இந்தியாவின் மொத்த இணையப் பயன்பாட்டாளர்களில் 47 சதவீதம் அளவாக பெண்கள் எண்ணிக்கை உள்ளது என்று ஐஏஎம்ஏஐ அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இந்திய இணையம், செல்பேசி நிறுவனங்கள் இணையம்-ஐஏஎம்ஏஐ, காந்தார் சந்தை நிறுவனம் ஆகியவை இணைந்து 2024ஆம் ஆண்டில் இணையப் பயன்பாடு எப்படி என்பது குறித்து வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளன. அதில் இணையப் பயன்பாட்டில் பல்வேறு புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன.
டிஜிட்டல் ஊடகங்களில் வட்டார, மாநில மொழிகள் எனப்படும் தேசிய இன மொழிகளில் வெளியிடப்படும் உள்ளடக்கத்தையே பயனாளர்கள் விரும்புகின்றனர் என்பதும் உறுதியாகியுள்ளது.
ஒட்டுமொத்த பயனாளர்களில் 98 சதவீதம் பேர் இந்திய மொழிகளிலேயே இணைய உள்ளடக்கத்தை கவனிக்கின்றனர். குறிப்பாக, தமிழ்,தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இணைய உள்ளடக்கப் பார்வையாளர்கள் அதிகரித்துள்ளனர் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டில் இந்தியாவில் 88.6 கோடி பேருக்கும் மேல் இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
சராசரியாக ஆண்டுக்கு எட்டு சதவீதம் பேர் என இந்த அளவு அதிகரித்துவருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, நகரங்களைவிடஊரகப் பகுதிகளில் இணையப் பயன்பாட்டாளர்கள் கூடியுள்ளனர். மொத்தத்தில் 55 சதவீதம் பேர் அதாவது 48.8 கோடி பேர் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர் என்கிறது இந்தப் புள்ளிவிவரம்.
நகரப் பகுதிகளிலும்கூட 57 சதவீதம் பேர் அந்தந்தத் தேசிய இன மொழிகளிலேயே உள்ளடக்கத்தை கவனிக்கின்றனர் என்றும் எழுத்து, காணொலி, ஒலி என அனைத்து தளங்களிலும் இந்த வட்டார மொழிகள் எனப்படும் உள்ளூர் மொழிகளிலேயே எல்லாவற்றையும் பயன்பாட்டாளர்கள் எதிர்பார்ப்பது அதிகரித்துவருகிறது என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.