ஒட்டுக்கேட்பு: எதிர்க்கட்சியினர் புகார்; மைய அரசு, ஆப்பிள் விளக்கம்!

ஒட்டுக்கேட்பு: எதிர்க்கட்சியினர் புகார்; மைய அரசு, ஆப்பிள் விளக்கம்!

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுவதாக இன்று பிரச்னை வெடித்தது. இதுகுறித்து மைய அரசின் தகவல்தொடர்புத் துறையும் ஆப்பிள் நிறுவனமும் விளக்கம் அளித்துள்ளன.

முன்னதாக, உத்தவ்பால்தாக்கரே சிவசேனையின் பிரியங்கா சதுர்வேதி, திரிணமூல் காங்கிரசின் மகுவா மொய்த்ரா, ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா, காங்கிரஸ் கட்சியின் சசிதரூர், அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் பவன் கெரா ஆகியோரின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுகிறது என்று இன்று காலை தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் இராகுல்காந்தியும் இப்பிரச்னை தொடர்பாக மைய அரசின் மீது குற்றம்சாட்டினார்.

அரசுத்தரப்பிலான ஊடுருவல் முயற்சிகள் நடக்கும் என ஆப்பிள் நிறுவனம் ஐபோன் வாடிக்கையாளர்களான எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு தகவல் அனுப்பியிருந்ததையும் அவர் குறிப்பிட்டார்.

இது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியதை அடுத்து, மைய அரசின் தகவல்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில எச்சரிக்கைகள் தவறாக இருக்கவும் வாய்ப்பு உண்டு என்றும் இப்படியான எச்சரிக்கைகளை எதன் காரணமாக தாங்கள் வெளியிட நேர்ந்தது என்பதைச் சொல்லமுடியாது என்றும் அதைவைத்து அரசுத்தரப்பிலான ஊடுருவல்காரர்கள் அடுத்து விழிப்பாகச் செயல்பட உதவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com