தனியார் பள்ளி நிர்வாகங்களோடு பேசி, 25 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி மாணவர்களை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது.
அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை ஒன்றில் இதைக் கூறியுள்ளார். அந்த அறிக்கை விவரம்:
”கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ன் படி ஏழை, எளிய மாணவர்களுக்கான 25 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு தமிழக அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தர வேண்டிய தொகை நிலுவையாக உள்ளது. இவ்வாண்டு தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.75 லட்சம் மாணவர்கள் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி விண்ணப்பம் செய்துள்ளனர். ஆனால், தனியார் நிர்வாகங்கள் தங்களுக்கு சேர வேண்டிய தொகை நிலுவையாக உள்ள காரணத்தை முன்னிறுத்தி சுகூநு-படி 25 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்காமல் மாணவர் சேர்க்கையை மறுத்து வருகின்றன. பள்ளிகள் திறந்து ஒரு வாரம் ஆன பின்பும் இப்பிரச்சனை தீர்க்கப்படவில்லை.
சமக்ரா சிக்ஷா அபியான் (ளுளுஹ) திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுக்கு தரவேண்டிய ரூபாய் 2152 கோடி நிதி பங்கீட்டை ஒன்றிய அரசு கொடுக்க மறுத்து வருகிறது. ஒன்றிய அரசு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தையே முடமாக்கும் வகையில் இச்சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியையும் மாநிலங்களுக்கு வழங்காமல் ஏழை, எளிய மாணவர்களின் கல்வி நலனில் ஒன்றிய பிஜேபி அரசு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது. நிதி நெருக்கடி காரணமாக தமிழகத்தில் 7 லட்சம் மாணவர்களுக்கு மேலாக கிடைக்க வேண்டிய கல்வி வாய்ப்பு பறிபோகும் நிலை இருக்கிறது.
இருப்பினும், ஒன்றிய அரசிடமிருந்து நிதி தாமதமாவதைக் காரணம் காட்டி 25 சதவிகித மாணவர் சேர்க்கையை மறுப்பது நியாயமல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். தமிழக அரசு மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு இப்பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
ஒன்றிய அரசிடமிருந்து நிதியை பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ளும் அதேநேரத்தில், தனியார் கல்வி நிறுவனங்களுடன் பேசி கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மாணவர்கள் சேர்க்கைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.” என்று பெ.சண்முகம் கூறியுள்ளார்.