பாகற்காயை விட மோசமாக கசப்பது ஏன்?

சாதிவாரி மக்கள்தொகை சர்வே எடுப்பதற்கான தேவை கர்நாடகத்திற்கும், தெலுங்கானத்திற்கும், ஒதிஷாவுக்கும் எந்த அளவுக்கு இருக்கிறதோ, அதை விட நூறு மடங்கு தமிழ்நாட்டிற்கு இருக்கிறது. தமிழ்நாடு சமூகநீதி மாநிலம் என்று கூறப்படுவதற்கு ஏதேனும் ஒரு நியாயம் இருக்கிறது என்றால், அது உச்சநீதிமன்றம் நிர்ணயம் செய்த 50% உச்சவரம்பையும் மீறி 69% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படுவது தான். ஆனால், அதற்கே இப்போது மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் போது, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் 69% இட ஒதுக்கீட்டை எவ்வாறு தீர்மானித்தீர்கள்? என்று உச்சநீதிமன்றம் வினா எழுப்பினால், அதற்கு தமிழக அரசிடம் பதில் இருக்காது. திருப்தியளிக்கும் பதிலை தமிழக அரசு வழங்கவில்லை என்றால் 69% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படக்கூடும்.

அப்படி ஒரு நிலை ஏற்படுவதைத் தடுப்பதற்காகத் தான் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை சர்வே நடத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல பத்தாண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. அத்தகைய சாதிவாரி சர்வேயை நடத்த சட்டப்பூர்வமாக எந்தத் தடையும் இல்லை. தமிழ்நாட்டில் அதற்கான மனிதவளம்,  நிதி ஆகிய எதற்கும் பஞ்சமில்லை.

ஆட்சியாளர்களுக்கு தான் தமிழ்நாட்டு மக்களுக்கு சமூகநீதி வழங்க எண்ணம் இல்லை. தமிழ்நாட்டில் சமூகநீதி ஏற்றத்தாழ்வுகள் இப்போதுள்ளவாறே தொடர வேண்டும்; அடித்தட்டு மக்கள் அப்படியே நீடிக்க வேண்டும்; அவர்கள் முன்னேறி விடக் கூடாது என்ற வஞ்சக எண்ணம் தான் அவர்களின் நெஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கிறது. தமிழகத்தில் சமூகநீதி இருள் சூழ இதுவே சமூகநீதியைக் காப்பது தான் தமது அரசின் நோக்கம் என்று கூறிக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூகநீதியில் கொஞ்சமாவது அக்கறை இருந்தால் கர்நாடக முதலமைச்சரிடமிருந்து சமூகநீதிப் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி சர்வே நடத்த அவர் ஆணையிட வேண்டும்.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com