உணவருந்திக்கொண்டே பேருந்தை இயக்கியஆம்னி பேருந்துஓட்டுநரின் செய்கையால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சோற்றுக்குப் பேர்போன மதுரையில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு நூற்றுக்கணக்கான தனியார் சொகுசுப் பேருந்துகள் சென்றுவருகின்றன. வழக்கம்போல நேற்றும் மாட்டுத்தாவணி தனியார் சொகுசுப் பேருந்துநிலையத்திலிருந்து சிறீகுமரன் டிராவல்ஸ் என்கிற நிறுவனத்தின் பேருந்து சென்னைக்குப் புறப்பட்டது.
அந்தப் பேருந்தை ஓட்டிச்சென்றவர் ஸ்டியரிங்கு மீது உணவை வைத்து சாப்பிட்டபடியே சர்வசாதாரணமாக பேருந்தையும் இயக்கிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்து அரண்டுபோன பயணிகள் அவரிடம் இதைப் பற்றிக் கேட்டனர்.
அதற்கு எந்தவிதப் பொறுப்பும் இல்லாமல், சர்வசாதாரணமாக பதில்கூறிய அவர், இப்படிச் சாப்பிடுவது இயல்புதான் என்றும் பொதுவாக நடு இரவு நேரத்தில் இப்படித்தான் சாப்பிட்டபடி வண்டி ஓட்டுவதாகவும் நேரம் இல்லாததால் இப்படி சாப்பிடுவதாகவும் சாவதானமாகக் கூறியுள்ளார்.
சிலர் இதைக் காணொலியாகவும் பதிவுசெய்து, சமூக ஊடகங்களில் அக்காட்சியை வெளியிட்டுள்ளனர். குறிப்பிட்ட பேருந்து ஓட்டுநர் மீதும், உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பயணிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.