தமிழக இரயில் திட்ட நிதியைத் திருப்புவதா?- அன்புமணி கேள்வி

தமிழக இரயில் திட்ட நிதியைத் திருப்புவதா?- அன்புமணி கேள்வி
Published on

தமிழக தொடர்வண்டித் திட்டங்களுக்கான நிதிரூ
”தமிழ்நாட்டில் திண்டிவனம் - திருவண்ணாமலை,   சென்னை - மாமல்லபுரம்- கடலூர் உள்ளிட்ட பல்வேறு புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ரூ.728 கோடியை ரயில்வே அமைச்சகத்திற்கு  தெற்கு தொடர்வண்டித் துறை திருபி அனுப்பியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டில் தொடர்வண்டிக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்கு எதிரான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.” என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியுள்ளார். 

”தமிழ்நாட்டில் இன்றைய நிலையில், 10 புதிய தொடர்வண்டிப் பாதை திட்டங்கள், 9 இரட்டைப் பாதைத் திட்டங்கள், 3 அகலப்பாதைத் திட்டங்கள் என மொத்தம் 22 திட்டங்கள் ரூ.33,467 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களுக்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ.7,154 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டங்களை விரைவு படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அதற்கு மாறாக  ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியையும் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்புவது தமிழகத்திற்கு செய்யப்படும் துரோகம்.” என்று அவர் சாடியுள்ளார். 

”தமிழகத் தொடர்வண்டித் திட்டங்களுக்கான நிதியை திருப்பி அனுப்பியதற்காக தெற்கு தொடர்வண்டித்துறையின் சார்பில் கூறப்பட்டுள்ள காரணங்கள் ஏற்க முடியாதவை.  விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படாதது, நிலங்கள் கையகப்படுத்தப்படாதது ஆகியவையே இதற்கான காரணங்களாக கூறப்பட்டுள்ளன. இது தவறு. கடந்த காலங்களில் இத்தகைய சூழல்கள் ஏற்பட்ட போது, செயல்படுத்த முடியாத நிலையில் உள்ள திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை  தமிழகத்தில் நிலுவையில் உள்ள இன்னொரு திட்டத்திற்கு செலவழிப்பது தான் வழக்கமாக இருந்திருக்கிறது. தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடுவதை அனுமதிக்க முடியாது.

தமிழகத்தில் தொடர்வண்டித் திட்டங்களை விரைவுபடுத்தும் விவகாரத்தில் தமிழக அரசு அதன் கடமையை செய்ய மறுப்பதும் கண்டிக்கத்தக்கது. கர்நாடகம், மராட்டியம் உள்ளிட்ட பல மாநிலங்கள் திட்டச் செலவில் பாதியை தாங்களே ஏற்றுக் கொண்டு திட்டப்பணிகளை விரைவுபடுத்தியுள்ளன. ஆனால், அத்தகைய முன்னெடுப்புகள் எதையும்  தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.

தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு இப்போது ஒதுக்கப்படும் அளவில் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால், இன்னும்  20 ஆண்டுகள் ஆனாலும் கூட அவற்றை செயல்படுத்தி முடிக்க முடியாது.  எனவே,  தமிழகத்திற்கான திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்து   மத்திய அரசிடம் தமிழக அரசு பேச வேண்டும்; திட்டச்செலவில் ஒரு பகுதியை ஏற்க வேண்டும்.  தமிழகத் திட்டங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்?  எந்தெந்தத் திட்டங்கள் எந்தெந்த ஆண்டில் நிறைவேற்றி முடிக்கப்படும் என்பது குறித்த விவரங்கள் அடங்கிய கால அட்டவணையை தொடர்வண்டித் துறை வெளியிட வேண்டும்.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com