பொறியியல், தொழில்நுட்ப இளநிலை பட்டப் படிப்புகள்- பி.இ., பி.டெக். சேர்க்கைக்காக கடந்த ஆண்டைவிட 34 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பம் செய்து கட்டணமும் செலுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் 463 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்வியாண்டில் ஏழு புதிய கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
நடப்பு கல்வியாண்டுக்கான விண்ணப்பப் பதிவு மே 7ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதில், 2 இலட்சத்து 98 ஆயிரத்து 425 பேர் நேற்று மாலைவரை விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால், உரிய கட்டணத்தையும் செலுத்தியவர்கள்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் எனும் நிலையில், 2, 44, 168 பேர் மட்டுமே கட்டணமும் செலுத்தியுள்ளனர்.
முன்னைய ஆண்டுகளைவிட பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2021ஆம் ஆண்டில் 1,45, 043 பேரும், அடுத்த ஆண்டில் 1,69,083 பேரும், 2023ஆம் ஆண்டில் 1,87,847 பேரும், கடந்த ஆண்டில் 2,09,653 பேரும் கட்டணத்துடன் விண்ணப்பித்திருந்தனர்.
மாநிலத்தில் உள்ள மொத்த பொறியியல் இளநிலைப் பட்டப் படிப்பு இடங்கள் சுமார் 2.42 இலட்சம் எனும் நிலையில், 2.44 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் இந்த வித்தியாசம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 10ஆம் தேதி முதல் 20ஆம் தேதிவரை மேற்கொள்ளப்படும்.
27ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படவில்லை.
கட்டடக் கலை- பி.ஆர்க். படிப்புக்கான நாடளவிய நுழைவுத் தேர்வு ஜூன் கடைசி வாரம்வரை நடைபெறவுள்ளதால், ஜூன் 30ஆம் தேதிவரை பி.ஆர்க். படிப்புக்கான விண்ணப்பப் பதிவுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.