’அமலாக்கத் துறை சோதனை அசிங்கமான அரசியல் விளையாட்டு’- மமதா சீறல்!
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள இராஜஸ்தான் மாநிலத்தில் அமலாக்கத் துறையின் நடவடிக்கை அசிங்கமான அரசியல் விளையாட்டு என மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கடுமையாகச் சாடியுள்ளார்.
நேற்று மேற்குவங்கத்திலும் இராஜஸ்தானிலும் அமலாக்கத் துறையினர் தேடுதல் சோதனை நடத்தினர். மேற்குவங்க வனம்- புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் ஜோதிப்பிரியா முல்லிக்கின் இல்லத்திலும், இராஜஸ்தானில் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தொடஸ்ராவின் ஜெய்ப்பூர், சிகாரில் உள்ள வீட்டிலும் அமலாக்கத் துறை தேடுதல்சோதனைகளை மேற்கொண்டது. அத்துடன், இராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டுக்கு அந்நியச் செலாவணி மோசடி தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வருமாறு அழைப்பாணையும் அனுப்பப்பட்டது.
இதுகுறித்து கருத்துத்தெரிவித்த மமதா பானர்ஜி, “ பா.ஜ.க. அரசியல்ரீதியாக எதிராளிகளை எதிர்கொள்ள வேண்டும். அசோக் கெலாட் என்னுடைய கட்சிக்காரர் அல்ல என்றாலும், தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அவருடைய மகனின் வீட்டில் ஏன் தேடுதல்சோதனை நடத்துகிறீர்கள் எனக் கேட்கிறேன். சரியாக தேர்தலுக்கு முன்னால் மட்டும் அவர்கள் இப்படி சோதனைகளை நடத்துகிறார்கள். நாட்டில் கூட்டாட்சி முறை அழிக்கப்படக்கூடாது என்பதை பிரதமர் மோடி உறுதிப்படுத்த வேண்டும்.” என்று கூறியுள்ளார்.