தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் முருகன் கோயிலில் நாளை வைகாசி விசாகம் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி நகரத்தைத் தூய்மையாக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. வெளி மாவட்டப் பணியாளர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
நகரப் பேருந்து நிலையம் அருகில் அரசு மருத்துவமனைக்குப் பின்பாக இன்று நெல்லை மானூர் நகராட்சி தூய்மைப் பணியாளர் சுடலைமணி (40) பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது கழிவுநீர் லாரியிலிருந்து பைப்பை சாக்கடைக்குள் விடும்போது எதிர்பாராதவகையில் அவரும் உள்ளே இழுக்கப்பட்டார்.
அருகிலிருந்த சக பணியாளர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர் சாக்கடைக்குள் மூழ்கி உயிரிழந்தார்.
திருச்செந்தூர் தீயணைப்பு படை வீரர்கள் வந்து அவரது சடலத்தை மீட்டனர்.
கோயில் நிகழ்ச்சிக்காக வந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டவர் கண்முன்னே சடலமாக ஆனதை நேரடியாகப் பார்த்ததில் சக ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.