ஆளுநர்கள், குடியரசுத்தலைவர் போன்ற பதவிகளில் அமர்பவர்களுக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் கூறிய தீர்ப்பையொட்டி குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியது கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து நேரடியாகக் கருத்து எதையும் கூறாமல் இருந்துவந்த தி.மு.க.வின் தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது.
அவரின் சமூக ஊடகக் கருத்து:
“ அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டு 75 ஆண்டுகள் கடந்துவிட்டன.
எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளைச் சிதைத்து, பொதுக் கருத்தாடலில் வலதுசாரிக் கருத்துகளைத் திணிக்க முற்படும் தற்போதைய தீங்கானது ஆளுநர்கள், குடியரசுத் துணைத் தலைவர், அவ்வளவு ஏன் மாண்புமிகு குடியரசுத் தலைவர் உட்பட அரசியலமைப்புப் பதவிகளை அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதில் இருந்து முளைத்த ஒன்றாகும்.
மக்களாட்சியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான் அரசை நடத்த வேண்டும், அலங்கார நியமனப் பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் அல்ல! எந்தத் தனிநபரும், அது எத்தகைய உயர்பொறுப்பில் இருப்பவரானாலும் அவர் சட்டத்துக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். இதைத்தான் மாண்பமை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தீர்ப்பு தவறான வழிமுறையைச் சரிசெய்யும் நகர்வாகும். ஆகவே, இந்த வரவேற்கத்தகுந்த சீர்திருத்த நடவடிக்கை பல ஜனநாயக விரோத சக்திகளை நிலைகுலைய வைத்துள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தற்போதைய தேவை என்பது, இந்தச் சீர்திருத்தம் முழுமையாக நடைமுறைத்தப்படுவதை உறுதிசெய்வதே!” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.