பொள்ளாச்சியில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அக்கட்சியின் பொள்ளாச்சி நகர மாணவர் அணிச் செயலாளராக இருந்த அருளானந்தம் உட்பட 9 பேர், இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரம் புரிந்தது அம்பலமானது.
மகளிர் அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் நடத்திய போராட்டத்தால் காவல்துறைவசம் இருந்த விசாரணை சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்டது.
கோவை மகளிர் வழக்கு கூடுதல் நீதிமன்றத்தில் ஆறு ஆண்டுகளாக இவ்வழக்கு விசாரணை நடத்தப்பட்டுவந்தது. இன்று காலையில் குற்றவாளிகள் 9 பேர் மீதான சாட்டுகளும் உறுதியானது என நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.
சுமார் 12.30 மணியளவில் குற்ற விவரங்கள் வாசிக்கப்பட்டன. அருளானந்தம் உட்பட அனைத்து குற்றவாளிகளுக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கப்படும் என தீர்ப்பில் கூறப்பட்டது.
குற்றவாளிகளுக்கு தனித்தனியாக தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளிடமிருந்து அபராதத்தை வசூலித்து பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தரவும் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.
முதல் குற்றவாளியான சபரீசனுக்கு நான்கு ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
அடுத்த குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனை.
மூன்றாவது குற்றவாளி சதீசுக்கு 3 ஆயுள் தண்டனை.
நான்காவது குற்றவாளி வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனை.
ஐந்தாவது குற்றவாளி மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனை.
ஆறாவது குற்றவாளி பாபுவுக்கு ஒரு முறை ஆயுள் தண்டனை.
ஏழாவது குற்றவாளி ஹெரோன்பால் 3 ஆயுள் தண்டனை
எட்டாவது குற்றவாளி அருளானந்தம்,
ஒன்பதாவது குற்றவாளி அருண்குமார் இருவருக்கும் ஓர் ஆயுள் தண்டனை என நீதிபதி அறிவித்துள்ளார்.
இந்தக் குற்றவாளிகளிடமிருந்து மொத்தம் 85 இலட்சம் ரூபாயை வசூலித்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் வழங்கவும் தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.