மலரும் சித்திரையை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்வோம் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்தியுள்ளார்.
இன்று மாலையில் அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், ”இளைய வயதினருக்கு இச்சித்திரை மாதம் தான் வசந்த விழா காலம் என இலக்கியம் கூறுகிறது. “சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன என்றும், இதுவே இந்திர விழா எடுக்கும் பருவம்” என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் வர்ணிக்கின்றார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
”இளவேனில் காலத்தின் தொடக்கமாக மலரும் பொன்னாள். சுட்டெரிக்கும் கோடை வெம்மையைத் தந்து, இயற்கையின் ஆடைகளாம் இலைகளை உதிரச் செய்து, கூம்பி நிற்கும் மரங்களையும் காட்டி. பின்னர் மெல்ல மெல்ல அவை தளிர்த்து, இலைகளையும், மொட்டுக்களையும், பூக்களையும், காய்களையும், கனிகளையும் தந்து, இயற்கைத் தாய் நம்மைக் களிப்படையச் செய்யும் காலம். மலரும் சித்திரையை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்வோம்.” என வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, ”பல மாநிலங்களின் ஒன்றியமான இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்த மாமேதை, அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிறந்த பொன்னாள் ஏப்ரல் 14. ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்களுள் ஒருவராகப் பிறந்து, மதி நுட்பத்தால், பல்வேறு துறைகளில் மேன்மையான பட்டங்களைப் பெற்று, உலக நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களின் மிகப்பெரும் தன்மைகளை எல்லாம் ஆராய்ந்து, இந்திய மாநிலங்களின் ஒன்றியத்திற்கான அரசமைப்புச் சட்டத்தை, நெகிழ்ச்சி உடையதாகவும், அதே நேரத்தில் இறுக்கமானதாகவும் உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கரின் பிறப்பும், அறிவுப் பரப்பும், எண்ணுந்தொறும் உள்ளம் சிலிர்க்கும். அறிவின் வாராத வெற்றிகள் இல்லை என்பதை நிலைநாட்டியவர்.” என்றும் வைகோவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.