நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை அ. ரேவதி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை க.பொன்னி ஆகியோருக்கு சிறந்த திருநங்கை விருது அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் குறிப்பிடத்தக்க முன்முயற்சியாகவும், அவர்களை சமூகத்தின் முக்கிய பங்களிப்பாளர்களாக அங்கீகரித்து சிறப்பிக்கும் விதமாகவும் 2021-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் "சிறந்த திருநங்கை விருது" வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதானது திருநங்கைகளின் நலனுக்காக அயராது பாடுபட்டு, சமூகத்தில் முன்மாதிரியாகத் திகழும் திருநங்கை ஒருவருக்கு வழங்கப்படுகிறது. மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவால் தேர்வு செய்யப்படும் இந்த விருதாளருக்கு, திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15-ஆம் நாளில் விருது வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.
இந்த விருதினைப் பெறுபவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள காசோலையும், அவர்களது சேவை மற்றும் சாதனைகளைப் பாராட்டும் விதமாக சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்த விருதானது திருநங்கை சமூகத்தின் உன்னதமான சாதனைகளை அங்கீகரிப்பதோடு, அவர்களது சமூக முன்னேற்றப் பணிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
அந்த வகையில் தனது சொந்த உழைப்பாலும், தனித் திறமையாலும் முன்னேறி, பல திருநங்கை மக்களின் வாழ்வில் மாற்றம் கொண்டு வந்து, அவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வரும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை அ. ரேவதி என்பவரின் சிறந்த சமூக சேவையைப் பாராட்டியும், திருநங்கைகள் தங்களது அயராத முயற்சியால் கல்வியிலும், கலையிலும் சிறந்து விளக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை க.பொன்னி என்பவரின் சிறந்த சமூக பங்களிப்பைப் பாராட்டியும், தமிழ்நாடு அரசின் 2025-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது வழங்கப்பட்டுள்ளது.
விருதுடன் தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழையும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வழங்கி பாராட்டினார்.