252 அரசுக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் கலை விழா!

அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி - விழுப்புரம்
அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி - விழுப்புரம்
Published on

தமிழ்நாட்டில் உள்ள அரசுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கலை, இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்படுவதில்லை என கல்வியாளர்கள் தொடர்ந்து குறைகூறிவருகின்றனர். இதன் காரணமாகவும் அவர்களுக்குள் நட்பும் இணக்கமும் இல்லாமல் பல இடங்களில் வெட்டுகுத்துவரை போவதும் தொடர்கிறது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள 252 அரசுக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் தலா 2 இலட்சம் ரூபாய் செலவில் கலை விழா நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.  

சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்புகள்:

 

1. செம்மொழியான தமிழ் மொழியின் சிறப்பினை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில், கல்லூரிகளில் மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சிகள்” ரூ.3 கோடி செலவில் நடத்தப்படும்.

[Aimed at conveying the excellence of Classical Tamil language to the younger generation, the ”Maaperum Tamil Kanavu Programmes” will be conducted in colleges at a cost of
Rs.3 crore.]

உயர்தனிச் செம்மொழியான தமிழின் தொன்மையினையும் அதன் இலக்கியச் சிறப்புகளையும் சமூக சமத்துவத்தின் அவசியத்தையும் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 200 கல்லூரிகளில் அறிஞர்களின் சொற்பொழிவுகள், வல்லுநர்களின் குழு விவாதங்களுடன் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும். இதற்காக ரூ.3 கோடி செலவினம் ஏற்படும்.


  1. அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பசுமைத் தோற்ற முகப்பு மற்றும் ஒரே மாதிரியான கல்லூரி பெயர் பலகைகள் தலா ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

[Green frontage and uniform college name boards will be installed in Government Arts, Science and Education Colleges each at the cost of Rs.5 lakh]

அனைத்து அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளின் முகப்பினை மேம்படுத்தும் விதமாக, அனைத்து கல்லூரிகளிலும் பசுமைத் தோற்ற முகப்பு அமைத்தல், முகப்பினைப் புதுப்பித்தல் மற்றும் அனைத்துக் கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான கல்லூரிப் பெயர் பலகைகள் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக கல்லூரிகளில் பராமரிக்கப்பட்டு வரும் நிதியிலிருந்து தலா ரூ.5 இலட்சம் செலவினம் மேற்கொள்ளப்படும்.

3. அரசு கல்லூரிகளில் கலைத் திருவிழா தலா ரூ.2 இலட்சம் வீதம் ஆண்டுதோறும் நடத்தப்படும்.

[Conducting of Annual Cultural Programmes in Government Colleges each at the cost of Rs.2 lakh]

மாணாக்கர்களின் பன்முகத்திறனை கண்டறிந்து, அவற்றை ஊக்குவிக்கும் விதமாக 164 அரசு கலை மற்றும் அறிவியல், 7 அரசு கல்வியியல், 11 அரசு பொறியியல், 54 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 16 அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என மொத்தம் 252 கல்லூரிகளில் ஆண்டுதோறும் கல்லூரிக் கலைத் திருவிழா நடத்தப்படும். இதற்கென கல்லூரிக்கு ரூ.2 இலட்சம் வீதம் மொத்தம்
ரூ.5.04 கோடி செலவினம் ஏற்படும்.

4. அரசு கல்லூரிகளில் விளையாட்டு வசதிகள் தலா ரூ.1.5 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

[Improving of Sports facilities in Government Colleges each at a cost of Rs.1.5 lakh]

கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் விளையாட்டு திறனை வெளிப்படுத்தவும், உடல் நலனை காக்கவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து 164 அரசு கலை மற்றும் அறிவியல், 7 அரசு கல்வியியல், 11 அரசு பொறியியல், 54 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 16 அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என மொத்தம் 252 கல்லூரிகளில் விளையாட்டு வசதிகள் மேம்படுத்தப்படும். இதற்கென கல்லூரிக்கு ரூ.1.5 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.3.78 கோடி செலவினம் ஏற்படும்.

  1. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்குத் தேவைப்படும் புதிய பாடப்பிரிவுகளை பரிந்துரை செய்திட பாடப்பிரிவு பரிசீலனைக் குழு அமைக்கப்படும்.

[Formation of a Course Review Committee to recommend new courses required for Government Arts and Science Colleges]

பல்வேறு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்கள், தொழில்துறை பங்குதாரர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களிடமிருந்து அப்பகுதிகளின் தேவைக்கேற்ப புதிய பாடப்பிரிவுகள் துவங்கிட கோரிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன. அக்கோரிக்கைகளைப் பரிசீலித்து கல்லூரிகளுக்குத் தேவைப்படும் புதிய பாடப்பிரிவுகளைப் பரிந்துரை செய்திட ஏதுவாக, இணை இயக்குநர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் பாட வல்லுநர்களைக் கொண்ட பாடப்பிரிவு பரிசீலனைக் குழு அமைக்கப்படும்.


  1. அரசுக் கல்லூரி மாணாக்கர்கள் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரு பருவம் கல்வி பயில்வதற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

[Government college students will participate in a one-semester study abroad program at foreign universities]

அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் விளிம்பு நிலை மற்றும் கிராமப்புற மாணாக்கர்களில் கல்வியில் சிறந்து விளங்கும் தலா 25 இறுதியாண்டு மாணாக்கர்கள் என மொத்தம்
50 மாணாக்கர்கள், அரசு உதவித்தொகையுடன் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரு பருவம் (Semester) கல்வி பயில்வதற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

கல்லூரிக் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகங்கள், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடனும் தொழில் நிறுவனங்களுடனும் இணைந்து இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.

7. அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் முன்னாள் மாணாக்கர்கள் சங்கம் தலா ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

[Establishment of Alumni association in Government Arts and Science, Engineering and Polytechnic Colleges each at the cost of Rs.2 lakh]

அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் முன்னாள் மாணாக்கர்கள் சங்கம் ஏற்படுத்தப்படும். இச்சங்கம் மூலம் தற்பொழுது பயிலும் மாணாக்கர்களுக்காக பயிற்சிகள் ஏற்பாடு செய்தல், தொழில் நிறுவனங்களுடன் கூடிய திட்டப் பணிகள் செய்தல், கல்லூரியின் கட்டமைப்பை மேம்படுத்துதல், மாணாக்கர்களுக்கான உதவித்தொகை வழங்குதல் போன்றவைகளை முன்னெடுத்து செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும். இதற்கான கட்டமைப்பினை உருவாக்கிட, ஒரு கல்லூரிக்கு ரூ.2 இலட்சம் வீதம் செலவினம் ஏற்படும்.

8. மாநில உயர்கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசை தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்படும்.

[Publishing of ranking list for State Higher Education Institutions by the Tamil Nadu State Council for Higher Education]

மாநிலத்தில் உள்ள பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து, அவற்றின் தரத்தினை மேம்படுத்தவும், செயல்திறனை மதிப்பிடுவதற்கும், அளவிடத்தகுந்த தரக்குறியீடுகள் (indicators) அடிப்படையில் மாநில உயர்கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசை (State Institutional Ranking Framework) தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்படும். இதற்காக ரூ.75 இலட்சம் செலவினம் ஏற்படும்.


9. அந்தியூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய இரண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தலா ரூ.17.50 கோடி மதிப்பீட்டில் கட்டடங்கள் கட்டப்படும்.

[Construction of Buildings for two Government Arts and Science Colleges at Anthiyur and Aravakkurichi each at a cost of Rs.17.50 crore]

2022-23-ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டு, தற்காலிகக் கட்டடத்தில் இயங்கி வரும் ஈரோடு மாவட்டம், அந்தியூர் மற்றும் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஆகிய இரண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு நிரந்தரக் கட்டடங்கள் தலா ரூ.17.50 கோடி வீதம் மொத்தம் ரூ.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

10. சென்னை, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்திற்கு “புதிய நடமாடும் அறிவியல் கண்காட்சிப் பேருந்து” ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் வாங்கப்படும்.

[Procurement of a “New Mobile Science Exhibition Bus” for the Periyar Science and Technology Centre, Chennai at the cost of Rs.80 lakh]

1990-ஆம் ஆண்டு முதல் சென்னை, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் இயங்கி வரும் நடமாடும் அறிவியல் கண்காட்சிப் பேருந்து மூலம் பல்வேறு மாவட்டங்களில் கண்காட்சிகளும், சிறு கோளரங்கம் மூலம் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய புத்தகக் கண்காட்சிகளில் இப்பேருந்து பங்கேற்பதன் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பயனடைகின்றனர். எனவே, நவீன உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய நடமாடும் அறிவியல் கண்காட்சிப் பேருந்து ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் வாங்கப்படும்.

  1. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும்
    அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் அருகலை (Wifi) வசதி ஏற்படுத்தப்படும்.

[Provision of Wifi facility in all Government Engineering Colleges and Government Polytechnic Colleges in Tamil Nadu.]

தமிழ்நாட்டில் உள்ள 11 அரசு பொறியியல் கல்லூரிகளிலும், 54 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் கல்லூரி மேம்பாட்டு நிதியிலிருந்து அருகலை (Wifi) வசதி ஏற்படுத்தப்படும். மாணாக்கர்கள் தங்கள் கல்லூரியில் உள்ள இணையதள வசதி மூலமும் மடிக்கணினி மற்றும் கைப்பேசி மூலம் அவர்களின் படிப்புகளைப் பற்றி புதுப்பித்த நிலையில் இருக்கவும், இணையதள வாயிலாக கல்வி சம்பந்தப்பட்ட விவரங்களை ஆராய்ந்து பயில்வதற்கும் இது உதவியாக அமையும்.

  1. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாகக் கட்டப்பட்ட வகுப்பறைகளுக்குத் தேவையான தளவாடங்கள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

[Procurement of required equipment and furniture for the newly constructed class room buildings in Government Arts and Science Colleges at the cost of Rs.5 crore]

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாகக் கட்டப்பட்ட 276 வகுப்பறைக் கட்டடங்களுக்குத் தேவைப்படும் தளவாடங்களான, மாணாக்கர்கள் அமரும் 4,140 இருக்கைகள் மற்றும் மேசைகள், ஆசிரியர்களுக்கான 276 மேசைகள் மற்றும் வகுப்பறைகளுக்கான
276 செராமிக் பலகைகள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

  1. சுற்றுச்சுவர் இல்லாத அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சங்கிலி இணைப்பு வேலி ரூ.5.02 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

[Providing of Chain link Fencing in Government Arts and Science Colleges that do not have compound walls at a cost of Rs.5.02 crore]

2017-18-ஆம் கல்வியாண்டு முதல் 2023-24-ஆம் கல்வியாண்டு வரை புதிதாகத் தொடங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், தற்போது நிரந்தரக் கட்டடத்தில் இயங்கி வரும் கல்லூரிகள் / கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் கல்லூரிகளில், சுற்றுச்சுவர் இல்லாத அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு சங்கிலி இணைப்பு வேலி
ரூ.5.02 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

  1. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஊடாடும் திறன் பலகைகள் ரூ.4.35 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

[Provision of Interactive Smart Boards in Government Arts and Science Colleges at the cost of Rs.4.35 crore]

தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில், மாணாக்கர்களின் கவனத்தை தக்க வைத்துக்கொள்ள, தொழில்நுட்பம் சார்ந்த கற்பித்தல் முறையை மாற்றியமைக்க ஏதுவாக, முதற் கட்டமாக 58 நிலை-1 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஊடாடும் திறன் பலகைகள் (Interactive Smart Boards) கல்லூரிக்கு 5 வீதம் மொத்தம் 290 பலகைகள் ரூ.4.35 கோடி செலவில் நிறுவப்படும்.

15. அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படும். இதற்காக, கல்லூரி ஆசிரியர் மாநில பயிற்சி மையம் அமைக்கப்படும்.

[Training will be provided to the faculties of the Government Colleges and for this purpose a State Training Centre for college teachers will be established.]

அனைத்து அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல், பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க, கல்லூரி ஆசிரியர் மாநில பயிற்சி மையம் அமைக்கப்படும். இந்த ஆண்டு 5,000 ஆசிரியர்களுக்கு தலா ரூ.1,200/-வீதம் மொத்தம்
ரூ.60 இலட்சம் செலவினம் ஏற்படும். இப்பயிற்சி மையத்திற்கான மாதிரிகள், ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

மேலும், தெரிவு செய்யப்பட்ட 180 அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு அடிப்படை பாடப்பிரிவில் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும். இதற்கான மொத்த செலவினம் ரூ.45 இலட்சம் ஆகும்.

  1. அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்குத் திறன் மேம்பாட்டுப்  பயிற்சி  வழங்கப்படும்.

[Skill development training will be provided to the teachers of Government Arts, Science and Education Colleges]

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட ஏதுவாக, ஆண்டுதோறும் 1,000 அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் மூலமாக வழங்கப்படும். இதற்கான மொத்த செலவினம் ரூ.20 இலட்சம் ஆகும்.

  1. அரசு கலை, அறிவியல், கல்வியியல் மற்றும் பொறியியல் கல்லூரி முதல்வர்களுக்கு நிர்வாகப் பயிற்சி வழங்கப்படும்.

[Administrative training will be provided to the Principals of Government Arts, Science, Education and Engineering Colleges]

அரசு கலை, அறிவியல், கல்வியியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில்  பணிபுரியும் முதல்வர்கள் / பொறுப்பு முதல்வர்கள் / இணை இயக்குநர்களுக்கு தகவல் பெறும் உரிமை சட்டம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள், நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட நிர்வாகப் பணியினை சிறப்பாக மேற்கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கு நிர்வாகப் பயிற்சி, அணிக்கு 40 நபர்கள் வீதம் 6 அணிகளுக்கு அண்ணா மேலாண்மை நிறுவனம் வாயிலாக 4 நாட்களுக்கு வழங்கப்படும். இதற்கான மொத்த செலவினம்
ரூ.21.30 இலட்சம் ஆகும்.

  1. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்களுக்கான உள்ளிடைப் பயிற்சி, வேலைவாய்ப்பு வழிகாட்டி மற்றும் வேலைவாய்ப்பு மையம் மேம்படுத்தப்படும்.

[Improving of Internship training, employment guidance and job placement centers for students of Government Arts and Science Colleges]

நவீன தொழில்நுட்ப முன்னேற்றத்தினை கருத்திற் கொண்டும், வேலைவாய்ப்பில் நிலவும் கடும் போட்டியினை கருத்திற் கொண்டும், கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு உள்ளிடைப் பயிற்சி வழங்கிடவும், அப்பயிற்சியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கிடவும், கல்லூரிகளில் சிறப்பாக செயல்படும் இணை / உதவிப் பேராசிரியர், கல்லூரிக்கு அருகில் உள்ள தொழிற்கூடங்களின் வேலைவாய்ப்பு / மனிதவள அலுவலர், தொழில் நிறுவனர் ஆகியோரை உள்ளடக்கிய வேலைவாய்ப்பு மையம் உருவாக்கப்படும். இம்மையம் அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு வேலைவாய்ப்பு பெற பெரிதும் உதவியாக இருக்கும்.

  1. முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணாக்கர்களுக்கான வலை முகப்பு (Web Portal) ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்

[Creation of Web Portal for Ph.D Students at the cost of Rs.60 lakh]

அரசு கலை மற்றும் அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணாக்கர்களின் ஆராய்ச்சித் திறனை ஊக்கப்படுத்தி நவீன கண்டுபிடிப்புகளை உருவாக்கும் விதமாக, ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பும் முதுநிலை பட்டம் பெற்ற மாணாக்கர்கள், உரிய ஆய்வு நெறியாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் தங்களது முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பினை மேற்கொள்ள ஏதுவாக, அவர்களுக்கான வலை முகப்பு (Web Portal)
ரூ.60 இலட்சம் செலவில் உருவாக்கப்படும். இதற்கென, தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் தகுதி வாய்ந்த முனைவர் பட்ட ஆய்வு நெறியாளர்களின் தரவு சேகரிக்கப்படும்.

  1. சென்னை, தரமணி, மைய தொழில்நுட்ப வளாகம் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

[Upgradation of Central Institute of Technology Campus, Taramani, Chennai at the cost of Rs.100 crore]

தமிழ்நாட்டில் தொழில்நுட்பக் கல்வியின் முகமாக சிறந்து விளங்கும், சென்னை, தரமணி மைய தொழில்நுட்ப வளாகத்தில், செயற்கை நுண்ணறிவு, இயந்திரகற்றல், ஆழக்கற்றல் போன்ற பல்வேறு அறிவியல் தொழில்நுட்ப கல்வி வளர்ச்சி அடைந்து வருகிறது. இவ்வாறு வளர்ந்து வரும் தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மாணாக்கர்களின் தொழில்நுட்பத்திறன், புத்தாக்க மனப்பான்மை போன்றவற்றை மேம்படுத்தும் வண்ணம், சென்னை, தரமணி, மையத் தொழில்நுட்ப வளாகத்தில் சீர்மிகு வகுப்பறைகள், அதிநவீன தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்கள், கணினி வசதிகள் ஆகியவை ரூ.100 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

  1. உலகத்திறன் போட்டிக்கு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மாணாக்கர்களை தயார்படுத்தல்

[Preparing students of Polytechnic Colleges for the World Skills Competition]

48-வது உலகத்திறன் போட்டியானது சீனாவின் ஷாங்காய் நகரில் 2026, செப்டம்பர் 22 முதல் 27 வரை நடக்க இருக்கிறது. இந்த உலகத்திறன் போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக, தமிழ்நாட்டின் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் 500 மாணாக்கர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் மூலம் இப்போட்டியில் பங்கேற்க தேவையான திறன்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் செய்முறை அனுபவங்கள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் ஆகியவை மாணாக்கர்களுக்கு வழங்கப்படும். இதற்காக ஒரு மாணாக்கருக்கு ரூ.50,000 வீதம் மொத்தம் ரூ.2.50 கோடி செலவினங்களை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வழங்கும்.

  1. ஐந்து அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன் ஆய்வகங்கள் தலா ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

[Establishment of Skill Labs in 5 Government Engineering Colleges each at the cost of Rs.50 lakh.]

தமிழ்நாட்டில் உள்ள ஐந்து அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன் ஆய்வகங்கள் ரூ.50 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்மொழியப்பட்ட திறன் ஆய்வகம், துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு,  ஆராய்ச்சி,  புதுமை மற்றும் தொழில்துறை தொடர்பான திறன்களுடன் நேரடி கற்றலுக்கான மையமாக இருக்கும். மின்னணு உற்பத்தி நேரடி பயிற்சி,  பட்டறைகள் மற்றும் சான்றிதழ் திட்டங்களை வழங்கும் சிறிய அளவிலான பட்டறை மூலம் மாணவர்கள்,  ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்களுக்கு புனைதல் ஆய்வகத்தில் தேவையான திறன்கள் மற்றும் அறிவை வழங்குதல்,  தொழில்துறையின் தேவைகளுக்கு அவர்களை தயார்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

23. அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில் நிறுவன இடைமுகப் பிரிவு தலா ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்

[Establishment of Industry Institution Interface Cell in Government Polytechnic Colleges each at the cost of Rs.2 lakh]

ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்களுக்கு தொழில்துறை வெளிப்பாட்டை வழங்குவதற்கும், நிறுவனத்தில் தொழில் கலாச்சாரத்தை வழங்குவதற்கும், மாணாக்கர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதற்கும், தொழில்-கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப திறன் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கும், தமிழ்நாட்டில் உள்ள 54 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில், கல்வி நிறுவன மற்றும் தொழில் நிறுவன இடைமுகப் பிரிவு (Industry Institution Interface Cell) தலா ரூ.2 இலட்சம் வீதம், மொத்தம் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

24. ஐந்து அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆளில்லா வான்கல பயிற்சி மையங்கள் தலா ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்

[Establishment of Unmanned Aerial Vehicle Training Centers in five Government Polytechnic Colleges each at the cost of Rs.50 lakh]

ஆளில்லா வான்கலத் துறையின் விரைவான விரிவாக்கத்தால், இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளில் ஆளில்லா வான்கலன்களின் தேவை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை சந்தித்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு இது குறித்த முறையான பயிற்சி வழங்கிட ஏதுவாக, 5 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆளில்லா வான்கல பராமரிப்பு, பழுதுநீக்கம் மற்றும் மேலாண்மை பயிற்சி மையங்கள் தலா ரூ.50 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.2.50 கோடி செலவில் நிறுவப்படும்.

25. தொழில்நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்காக பொறியியல்
மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு துவங்க அனுமதி அளிக்கப்படும்

[Permission to commence Degree and Diploma courses in Engineering and Polytechnic Colleges for employees working in industrial enterprises]

தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் ஒப்புதல் பெற்ற பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் துவங்க அனுமதி அளிக்கப்படும்.

இதன் மூலம், தொழில்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், தங்களது துறை சார்ந்த படிப்புகளை பயின்றால், தொழில்நுட்ப உலகில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்களுக்கு ஏற்றவாறு, அத்தியாவசியமான மற்றும் புதிய திறன்களை அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் பெறமுடியும். இதனால், அவர்களின் திறன்களை மேம்படுத்துவதுடன், அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் சம்பள உயர்வு பெற்று தங்கள் வாழ்க்கையில் முன்னேற உதவும்.

26. அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

[Installation of CCTV cameras in Government Arts and Science, Engineering and Polytechnic Colleges]

மாணாக்கர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், குற்றங்களைத் தடுப்பதற்கும், கல்லூரிகளில் ஒழுக்கத்தை மேம்படுத்துவதற்கும், கல்லூரி வளாகத்தினைக் கண்காணிப்பதற்கும் அதன் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் கல்லூரி மேம்பாட்டு நிதியிலிருந்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

27. அரசுக் கல்லூரி மாணாக்கர்களுக்கு பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுக் குழு அமைக்கப்படும்.

[Formation of a Monitoring and Awareness Committee on Gender Psychology for Government College students]

அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் பாலின உணர்திறன் தொடர்பான விழிப்புணர்வைப் பெற்றிடும் வகையில், மருத்துவர்கள் / உளவியல் நிபுனர்களின் உதவியுடன், அரசுக் கல்லூரிகளில் பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுக் குழு அமைக்கப்படும்.

28. அரசுக் கல்லூரிகளில் நிறுவன மேலாண்மைக் குழு அமைக்கப்படும்

[Formation of Institute Management Committee in Government Colleges]

அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் அன்றாட செயல்பாடுகள், கல்விசார் நிகழ்வுகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட கல்லூரி முதல்வர், கல்லூரியைச் சுற்றியுள்ள தொழில்துறை சார்ந்தவர் மற்றும் மாணாக்கர்களின் பெற்றோர் ஆகியோரை உள்ளடக்கிய நிறுவன மேலாண்மைக் குழு (Institute Management Committee - IMC) ஒவ்வொரு கல்லூரியிலும் அமைக்கப்படும்.

29. அரசு உயர்கல்வி நிறுவனங்களின் ஆய்வகங்கள் ரூ.61.16 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.

[Upgradation of Laboratories of Government Higher Education Institutions at the cost of Rs. 61.16 crore.]

வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப 164 அரசு கலை மற்றும் அறிவியல், 7 அரசு கல்வியியல், 11 அரசு பொறியியல் கல்லூரிகள், 54 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 16 அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என மொத்தம் 252 கல்லூரிகளில் உள்ள ஆய்வகங்கள் இரண்டு கட்டங்களாக இரண்டு ஆண்டுகளில் தரம் உயர்த்தப்படும். மேலும், ஆய்வக கற்றல் முறையை மேம்படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்படும். இதற்காக ஆண்டுக்கு
ரூ.30.58 கோடி வீதம் மொத்தம் ரூ.61.16 கோடி செலவினம் ஏற்படும்.

வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்திய பிறகு கல்லூரி நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட முன்மொழிவுகள் ஆய்வு செய்யப்பட்டு நிதி வழங்கப்படும்.


30. இரண்டு மாவட்ட தலைநகரங்களில் ஸ்டெம் (STEM) ஆய்வகங்கள் தலா ரூ.10 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

[Establishment of STEM labs in two district headquarters each at the cost of Rs.10 crore]

பாடத்திட்டத்திற்கு வெளியே மாணாக்கர்கள் அனுபவ ரீதியாக வெவ்வேறு அறிவியல் பரிசோதனைகளை செய்து பார்க்கும் விதமாக, 24 மணி நேரமும் மாணாக்கர்களால் அணுகக்கூடிய ஸ்டெம் (STEM) ஆய்வகங்கள் 2 மாவட்ட தலைநகரங்களில் மாவட்டத்திற்கு ரூ.10 கோடி வீதம் மொத்தம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

அறிவியல் நகரம் அல்லது தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்துடன் இணைந்து தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் இதனை செயல்படுத்தும்.


31. அரசுக் கல்லூரி மாணாக்கர்கள் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் சேர்வதற்கு முறையான பயிற்சிகள் ஆண்டுதோறும் ரூ.28 இலட்சம் செலவில் வழங்கப்படும்.

[Provision of training to the Government college students to join leading research institutions at a cost of Rs.28 lakh]

தெரிவு செய்யப்பட்ட 180 அரசுக் கல்லூரி மாணாக்கர்கள் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் சேர்வதற்கு ஊக்குவிக்கும் வண்ணம், அவர்களுக்கு கோடைகால மற்றும் குளிர்கால பயிற்சிப் பட்டறைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.28 இலட்சம் செலவில் பயிற்சி வழங்கப்படும்.


32. பாடத்திட்ட படைப்பாற்றல் கண்காட்சி ஆண்டுதோறும் ரூ.20 இலட்சம் செலவில் நடத்தப்படும்.

[Annual Curriculum Fair at the cost of Rs.20 lakh]

கல்வித் திட்டங்களை மேம்படுத்தவும், புதிய கற்பித்தல் முறைகளை ஊக்குவிக்கவும், அனைத்து பல்கலைக்கழகங்களின் கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்தின் சிறந்த நடைமுறைகளை கண்டறிந்து பகிர்ந்துகொள்வதற்கு ஏதுவாக சிறந்த நடைமுறைகளை கண்டறியும் விதமாக கல்வியாளர்கள், மாணாக்கர்கள் ஆகியோரை இணைத்து, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் ஒவ்வொரு ஆண்டும் பாடத்திட்ட படைப்பாற்றல் கண்காட்சி நடத்தப்படும். இதற்கென ஆண்டொண்டிற்கு ரூ.20 இலட்சம் செலவினம் ஏற்படும்.

33. சென்னை, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் “இருதய காட்சிக்கூடம்” ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்படும்.

[Modernisation of Heart Gallery at Periyar Science and Technology Centre, Chennai at the cost of Rs.40 Lakh.]

சென்னை, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் உள்ள “இருதய காட்சிக்கூடம்”, சுமார் 1,000 சதுர அடியில் இருதயம் குறித்த பல்வேறு காட்சிப்பொருட்கள் - நேரடி தொடர்புடைய AR / VR  காட்சிகள், எண்ணிலக்க தொடுதிரைகளும் மற்றும் உருவகப்படுத்துதல், 3D-யில் அச்சிடப்பட்ட இருதய மாதிரிகள், செயற்கை நுண்ணறிவால் இயங்கும் காட்சிப் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்படும்.


34. சென்னை, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் இணையதள நுழைவுச்சீட்டு மற்றும் காட்சிப் பொருட்களுக்கு QR Code மற்றும் வலைதள செயலி ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

[Setting up of online entry tickets and QR Code and Web Application for exhibits at the Periyar Science and Technology Centre, Chennai at the cost of Rs.10 lakh.]

பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்திற்கு வருகைத்தரும் பார்வையாளர்கள் மற்றும் பள்ளி மாணாக்கர்களுக்கு இணையதளத்தின் மூலம் எளிய முறையில் நுழைவுச்சீட்டு பெறுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், இம்மையத்தில் உள்ள காட்சிப் பொருட்களைப் பற்றி எளிதில் அறிந்துக் கொள்வதற்காக QR Code மற்றும் வலைதள செயலி (Web App) வசதிகள் ஏற்படுத்தப்படும். இதற்காக, ரூ.10 இலட்சம் செலவினம் ஏற்படும்.


35. சென்னைக்கு அருகில் ஆளில்லா வான்கலன் சான்றிதழ் வழங்கும் சிறப்பு பிரிவு ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

[Establishment of special unit for Certification of Unmanned Aerial Vehicles near Chennai at the cost of Rs.15 lakh.]

தமிழ்நாட்டின் ஆளில்லா வான்கலன் (Drone) உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு வழங்கவும், மேலும், இந்தியாவிலுள்ள மற்ற ஆளில்லா வான்கலன் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் தேர்வுகளை வழங்கவும், தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகம் மூலம் சென்னைக்கு அருகில் ஆளில்லா வான்கலன் சான்றிதழ் வழங்கும் சிறப்பு பிரிவு ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

36. தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் ஜப்பானிய திசு தொழில்நுட்ப முறை பயன்படுத்தி ஆவணங்களை செப்பனிடும் பணிக்கு கூடுதலாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

[Allocation of Rs.10 crore additionally for mending of Pre-mutiny records using Japanese Tissue Method at the Tamil Nadu Archives.]

தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் உள்ள ஆவணங்கள் சிதைவுறுவதைத் தடுக்கவும், ஆவணங்களை பாதுகாத்து பராமரிப்பதற்கான பணிகளை விரைவுபடுத்தவும், ஜப்பானிய திசு தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி 10 இலட்சம் ஆவணங்களைச் செப்பனிடும் பணி 2024-ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. தற்போது 60% பணிகள் நிறைவுற்ற நிலையில், இப்பணிக்காக, கூடுதலாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 


37. தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் எண்ம ஆவணக்காப்பகம் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்

[Establishment of Digital Archives in Tamil Nadu Archives at the cost of Rs.25 lakh]

தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் அரசால் உருவாக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு அசல் ஆவணங்களை போலவே எண்ம ஆவணக்காப்பகத்தில் முறையாக பாதுகாக்கப்படும். அரசால் வெளியிடப்படும் அரசாணைகள், வெளியீடுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் இனிவரும் காலங்களில் எண்ம வடிவிலேயே உரிய துறைகளிடமிருந்து பெறப்பட்டு அவ்வடிவிலேயே வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இதற்காக ரூ.25 இலட்சம் செலவினம் ஏற்படும்.


38. தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறையால் பத்து மாவட்டங்களுக்கு மாவட்ட விவரச்சுவடிகள் வெளியிடப்படும்.

[Publication of District Gazetteer for ten districts by the Tamil Nadu Archives and Historical Research]

திருவாரூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, செங்கல்பட்டு, வேலூர், நாகப்பட்டினம், சிவகங்கை மற்றும் தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மாவட்ட விவரச்சுவடிகள் (District Gazetteer) தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறையால் வெளியிடப்படும்.

39. தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில்  உள்ள அரிய ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்துதல்.

[Displaying rare documents in the Tamil Nadu Archives for public viewing]

 தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் வரலாறு, நிர்வாக மற்றும் பண்பாடு முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களில் அரிய ஆவணங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு ரூ.15 இலட்சம் செலவில்  காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com