தி.மு.க. தலைவர்களின் கருத்துகளில் உடன்பாடு இல்லை- காங்கிரஸ் பவன்கெரா
சனாதன சர்ச்சையில் தி.மு.க. தலைவர்களின் கருத்துகளில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை என்று பவன் கெரா விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதியின் சனாதனப் பேச்சு சர்ச்சை ஆனதையடுத்து, பாஜக- திமுக தரப்பினர் எதிர்ப்புப் போராட்டங்களிலும் புகார் தருவதிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் உதயநிதியின் பேச்சை ஆதரித்து முன்னாள் மைய அமைச்சர் ஆ.இராசாவும் அதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினும் கருத்து தெரிவித்தனர்.
இந்த விவகாரம் பெரிதாகிவரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் பவன் கெரா டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ காங்கிரஸ் கட்சி எப்போதும் அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை அளிக்கவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அனைத்து மதங்கள், நம்பிக்கைகளுக்கும் இடம் அளிக்கப்பட வேண்டும். சனாதன எதிர்ப்புக் கருத்துகளில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை. காங்கிரசின் வரலாற்றை அறிந்தவர்கள் எப்போதும் இதே நிலைப்பாட்டைத்தான் கடைப்பிடித்து வருகிறோம் என்பதை அறிவார்கள்.” என்று பவன் கெரா கூறினார்.