தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனின் அண்ணன் திருமால்வளவன் நேற்று பா.ம.க. நிறுவனர் இராமதாசைச் சந்தித்தார். அதையொட்டி, பா.ம.க.வில் வேல்முருகன் சேரப் போகிறார் என்றும் அன்புமணிக்குப் போட்டியாக அவரை இராமதாசு வளர்த்துவிடப் போகிறார் என்றும் அதற்காகத்தான் வேல்முருகனின் அண்ணன் தைலாபுரம் தோட்டத்துக்குப் போய் சந்தித்தார் என்றும் தகவல்கள் பரவின.
வட தமிழகத்தில் இந்தச் செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடலூரில் வேல்முருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தைலாபுரம் தோட்டத்தில் தன்னுடைய அண்ணன் இராமதாசைச் சந்தித்தது உண்மைதான் என்றும் ஆனால் அதற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்றும் கூறினார்.
அதே சமயம், அன்புமணி தன்னுடன் தொலைபேசியில் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.
தான் முன்னர் பா.ம.க.வில் இருந்து விலகியபோது அன்புமணி கொடுத்திருந்த பணத்தையெல்லாம் எடுத்துவிட்டு ஓடிவிட்டதாக தன் மீது குற்றம் சாட்டப்பட்டது என்றும் அது இன்று பொய்யென நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் தங்கள் குடும்பம் 25 ஆண்டுகளாக பா.ம.க.வில் செயல்பட்டது என்றும் வேல்முருகன் பரவசத்துடன் குறிப்பிட்டார்.
ஆனால், இப்போது கும்மிடிப்பூண்டி முதல் குமரி முனைவரை தன்னுடைய தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் ஏராளமானவர்கள் செயல்பட்டு வருகின்றனர் என்றும் பா.ம.க.வில் தான் சேரப்போவதாக வந்த தகவல் பொய் என்றும் வேல்முருகன் கூறினார்.