மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 27 இடங்களில் வெற்றிபெற்ற மிசோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்துகோமா முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.
இந்தத் தேர்தலில், ஆளும் மிசோ தேசிய முன்னணிக்கு பத்து இடங்களே கிடைத்தன. பா.ஜ.க. 2 இடங்களிலும் காங்கிரஸ் ஓரிடத்திலும் மட்டுமே வெல்லமுடிந்தது.
முதலமைச்சராகப் பதவியேற்கும் லாதுகோமா, கோவாவில் இந்திய காவல் பணி -ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தார். பின்னர் பிரதமராக இருந்த இந்திராகாந்தியின் பாதுகாப்புப் படை அதிகாரியாக மாற்றப்பட்டார்.
1984ஆம் ஆண்டில் மக்களவை உறுப்பினராக ஆனதன் மூலம் அரசியலில் அடியெடுத்துவைத்த லால்துகோமா, நாட்டிலேயே முதலில் தகுதியிழப்பு செய்யப்பட்டவராகவும் பெயர் பெற்றார்.
உட்கட்சிப் பிரச்னையால் 1986ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.
சோரம் மக்கள் இயக்கத்தை 2017இல் தொடங்கி சட்டப்பேரவையில் போட்டியிட்டார். மீண்டும் 2020ஆம் ஆண்டில் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்தும் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
ஆனாலும் அடுத்த ஆண்டில் செர்ச்சிப்பில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவர் வெற்றிபெற்றார். அதேதொகுதியில் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள லால்துகோமா,தன் 73ஆவது வயதில் மிசோரம் முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.
அவரின் சோரம் தேசியவாதக் கட்சி உட்பட மாநில அளவிலான ஆறு கட்சிகளின் கூட்டுதான், சோரம் மக்கள் இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.