தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை 10 ரூபாய் கட்டண மருத்துவர் இரத்தினம் மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 96.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் மிகவும் புகழ்பெற்ற அவர், கடந்த 65 ஆண்டுகளாக அப்பகுதி மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்துவந்துள்ளார்.
ஆயிரக்கணக்கான பிரசவங்களை இவர் பார்த்துள்ளார்.
1980, 90-களில் இந்த வட்டாரத்தில் பிறந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் இவருடைய மருத்துவமனையில்தான் பிறந்தவர்கள் என்கிறார்கள், இப்பகுதி மக்கள்.
கணிசமானவர்களிடம் கட்டணம் வாங்காமலும் குறைந்தபட்சம் 10 ரூபாய், அதிகபட்சம் 100 ரூபாய் மட்டுமே கட்டணம் பெற்றுக்கொண்டு சிகிச்சை அளித்தது, இவரின் சேவை மனப்பான்மையைக் காட்டக்கூடியது என பல்வேறு தரப்பினரும் குறிப்பிட்டுள்ளனர்.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தினகரன், வேல்முருகன் முதலியோர் மருத்துவர் இரத்தினத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ பட்டுக்கோட்டை பகுதியில் மகப்பேறு மருத்துவ ச்சேவையை மகத்தான வகையில் செய்து, மக்களின் அபரிதமான செல்வாக்கினை பெற்ற ‘மனித நேய மருத்துவர்’T.A.K ரத்தினம் அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாத ஒன்று.அவரை பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும் அப்பகுதி பொதுமக்கள் யாவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினம் அவர்களின் இறுதி ஊர்வலம் நாளை முற்பகல் 11 மணியளவில் தொடங்கும் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.