தடையால் சர்ச்சைக் கட்டுரையை நீக்கியது வயர் ஊடகம்!

தடையால் சர்ச்சைக் கட்டுரையை நீக்கியது வயர் ஊடகம்!
Published on

தி வயர் ஊடகத்தில் வெளியான பாகிஸ்தான் தொடர்பான செய்திக்கட்டுரை காரணமாக, அந்தத் தளத்தை நேற்று நாடு முழுவதும் தடை விதித்து மைய அரசு முடக்கிவைத்தது.

இதற்கு பல ஊடக அமைப்புகளும் இடதுசாரி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. முதலமைச்சர் ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மமதா ஆகியோரும் அதிருப்தி தெரிவித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா மைய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்குக் கடிதம் அனுப்பினார்.

இந்த நிலையில், வயர் ஆசிரியர் குழுவின் சார்பில் மைய மின்னணு, தகவல்நுட்பத் துறைக்கு முறையீடு அனுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து நேற்று இரவு அத்துறையின் சார்பில் தகவல் அனுப்பப்பட்டது.

சிஎன்என் அமெரிக்க ஊடகம் வெளியிட்ட செய்தியை எடுத்தாண்ட வயரின் செய்திக்கட்டுரை ஆட்சேபணைக்கு உரியது என்றும் அதனால் அத்தளத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டிருந்தது.

உடனடியாக இரவோடு இரவாக வயர் ஆசிரியர் குழு அதற்கு பதில் அனுப்பியது. குறிப்பிட்ட அந்தக் கட்டுரை ஏற்கெனவே சிஎன்என் ஊடகத்தில் வெளியானதுடன், அதைப் பார்க்க இந்தியாவில் எங்கும் தடை விதிக்கப்படவில்லையே; அதை எடுத்து ஆண்டிருந்த வயர் கட்டுரைக்காக மொத்த இணையதளத்தையே முடக்கிவைப்பது சரியில்லையே என்றும் அவர்கள் கேட்டிருந்தனர்.

அத்துடன், சட்டரீதியில் இதற்குத் தீர்வுகாணும்வரை குறிப்பிட்ட கட்டுரையை வயர் தளத்திலிருந்து நீக்குவதாகவும் தெரிவித்தது. அதன்படி அக்கட்டுரை வயர் ஊடகத்தில் இடம்பெற்ற பக்கத்தில் அவர்களின் நிலைப்பாடு மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com