தமிழ்நாட்டின் முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய முதல்வர் மு.க. ஸ்டாலினின் பதிவை நீக்கியது குறித்து இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த இக்னேசியஸ் டெலோஸ் ஃபுளோரா மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றதாக ராணுவத்தின் வடக்கு தலைமையகம் புதன்கிழமை ட்விட்டரில் செய்தி வெளியிட்டிருந்தது. அந்த ட்வீட்டை மறுபகிர்வு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் மறுபகிர்வு செய்த ட்வீட்டை ராணுவத்தின் வடக்கு தலைமையகம் நீக்கியது. இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், முதல் பெண் ஜெனரல் குறித்த செய்தியை ராணுவத் தலைமையகம் பகிர்வதற்கு முன்னதாகவே வடக்கு தலைமையகம் பகிர்ந்ததால் ட்வீட் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது ராணுவ தலைமையகம் பகிர்ந்த ட்வீட்டை வடக்கு பிராந்திய தலைமையகம் மறுபகிர்வு செய்துள்ளது.