சிசிடிவி காட்சிகள், ஆய்வாளர் விஜயலட்சுமி
சிசிடிவி காட்சிகள், ஆய்வாளர் விஜயலட்சுமி

இன்ஸ்பெக்டருக்கு ஜூஸ் தரமாட்டியா? மிரட்டிய பெண்போலீஸார்! பணியிடை நீக்கம் செய்த ஆணையர்

காவல் துறையினர் கடைகளில் எதாவது வாங்கினால் பணம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருந்து வருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜின் நடவடிக்கை அமைந்துள்ளது.

சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது. இதில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் விஜயலட்சுமி. இவர் கடந்த இரு தினங்களுக்கு (ஜூன்3) முன்பு ஜெயமாலா, ஐஸ்வர்யா, கவுசல்யா ஆகிய பெண் காவலர்களுடன், படப்பை பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் செயல்பட்டு வரும் டீ கடைக்கு சென்று உள்ளனர். அந்த கடையில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட நான்கு காவலர்களும் ஜூஸ், பிரட் ஆம்லெட், சாக்லேட், குடிநீர் கேன்கள் போன்றவற்றை வாங்கிக்கொண்டு அதற்கான பணம் தர மறுத்து தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கடையின் உரிமத்தை ரத்து செய்து விடுவதாகவும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர் பாட்ஷா, மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், அவரின் கடையிலிருந்த சிசிடிவி பதிவுகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இன்ஸ்பெக்டருக்கு ஜூஸ் தரமாட்டியா என்று காவலர்கள் கேட்கும் காட்சி ஆடியோவுடன் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜிடமும் கடையின் உரிமையாளர் பாட்ஷா புகார் அளித்துள்ளார். உடனே விசாரணையில் இறங்கிய ஆணையர், சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, ஓட்டுநர் ஜெயமாலா, மற்றும் இரு பெண் காவலர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். காவல் ஆணையர் அமல்ராஜ் நடவடிக்கைக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com